Published:Updated:

`பிஎம்கேர்ஸ் அரசு அமைப்பு அல்ல!’ - சட்ட மாணவரின் RTI கேள்விக்கு பதிலளிக்க மறுத்த பிரதமர் அலுவலகம்

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

``பிஎம்கேர்ஸ்க்கு பிரதமர்தான் தலைவராக உள்ளார். மேலும், மூன்று அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக இருந்து வருகின்றனர். முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் இதில் பங்கு வகிப்பதால் இது பொது அதிகாரத்தின் கீழ்தான் வரும் என்றும் கூறப்படுகிறது.”

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசானது கடந்த மார்ச் மாதம் முதல் நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால், பொருளாதார நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளன. எனவே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படும் வகையில் மக்கள் அனைவரும் `பிஎம்கேர்ஸ்’க்கு நிவாரண நிதிகளை அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். பிரபலங்கள் உட்பட பலரும் தங்களால் முடிந்த நிதிகளை அளித்து வந்தனர். இந்த நிலையில், பிஎம்கேர்ஸ் தொடர்பான தகவல்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வழியாக ஒருவர் கேட்டபோது பிரதமர் அலுவலகம் தகவல்களைத் தர மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

பிஎம்கேர்ஸ்
பிஎம்கேர்ஸ்

பெங்களூரில் உள்ள அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சட்டம் பயிலும் மாணவரான ஹர்ஷா கந்துகுரி, குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரணம் தொடர்பான விவரங்களைக் கோரி கடந்த ஏப்ரல் மாதம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விண்ணப்பித்துள்ளார். அந்த விண்ணப்பத்தில், பிஎம்கேர்ஸ் உருவாக்கப்பட்டதன் குறிக்கோள்கள், இந்த பிஎம்கேர்ஸ் உருவாக்கம் தொடர்பான அரசாங்க உத்தரவுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த தகவல்களைக் கேட்டுள்ளார். அவர் விண்ணப்பத்து 30 நாள்கள் ஆகியும் எந்தவொரு பதிலும் அளிக்கப்படவில்லை என்றும் மேல்முறையீடு செய்த பின்னரே பிரதமர் அலுவலகம் தகவல் அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

`என் செயலில் குறைபாடு இருக்கலாம்.. ஆனால்?’ - நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி கடிதம்

இந்த விண்ணப்பம் தொடர்பாக பிரதமர் அலுவலகம் அளித்துள்ள பதிலில், ``தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 2 (ஹெச்)-ன் கீழ் பிஎம்கேர்ஸ் நிதி ஒரு பொது அமைப்பு அல்ல” என்று கூறியுள்ளது. எனினும், இதுதொடர்பான தகவல்களை pmcares.gov.in என்ற இணையதளத்தில் காணலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம் தேவையான தகவல்கள் தர மறுத்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் சட்ட மாணவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
ANI

பிஎம்கேர்ஸ்க்கு பிரதமர்தான் தலைவராக உள்ளார். மேலும், மூன்று அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக இருந்து வருகின்றனர். முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள், இதில் பங்கு வகிப்பதால் இது பொது அதிகாரத்தின் கீழ்தான் வரும் என்றும் கூறப்படுகிறது. பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண அமைப்பு ஏற்கெனவே இருக்கையில் பிஎம்கேர்ஸ்-ஐ உருவாக்க வேண்டிய அவசியம் குறித்தும் பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இதையடுத்து, நிதிதொடர்பான வெளிப்படைத்தன்மை மற்றும் சந்தேகங்கள் குறித்தும் தங்களது அதிருப்திகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

`கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்... பிரதமர் மோடியின் செல்வாக்கு உயர்வு!’- அமெரிக்க ஊடகம் புகழாரம்
அடுத்த கட்டுரைக்கு