Published:Updated:

`இதைக் கூறவே எனக்கு மிகப் பெருமையாக உள்ளது!’ - மன்கி பாத் உரையில் நெகிழ்ந்த பிரதமர் #Corona

மோடி
மோடி

மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையான இன்று மன்கி பாத் மூலம் கொரொனா பற்றி நாட்டு மக்களிடம் உரையாடினார் பிரதமர் மோடி.

இந்தியாவில் கொரோனா பரவலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசுடன் இணைந்து அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்கிடையே மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன்கி பாத் வானொலி உரைமூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். அந்தவகையில் கடந்த மாதம் கொரோனா வைரஸ் பற்றி பேசினார். ஒரு மாதமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரண்டாவது முறையாக மன்கி பாத்தில் கொரோனா பற்றிப் பேசியுள்ளார் பிரதமர் மோடி.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

அதில் பேசிய பிரதமர், ``கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போர் மக்களால் நடத்தப்படுகிறது. இந்தப் போரில் ஒவ்வொரு குடிமகனும் முன் வரிசையில் நிற்கும் சிப்பாய் போலப் போராடுகிறார்கள். கொரோனா விவகாரத்தில் இந்தியா ஒற்றுமையாக இருக்கிறது. ஊரடங்கு காலத்தில் நாட்டின் மூலை முடுக்கில் உள்ள மக்கள் மற்றவர்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர். இந்த நேரத்தில் உயிரைப் பணையம் வைத்து நாட்டுக்காக உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் இன்னும் பிற பணியாளர்கள் போன்ற அனைவருக்கும் நான் பெரும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர்களின் அயராத பணி பாராட்டுக்குரியது. அனைத்து கொரோனா போராளிகளுக்கும் சல்யூட். அதேபோல் இந்த நேரத்தில் கடுமையாக உழைக்கும் விவசாயிகள், வாடகைகளைத் தள்ளுபடி செய்த நில உரிமையாளர்கள், பரிசு மற்றும் ஓய்வூதியத்தைப் பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கியவர்கள் போன்ற அனைவருக்கும் மத்திய அரசு சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

கொரோனா யுத்தம்: பிரதமர் மோடி முதலிடம்!- `மார்னிங் கன்சல்ட்' கருத்துக்கணிப்பு... மக்கள் கருத்து என்ன?

மக்களின் தன்னலமற்ற இதுபோன்ற செயல்கள்தான் தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதற்கான வலிமையை இந்தியாவுக்கு அளிக்கின்றன. அரசு உருவாக்கியுள்ள covidwarriors.gov.in என்ற இணையதளம், கொரோனாவுக்கு எதிராகப் போராடும் அனைத்து தன்னார்வலர்களையும் ஒன்றிணைத்துள்ளது. இதன் மூலம் பலர் மக்களுக்கு உதவ முன்வருகிறார்கள். பிற மக்களும் இதில் தங்களை இணைத்துக்கொண்டு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கொரோனா
கொரோனா

ஒவ்வொரு போரும் நமக்கு ஏதாவது ஒன்றைக் கற்பித்து பல புதிய வாய்ப்புகளை வழங்குகிறது. அப்படி இந்த யுத்தம் நமக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களைக் கற்றுத்தந்துள்ளது. இந்தக் கடுமையான சூழலில் ஒவ்வோர் ஆராய்ச்சியாளரும் நமக்கு உதவக்கூடிய ஏதாவது ஒன்றை செய்கிறார்கள். ஏழைகளுக்கு அத்தியாவசிய பொருள்களை வழங்குவதை உறுதி செய்யும் மாநில அரசுகள், விமானத்துறை அதிகாரிகள், ரயில்வே மற்றும் காவல்துறையினருக்கு நான் நன்றி கூறுகிறேன்.

தினசரி நம் வாழ்க்கை எளிதாக்கும் அனைவரையும் பாராட்ட கற்றுக்கொண்டுள்ளோம். நம் சாலைகளைச் சுத்தம் செய்பவர்கள், குப்பை சேகரிப்பவர்கள், காய்கறி விற்பனையாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் போன்ற அனைவரும் தங்கள் வேலைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பூ தூவி மக்கள் அவர்களைப் பெருமைப்படுத்தும் புகைப்படங்களைப் பார்த்து நாம் மகிழ்ச்சியடைந்தேன்.

மோடி, ட்ரம்ப்... முகநூலில் தலைவர்களைப் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு! -என்ன காரணம்?

தேவைப்படும் நேரத்தில் உதவுவதுதான் இந்தியாவின் கலாசாரம். இந்தக் கடினமான நேரத்தில் பல நாடுகளுக்கு அத்தியாவசிய மருந்து பொருள்களை நாம் வழங்கி வருகிறோம். இதற்காக உலக தலைவர்கள் என்னை போனில் தொடர்புகொண்டு `இந்தியாவுக்கு நன்றி’ எனத் தெரிவித்து வருகின்றனர். இதைச் சொல்லும்போதே எனக்குப் பெருமையாக உள்ளது. கொரோனா நேரத்தில் இந்தியாவின் யோகா மற்றும் ஆயுர்வேத முறைகள் வெளிநாட்டில் பாராட்டைப் பெற்றுள்ளன.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

முகமூடி அணிவது, முகத்தை மூடிக்கொண்டு வெளியில் செல்வது போன்றவை வருங்காலத்தில் அத்தியாவசியமாக மாறும். அதேபோல் பொது இடங்களில் எச்சில் துப்புவதன் மூலம் விளைவிக்கும் தீங்கு பற்றி மக்கள் தற்போது அறிந்துகொண்டுள்ளனர். இந்தப் பழக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நேரம் வந்துவிட்டது. பொது இடங்களில் துப்பும் பழக்கத்தை மக்கள் விட வேண்டும். இது கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடவும், நம் ஒட்டுமொத்த சுகாதாரத்தை மேம்படுத்தவும் உதவும். இன்று அக்‌ஷய திரிதியை. `அக்‌ஷய்’ என்றால் ஒருபோதும் அழிக்க முடியாதது, நமது பூமியை `அக்‌ஷய்’ ஆக்குவோம் என்ற உறுதிமொழியை இந்த நல்ல நாளில் எடுத்துக்கொள்வோம்.

`இந்தியாவில் 8 நாளில் 10,000 பேர்..!’- மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தும் பிரதமர் மோடி #Corona

இது ரம்ஜான் மாதமும் கூட. அனைவரும் வீட்டுக்குள்ளேயே தங்கி சமூக இடைவெளியைப் பின்பற்றி நிலைமையை மேம்படுத்துவதில் பணியாற்றுவோம். இதன் மூலம் நம்முடைய அன்புரியவர்களுடன் சரியான முறையில் ஈத் பண்டிகையைக் கொண்டாட முடியும். நம் வீடு, அலுவலகங்களில் யாருக்கும் வைரஸ் இல்லை என்றால் இனி வரவே வராது என அர்த்தமல்ல. பிறரின் தவறுகளிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். நெருப்பையும் கடனையும் மிச்சம் வைக்கக் கூடாது, அதை முற்றிலுமாக அணைக்க வேண்டும் என முன்னோர்கள் நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளனர். நம்மையும் நாட்டையும் முழுமையாக குணப்படுத்த வேண்டும்” எனப் பேசியுள்ளார் பிரதமர்.

அடுத்த கட்டுரைக்கு