Published:Updated:

`பங்கேற்காத பினராயி; 9 பேருக்கு மட்டுமே பேச அனுமதி!’ -முதல்வர்களுடன் 3-வது முறையாக பிரதமர் ஆலோசனை

ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம் ( ANI )

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுவது தொடர்பாக மூன்றாவது முறையாக இன்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவில், வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதுவரை தேசிய அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,892 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 872-ஆகவும் உள்ளது. மேலும், வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6284 -ஆக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வ இணையப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்
ANI

இந்தியாவில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25-ம் தேதி முதல்கட்டமாக 21 நாள்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போதும் வைரஸ் பரவலின் தாக்கம் குறையாததால் இதே ஊரடங்கு இரண்டாம் கட்டமாக மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த ஊரடங்கும் விரைவில் முடியவுள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை நடத்த இன்று காலை அனைத்து மாநில முதல்வர்களுடனும் வீடியோ கான்ஃபரன்ஸில் ஆலோசனை நடத்தினார் பிரதமர் மோடி.

அனுமதி அட்டைகள்... பத்திரப் பதிவுத்துறையினரின் அச்சம்... தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு  குளறுபடிகள்!

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் நிலை, அவர்கள் எடுத்து வரும் நடவடிக்கைகள், ஊரடங்கை நீட்டிப்பது போன்ற பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இன்று நடந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்துக்கு முன்னதாகவே தங்கள் மாநிலத்தின் நிலைமை, செயல்பாடு மற்றும் பரிந்துரை ஆகியவை கடிதம் மூலம் பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கூட்டத்தில் கேரளா சார்பாக அம்மாநிலத்தின் தலைமைச் செயலாளர் பங்கேற்றுள்ளார்.

பிரதமர் ஆலோசனைக் கூட்டம்
பிரதமர் ஆலோசனைக் கூட்டம்
ANI

ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் தெளிவான திட்டத்தை மதிப்பாய்வு செய்வதே கூட்டத்தின் முக்கிய நோக்கம். நேரக் குறைவு காரணமாக 9 மாநில முதல்வர்களுக்கு மட்டுமே பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி பீகார், ஒடிசா, குஜராத், ஹரியானா, உத்தரகண்ட் மற்றும் ஹிமாசல பிரதேசம் மற்றும் புதுச்சேரி மத்திய பிரதேச முதலமைச்சர்கள் பேசியுள்ளனர். மீதமுள்ள மாநில முதல்வர்கள் தங்கள் பரிந்துரையை எழுத்து வடிவில் பிரதமருக்கு அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா யுத்தம்: பிரதமர் மோடி முதலிடம்!- `மார்னிங் கன்சல்ட்' கருத்துக்கணிப்பு... மக்கள் கருத்து என்ன?

பெரும்பாலும் அனைத்து மாநில முதல்வர்களும் ஊரடங்கை, நீட்டித்து அனைத்து மாநில எல்லைகளும் மூடியே இருக்க வேண்டும் என்பதையே அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் பிரதமர் அலுவலக முக்கிய அதிகாரிகள் போன்ற பலர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த வார இறுதிக்குள் நான்காவது முறையாக நாட்டு மக்களுடன் பிரதமர் உரையாற்றவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும் சில தளர்வுகள் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு