Published:Updated:

`முதற்கட்டமாக 3 கோடி; அடுத்து 30 கோடி!’ - பிரமாண்ட தடுப்பூசித் திட்டத்தைத் தொடங்கிவைத்த பிரதமர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தடுப்பூசி திட்டம்! - பிரதமர் மோடி
தடுப்பூசி திட்டம்! - பிரதமர் மோடி

``பொதுவாக, ஒரு தடுப்பூசி தயாரிக்க பல ஆண்டுகள் ஆகும். ஆனால், இவ்வளவு குறுகியகாலத்தில், ஒன்று அல்ல, இரண்டு `மேட் இன் இந்தியா' தடுப்பூசிகள் தயாராக உள்ளன. இதற்கிடையில், பிற தடுப்பூசிகளுக்கான பணிகள் வேகமாக முன்னேறிவருகின்றன” - பிரதமர் மோடி

2020-ம் ஆண்டு முழுவதையும் கொரோனா வைரஸ் எடுத்துக்கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதேநேரத்தில், 2021-ம் ஆண்டில் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசிகள் தயார்நிலையில் இருக்கின்றன. நாடு முழுதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை, பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைக்கிறார். இதைத் தொடர்ந்து தடுப்பூசி போடுவதற்கான வழிகாட்டுதல்களை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது.

கொரோனா
கொரோனா

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும், 'ஆஸ்ட்ராஜெனகா' நிறுவனம் இணைந்து, 'கோவிஷீல்டு' என்ற தடுப்பூசியை தயாரித்துள்ளன. இந்தத் தடுப்பூசியை இந்தியாவில், புனேவைச் சேர்ந்த, 'சீரம்' இந்தியா நிறுவனம் உற்பத்தி செய்கிறது. `பாரத் பயோடெக்' நிறுவனம், 'கோவாக்ஸின்' எனப்படும் தடுப்பூசியை, உள்நாட்டிலேயே உருவாக்கியிருக்கிறது.

உலகின் மிக பிரமாண்டமான தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் தொடங்கிவைத்தார். முதற்கட்டமாக, ஒரு கோடி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இரண்டு கோடி முன்களப் பணியாளர்களுக்கு இந்தத் தடுப்பூசியை, மத்திய அரசு இலவசமாகப் போடுகிறது. 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே, தடுப்பூசி போட வேண்டும். கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடக் கூடாது போன்ற வழிமுறைகளையும் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கிறது.

மோடி
மோடி

முதல் நாளில், 2,934 மையங்களில், மூன்று லட்சம் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை முதல்வர்பழனிசாமி மதுரையில் தடுப்பூசி திட்டத்தைத் தொடங்கிவைக்கிறார்.

திட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசிய பிரதமர், ``தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்று எல்லோரும் கேட்டுக்கொண்டிருந்தார்கள். இது இப்போது கிடைக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் அனைத்து நாட்டு மக்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பொதுவாக, ஒரு தடுப்பூசி தயாரிக்க பல ஆண்டுகள் ஆகும். ஆனால், இவ்வளவு குறுகியகாலத்தில் ஒன்றல்ல, இரண்டு 'மேட் இன் இந்தியா' தடுப்பூசிகள் தயாராக உள்ளன. இதற்கிடையில், பிற தடுப்பூசிகளுக்கான பணிகள் வேகமாக முன்னேறிவருகின்றன” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து பேசிய மோடி, ``கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் மிகவும் முக்கியமானவை என்பதை நாட்டின் மக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இரண்டு டோஸ்களுக்கு இடையில் ஒரு மாத இடைவெளி இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். முதல் டோஸ் போட்ட பிறகு, மாஸ்க் இல்லாமலோ, சமூக இடைவெளியைப் பின்பற்றாமலோ இருந்துவிட வேண்டாம். ஏனெனில், இரண்டாவது டோஸுக்குப் பிறகுதான் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது.

இவ்வளவு பெரிய அளவில் ஒரு தடுப்பூசித் திட்டம் வரலாற்றில் ஒருபோதும் நடத்தப்படவில்லை. மூன்று கோடிக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகள் இருக்கின்றன. முதற்கட்டத்திலேயே மூன்று கோடி மக்களுக்கு இந்தியா தடுப்பூசி போடுகிறது. இரண்டாம்கட்டத்தில், இந்த எண்ணிக்கை 30 கோடியாக இருக்க வேண்டும்” என்றார்.

மேலும், ``இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை. வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளுக்கு எந்தவிதத்திலும் தரத்தில் இவை குறைந்தவை அல்ல. தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும், கொரோனாவுக்கு எதிரான நமது போராட்டம் தொடரும். இந்தியா தயாரித்திருக்கும் தடுப்பூசிகள் இந்திய காலச் சூழலுக்கு ஏற்றவை. சரியான நேரத்தில் நமக்கு தடுப்பூசி கிடைத்திருக்கிறது. முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை என்பது நாம் அவர்களுக்குச் செய்யும் மரியாதை” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு