Published:Updated:

`தேர்வு முடிவுகள் வாழ்க்கையைத் தீர்மானிக்காது!' - கேப்டன் வருண் கடிதத்தைக் குறிப்பிட்டுப் பேசிய மோடி

பிரதமர் மோடி
News
பிரதமர் மோடி

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து, அவரின் வீரம் மற்றும் தன்னம்பிக்கை குறித்து நெகிழ்ந்து பேசினார்.

டிசம்பர் 8-ம் தேதி, முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி மதுலிகா உட்பட 14 ராணுவ வீரர்கள் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்தில் சிக்கியது. அதில், பிபின் ராவத் உட்பட 13 பேர் அன்றைய தினமே பரிதாபமாக இறந்தனர். பலத்த தீக்காயங்களுடன் உயிர் தப்பிய குரூப் கேப்டன் வருண் சிங், சுமார் ஒரு வாரகாலம் உயிருக்குப் போராடி சிகிச்சைப் பலனின்றி கடந்த 15-ம் தேதி உயிரிழந்தார். இந்த கோர விபத்து நாட்டு மக்கள் அனைவரையும் பேரதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியது.

வருண் சிங்
வருண் சிங்

இந்த நிலையில், மிகவும் உறுதியாகக் கடைசி மூச்சு வரை மரணத்துடன் போராடிய குரூப் கேப்டன் வருண் சிங்குக்கு இந்த வருடத்தின் கடைசி மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து, அவரின் வீரம் மற்றும் தன்னம்பிக்கை குறித்து நெகிழ்ந்து பேசினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மோடி
மோடி

84-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர், ``எத்தனை வெற்றிகளைக் குவித்தாலும், எந்த இடத்துக்குச் சென்றாலும், வந்த இடம் மறக்காதவர் தான் நம்முடைய கேப்டன் வருண் சிங். வருண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருக்கும்போது, சமூக வலைதளத்தில் ஒரு பதிவை நான் காண நேர்ந்தது. ஆகஸ்ட் மாதம் வருண் சிங்குக்கு 'சௌரிய சக்ரா விருது' அளிக்கப்பட்டது.

அப்போது, விருது வாங்கிய கையோடு, தன் பள்ளி முதல்வருக்குக் கடிதம் எழுதுகிறார் கேப்டன் வருண். அந்தக் கடிதத்தைப் படித்தவுடன், நான் அவரிடமிருந்து இரண்டு முக்கியமான விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். ஒன்று, வெற்றி அடைந்தவுடன் நாம் நம்முடைய வேரை மறந்து விடக்கூடாது. மற்றொன்று, அவர் நினைத்திருந்தால் தன் வெற்றியை எப்படி வேண்டுமானாலும் கொண்டாடியிருக்கலாம். ஆனால், அவர் தான் படித்த பள்ளியில் மாணவர்களுடன் கொண்டாட வேண்டும் என்று நினைத்திருக்கிறார்" என்றார்.

மேலும் பிரதமர் அந்தக் கடித்ததில் கேப்டன் வருண் சிங் மாணவர்களுக்கு எழுதியிருந்ததைப் படித்துக் காட்டினார். ``நான் பள்ளியில் படிக்கும் போது ஒரு சாதாரண மாணவன் தான். எல்லோராலும் நன்றாகப் படிக்க முடியாது. எல்லோராலும் 90 மதிப்பெண்கள் எடுக்க முடியாது. அதை நீங்கள் செய்தால் அது கண்டிப்பாக பாராட்டத்தக்கதே! ஆனால், ஒரு போதும் நான் ஒரு சாதாரண மாணவன் என்ற தாழ்வு மனப்பான்மையை வளரவிடாதீர்கள். நீங்கள் பள்ளிப்படிப்பில் ஒரு சாதாரண மாணவனாக இருக்கலாம்.

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
கோப்புப் படம்

ஆனால் வாழ்க்கையில் உங்களுக்கானதென ஒன்று இருக்கும். அது விளையாட்டாக இருக்கலாம், கலையாக இருக்கலாம், இசையாக இருக்கலாம், கிராஃபிக்ஸ் டிசைனாக கூட இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அதில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் முழு உழைப்பைப் போடுங்கள். நீங்கள் ஒருபோதும் படுக்கச் செல்லும் போது இன்னும் கொஞ்சம் உழைப்பைப் போட்டிருக்கலாமோ என்று எண்ணக்கூடாத அளவுக்கு உழைக்க வேண்டும்.

ஒருபோதும் உங்கள் நம்பிக்கையைக் கைவிட்டு விடாதீர்கள். உங்களுக்குப் பிடித்த துறையிலேயே உங்களால் மேலே வர முடியவில்லை என்றாலும், ஒருபோதும் மனதைத் தளரவிடாமல் தொடர்ந்து முன் செல்லுங்கள். வெற்றி எளிதாகக் கிடைத்து விடாது, அதை அடையப் பல கடின உழைப்பும், நேரமும், பல தியாகங்களும் செய்ய வேண்டும். நானும் பள்ளியில் படிக்கும் போது ஒரு சாதாரண மாணவன் தான். ஆனால் இன்று என்னுடைய துறையில் நான் பல மைல்கற்களைத் தாண்டியிருக்கிறேன். 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்காது. உங்கள் மீது நம்பிக்கை வைத்து, உழைக்க ஆரம்பியுங்கள். இந்தக் கடிதத்தைப் படித்து ஒரு மாணவன் மனம் மாறினாலும் அது எனக்கு போதும்' என்று வருண் அதில் குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதத்தை கேப்டன், அவர் மாணவர்களுக்குத் தான் எழுதினார், ஆனால் அது இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்து விட்டது" என்று மனம் நெகிழ்ந்தார்.