Published:Updated:

`அனைத்து விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்!’- துறைவாரியாக ஆய்வு நடத்தும் மோடி

மோடி அமைச்சரவைக் கூட்டம்
மோடி அமைச்சரவைக் கூட்டம் ( - )

ஃபாஸ்ட் டேக் திட்டத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இடர்பாடுகள் ஏற்படுவதாக, பிரதமர் அலுவலகத்துக்கு புகார்கள் குவிந்து வருகின்றன.

துறைவாரியாக ஆய்வுக் கூட்டங்களை நடத்திவரும் பிரதமர் மோடி, கடந்த ஆறு மாதங்களில், அந்தந்தத் துறைகள் செய்த திட்டப் பணிகளின் விவரங்களைக் கேட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் ஒருவர், "பா.ஜ.க இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள இந்த ஆறு மாதங்களில், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளது. ஆனால் மத்திய அமைச்சர்களில் சிலர், தாம் எதிர்பார்த்த வேகத்தில் பணியாற்றவில்லை எனப் பிரதமர் மோடி கருதுகிறார். கடந்த சில வாரங்களாகத் துறைரீதியாக ஆய்வுக் கூட்டங்களை பிரதமர் நடத்திவருகிறார்.

மோடி அமைச்சரவைக் கூட்டம்
மோடி அமைச்சரவைக் கூட்டம்

துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அத்திட்டத்தால் பயனடைந்தவர்களின் விவரம், ஒதுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட தொகை உள்ளிட்ட விவரங்களைத் தொகுப்பாக சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார். சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறையில், ‘ஃபாஸ்ட் டேக்’ எனப்படும் மின்னணு கட்டண வசூல் முறை டோல்கேட்டுகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இடர்பாடுகள் ஏற்படுவதாக பிரதமர் அலுவலகத்துக்கு புகார்கள் குவிந்துவருகின்றன. இத்திட்டத்தின் செயல்பாடுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு, அந்தத் துறைக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்” என்றார்.

அம்பானி, அதானி, டாடா..! - பட்ஜெட்டுக்கு முன் தொழிலதிபர்களைச் சந்தித்த மோடி

வரும் பிப்ரவரி மாதம், பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இதற்குள்ளாக, ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, செயல்படாத துறைகளில் இருக்கும் சிக்கல்களைக் களைய முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.

- கௌசிகா.

அடுத்த கட்டுரைக்கு