Published:Updated:

`ஏப்ரல் 5, முக்கியமான நாள்; 9 நிமிடங்களுக்கு மின் விளக்கை அணையுங்கள்’- பிரதமர் மோடியின் வேண்டுகோள்

மோடி
மோடி

இந்தியாவில் வைரஸ் பரவலின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் மூன்றாவது முறையாக நாட்டு மக்களிடம் பேசியுள்ளார் பிரதமர் மோடி.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இங்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதும் அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்தார் பிரதமர் மோடி. இதற்கிடையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்தியாவில் வைரஸ் பரவலின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் 2,512 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்த இக்கட்டான சூழலில் வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார் பிரதமர் மோடி. இந்நிலையில் கொரோனா தொடர்பாக நாட்டில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், விழிப்புணர்வு எனக் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து மக்களிடம் உரையாடி வரும் பிரதமர், இன்றும் மூன்றாவது முறையாக நாட்டு மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் பேசியுள்ள மோடி, ``அனைத்து மக்களுக்கும் வணக்கம். தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 10-வது நாள் இன்று. மக்கள் ஒன்று கூடி கொரோனாவை எதிர்த்துப் போராடத் தீர்மானித்துள்ளனர். இது மிகவும் ஊக்கமளிக்கிறது. ஊரடங்கை மதித்த அனைவருக்கும் என் நன்றிகள். நாடு தற்காலிகத் தடுப்பு நிலையில் உள்ளது. மக்கள் வீடுகளில் இருக்கும்போது எவ்வாறு கொரோனாவுக்கு எதிரான போரில் போராட முடியும் என நம்மில் பலரும் நினைக்கலாம்.

மோடி
மோடி

ஆனால், தயவு செய்து நினைவில் கொள்ளுங்கள் நாம் 130 கோடி மக்கள் வீட்டிலிருந்தாலும் ஒற்றுமையாக இணைந்துதான் உள்ளோம். இங்கு யாரும் தனியாக இல்லை. நாட்டின் பலம் நம் ஒவ்வொருவரிடமும் உள்ளது. அனைத்து குடிமக்களும் ஒவ்வொருவருக்கும் ஆதரவாக நிற்கிறார்கள்.

மார்ச் 22-ம் தேதி கொரோனாவுக்கு எதிராகப் போராடும் மருத்துவர்கள், பணியாளர்களுக்கு நன்றி தெரிக்கும் விதமாக ஜனதா ஊரடங்கில் மக்கள் அனைவரும் மணி அடித்தும் கைதட்டியும் உற்சாகப்படுத்தினீர்கள். இந்தச் செயல் சவாலான நேரத்தில் நம் ஒற்றுமையை நாட்டுக்கு உணர்த்தியது.

அதேபோல் ஏப்ரல் 5-ம் தேதி நமக்கு மிக முக்கியம். அன்று இரவு 9 மணிக்கு சரியாக 9 நிமிடம் வீட்டில் மின் விளக்குகளை அனைத்தைவிட்டு மெழுகுவத்தி, அகல் விளக்கு ஏற்றியும் அல்லது மொபைல் டார்ச் லைட்டை அடித்தும் வீட்டு பால்கனிகளிலும் ஒளியேற்றி வைக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். அதன் மூலம் ஒரு சூப்பர் பவர் உருவாகும். இந்த நிகழ்வின்போது அனைவரும் கட்டாயம் சமூக விலகளைக் கடைப்பிடிக்க வேண்டும். வீடுகளில் மட்டுமே விளக்கு ஏற்றுங்கள். நம் உற்சாகத்துக்கு மேலாக வேறு எந்த சக்தியும் இல்லை" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு