Published:Updated:

பிரதமர் மோடி: `உலக நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம்!’ - குளோபல் வீக் மாநாட்டில் பேச்சு

பிரதமர் மோடி
News
பிரதமர் மோடி

``இந்தியாவில் உள்ள மருந்து நிறுவனங்கள் இந்தியாவுக்கு மட்டுமல்லாது உலக நாடுகளுக்கும் ஒரு சொத்து என்பதை இந்த நெருக்கடியான சூழல் நிரூபித்துள்ளது.” - பிரதமர் மோடி

இந்தியா குளோபல் வீக் 2020 மாநாடு இன்று தொடங்கியது. சர்வதேச அளவில் மூன்று நாள்கள் நடைபெற இருக்கும் இந்த மாநாட்டில் சுமார் 40 நாடுகளைச் சேர்ந்த நபர்கள் பங்கேற்கின்றனர். `மறுமலர்ச்சி இந்தியா மற்றும் சிறந்த புதிய உலகம்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. வைரஸ் பரவலால் கடுமையாகப் பாதிப்படைந்துள்ள உலக மற்றும் இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவது மேம்படுத்துவது தொடர்பாக இந்த மாநாட்டில் விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி இந்த மாநாட்டில் கொரோனா, பொருளாதாரம், முதலீடு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து உரையாற்றினார்.

பொருளாதாரம்
பொருளாதாரம்

பிரதமர் மோடி பேசுகையில், ``உலகளவில் உள்ள அனைத்து நிறுவனங்களும் இந்தியாவில் தங்களது முதலீடுகளைச் செய்ய சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறோம். மிகவும் சில நாடுகள்தான் இந்த மாதிரியான வாய்ப்புகளை வழங்கும். தற்போது இந்தியா அதைச் செய்துள்ளது. சாத்தியமற்றது என்று நம்புவதை அடைய இந்தியர்களுக்கு திறமை இருக்கிறது. உலகளாவிய நன்மை, வளர்ச்சிக்கு இந்தியா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யத் தயாராக உள்ளது. சீர்திருத்தம், செயல்திறன், மாற்றங்களை இந்தியா ஏற்படுத்தி வருகிறது. வர்த்தகம் தொடங்குவது தொடர்பான வழிகளை எளிமையாக்குதல், உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், சரக்கு மற்றும் சேவை வரி உள்ளிட்ட பல சீர்திருத்தங்களைக் கடந்த ஆறு ஆண்டுகளில் செய்து பெரும் லாபத்தை ஈட்டியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கொரோனா ஊரடங்கால் கடுமையாகப் பாதிப்படைந்த மைக்ரோ, சிறு, நடுத்தர, பெரு நிறுவனங்களின் வளர்ச்சிக்காகப் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத்துறை மற்றும் விண்வெளித்துறையில் முதலீடுகளை செய்ய அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன என்றும் தனது உரையில் குறிப்பிட்டு பேசினார்.

``இந்தியாவில் உள்ள மருந்து நிறுவனங்கள் இந்தியாவுக்கு மட்டுமல்லாது உலக நாடுகளுக்கும் ஒரு சொத்து என்பதை இந்த நெருக்கடியான சூழல் நிரூபித்துள்ளது. மருந்துகளின் விலையைக் குறைப்பதில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் உலகில் உள்ள குழந்தைகளில் மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகளுக்கு பயன்படுகிறது. கொரோனா வைரஸ் தொடர்பான தடுப்பூசியைக் கண்டுபிடிக்கவும் உற்பத்தி செய்யவும் இந்திய நிறுவனங்கள் தீவிரமக்ச் செயல்பட்டு வருகின்றன” என்றும் கூறினார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

தொடர்ந்து அவர் பேசுகையில், ``இந்தியர்கள் இயற்கையாகவே சீர்திருத்தவாதிகளாக இருக்கின்றனர். சமூகம் மற்றும் பொருளாதார அளவில் இந்தியா அனைத்துவிதமான சவால்களையும் வென்று வந்துள்ளது என்பதையே வரலாறுகள் காட்டுகின்றன. உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள தொற்றுநோய்க்கு எதிராக இந்தியா கடுமையாக ஒருபுறம் போராடி வருகிறது. மறுபுறம் மக்களின் ஆரோக்கியத்தில் அதிக கவனத்தைச் செலுத்துகிறது. இதற்கு சமமாகப் பொருளாதாரத்தின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த நெருக்கடியான சூழலால் பாதிப்படைந்து மக்களுக்குத் தேவையான உதவிகளையும் அரசு செய்து வருகிறது” என்றும் பேசினார்.

அரசியல், வணிகம், தொழில்நுட்பம், பொருளாதாரம், மருத்துவம், பாதுகாப்பு, கலை மற்றும் கலாசாரம் எனப் பல்வேறு தலைப்புகளில் சுமார் 250 பேச்சாளர்கள் இந்த மாநாட்டில் உரையாற்ற உள்ளனர். பல நாடுகளிலிருந்தும் 5,000-க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இந்தியாவிலிருந்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேச உள்ளதாகக் கூறப்படுகிறது.