Published:Updated:

`மே 3 வரை ஊரடங்கு; 7 வேண்டுகோள்கள்; ஏப்ரல் 20வரை கண்டிப்பு!’ -பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்

பிரதமர் மோடி
News
பிரதமர் மோடி

மே மாதம் 3ம் தேதி வரை தேசிய அளவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

நாடு முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி தேசிய அளவில் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்த ஊரடங்கு இன்றுடன் முடியும் நிலையில், நாட்டு மக்களிடையே அவர் உரையாற்றினார்.

அவர் பேசுகையில், ``கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நம் நாட்டில் முதல் நபர் கொரோனாவில் பாதிக்கப்படுவதற்கு முன்பாகவே, அதனால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளிலிருந்து இந்தியா வந்தவர்களை விமான நிலையங்களில் சோதனை செய்யத் தொடங்கிவிட்டோம்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 550 என்று இருந்தநிலையிலேயே ஊரடங்கு உத்தரவை 21 நாள்கள் அமல்படுத்துவது என்று முடிவெடுத்தோம். பிரச்னை பெரிதாகும் வரையில் நாம் காத்திருக்கவில்லை. அதேநேரம், பிரச்னை தெரிந்ததும் உடனடியாக அதைச் சரிசெய்வதற்கான நடவடிக்கையை எடுத்தோம்.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இதுகுறித்த விரிவான அறிவிப்பு நாளை வெளியாகும்.

சமூக விலகலும் லாக் டௌனும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உதவின. பொருளாதாரரீதியாக அது நமக்கு மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஆனால், நம் மக்களின் உயிர்களை விட எதுவும் பெரிதில்லை. இதை நாம் எப்படி முன்னெடுத்துச் செல்லப் போகிறோம். எப்படி இந்தப் போரில் வெற்றிபெறப் போகிறோம்? மாநில அரசுகளுடன் தொடர்ந்து இதுதொடர்பாக ஆலோசனைகள் நடத்தி தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும். லாக் டௌனை நீட்டிக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமும்.

எழும்பூர் ரவுண்டானாவில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரைந்து வைத்துள்ள காட்சி.
எழும்பூர் ரவுண்டானாவில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரைந்து வைத்துள்ள காட்சி.

ஏப்ரல் 20ம் தேதி வரை கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும். ஹாட்ஸ்பாட் எனப்படும் வைரஸ் பரவல் நிகழ்ந்த இடங்கள் மிகவும் கவனமாகக் கண்காணிக்கப்படும். அதன்பின்னர் வைரஸ் தொற்று ஏற்படாத இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும். கொரோனா வைரஸ் பரவலை நாம் அனுமதிக்கக் கூடாது. அடுத்த ஒருவாரத்துக்கு ஊரடங்கு உத்தரவு கண்டிப்புடன் அமல்படுத்தப்படும். மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்னைகளைக் களைய முழு முயற்சிகளை எடுத்து வருகிறது. அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்றைய சூழலில் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காகவே ஒரு லட்சம் படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்தப்படும் வார்டுகள் மருத்துவமனைகளில் தயாராக இருக்கின்றன. இதுமட்டுமல்லாமல் 600க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் கொரோனாவுக்குச் சிகிச்சையளிப்பதற்காகவே தயார் நிலையில் இருக்கின்றன. சுகாதாரத் துறையின் கட்டமைப்பும் இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை மேம்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த ஜனவரியில் கொரோனா பரிசோதனை செய்ய ஒரு லேப் மட்டுமே இருந்தது. இப்போது 220-க்கும் மேற்பட்ட பரிசோதனை மையங்கள் நாடு முழுவதும் இருக்கின்றன. பொறுமையாக விதிமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுங்கை நிலைநாட்டினால் கொரோனாவுக்கு எதிரான இந்தப் போரில் நாம் வெல்ல முடியும்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கீழ்க்கண்ட 7 வழிமுறைகள் மூலம் நீங்களும் உதவலாம்.

1. உங்கள் வீடுகளில் இருக்கும் மூத்த குடிமக்களை முறையாகப் பராமரித்து அவர்களைப் பார்த்துக் கொள்ளவும். குறிப்பாக உடல்நிலை குறைபாடு கொண்டவர்கள்.

2. லாக் டௌன் மற்றும் சமூக விலகலை முறையாகக் கடைப்பிடியுங்கள். மாஸ்க்குகள் மற்றும் வீடுகளில் தயாரிக்கப்பட்ட முகக் கவசங்களைப் பயன்படுத்துங்கள்.

3. ஆயுஷ் துறை அறிவுறுத்தியதைப் பின்பற்றி உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ளுங்கள்.

4. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஆரோக்கிய சேது செயலியை உங்கள் மொபைல்களில் டவுன்லோடு செய்யுங்கள்.

5. உங்களால் முடிந்தவரை ஏழை, எளிய மக்களுக்கு உதவுங்கள். அவர்களின் உணவுத் தேவையை நிறைவேற்றுங்கள்.

6. தொழில் சார்ந்த இடங்களில் உங்கள் சக தொழிலாளிக்கு உதவுங்கள். முடிந்தவரை யாரையும் பணியை விட்டு நீக்காதீர்கள்.

7. நமது மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், போலீஸார் உள்ளிட்டோருக்கு உரிய மரியாதை கொடுங்கள்.

மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடியுங்கள். விழிப்புடன் இருந்து கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிபெறுவோம்’’ என்று பிரதமர் மோடி பேசினார்.