Published:Updated:

`90 நிமிடக் கலைநிகழ்ச்சிகள்; 3 மணி நேர நிகழ்ச்சி' - `ஹௌடி மோடி' நிகழ்வுக்குத் தயாராகும் ஹூஸ்டன்

அமெரிக்கப் பயணத்தின் முதற்கட்டமாக பிரதமர் மோடி, அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்குச் சென்றடைந்தார்.

Modi in Houston
Modi in Houston ( PIB )

அமெரிக்கச் சுற்றுப்பயணம்

இரண்டாவது முறையாகப் பிரதமர் பதவியேற்ற பின்னர் முதல்முறையாக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, ஹூஸ்டன், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். குறிப்பாக டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் நடைபெறும் `ஹௌடி மோடி' (Howdy Modi) நிகழ்ச்சியில் 50,000 இந்திய - அமெரிக்கர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். இது கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற நியூயார்க்கின் மேடிசன் ஸ்கொயர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகம் என்று சொல்லப்படுகிறது.

Modi in Houston
Modi in Houston
MEA

அமெரிக்காவில் இந்தியர்கள் அதிகம் வாழும் டாப் 10 நகரங்களுள் ஒன்றான ஹூஸ்டனுக்குச் சென்றடைந்த பிரதமர் மோடியை அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்க்லா மற்றும் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் கென்னத் ஜெஸ்டர் ஆகியோர் வரவேற்றனர். பின்னர், முதல்நிகழ்ச்சியாக அமெரிக்காவின் முன்னணி எரிசக்தித் துறை நிறுவனங்களின் தலைமைச் செயலதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

போப்புக்கு அடுத்தபடியாக மோடிக்குத்தானாம்! - 'ஹவுடி மோடி' குறித்து ருசிகரத் தகவல்

அமெரிக்கவாழ் இந்தியர்களுடன் சந்திப்பு

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மோடி, ``அமெரிக்காவின் முன்னணி எரிசக்தி நிறுவனங்களின் தலைமைச் செயலதிகாரிகளுடனான ஆலோசனை சிறப்பாக அமைந்தது. ஹூஸ்டன் நகருக்கு வந்துவிட்டு எரிசக்தித் துறை குறித்து ஆலோசிக்காமல் இருக்க முடியாது'' என்று பதிவிட்டிருக்கிறார். பின்னர், அமெரிக்கவாழ் சீக்கிய மக்கள், காஷ்மீரி பண்டிட்டுகள் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பிரதமர் மோடி பேசினார்.

Modi in Houston
Modi in Houston
Twitter

இந்தச் சந்திப்பின்போது, டெல்லி சர்வதேச விமான நிலையத்துக்கு சீக்கிய மதகுருவான குருநானக்கின் பெயரைச் சூட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை சீக்கியர்கள் பிரதமர் மோடியிடம் அளித்தனர். அந்தச் சந்திப்பு குறித்து, ``இந்தியாவின் வளர்ச்சியில் ஹூஸ்டன் நகர்வாழ் சீக்கிய மக்கள் கொண்டுள்ள அக்கறை தம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது'' என பிரதமர் மோடி நெகிழ்ந்திருக்கிறார்.

"வாசிப்பே, வளர்ச்சிக்கான எரிபொருள்!" - மோடி பொன்மொழிகள் 20 #VikatanPhotoCards

`Howdy Modi' நிகழ்ச்சி

சுமார் 50,000 பேர் அளவுக்கு அமரக் கூடிய என்.ஆர்.ஜி மைதானத்தில் நடைபெறும் ஹௌடி மோடி நிகழ்ச்சியில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். இந்தநிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் பங்கேற்க இருக்கிறார். டெக்சாஸ் வாழ் இந்தியர்கள் அமைப்பான டெக்சாஸ் இண்டியா போரம் (Texas India Forum) ஏற்பாடு செய்திருக்கும் இந்த நிகழ்ச்சி இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்குத் தொடங்கி 11.30 வரை நடைபெறுகிறது.

Modi in Houston
Modi in Houston
PMO India

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடியை வரவேற்க குஜராத்தின் பாரம்பர்ய `தாண்டியா' நடனத்தை பிரமாண்டமாக நடத்த அமெரிக்கவாழ் குஜராத் மக்கள் முடிவு செய்திருக்கிறார்கள். இதில், 1,000 நடனக் கலைஞர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.

ஹௌடி மோடி நிகழ்ச்சியின் தொடக்கமான அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கலைஞர்கள் நடத்தும் 90 நிமிட கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதில், 27 கலைக்குழுக்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். ஹௌடி மோடி நிகழ்ச்சிக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட 2 பாடல்கள் உட்பட பல்வேறு பாடல்கள், கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

Modi in Houston
Modi in Houston
PIB

`இந்தியா - அமெரிக்கா ஆகிய இருநாடுகளின் கலாசாரம் மற்றும் ஒற்றுமையைக் கொண்டாடும் பிரமாண்ட நிகழ்ச்சியாக ஹௌடி மோடி நிகழ்ச்சி இருக்கும். இரு நாடுகள் இடையேயான உறவை வலுப்படுத்துவது மற்றும் மேம்படுத்துவது குறித்து 30 லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கவாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச இருக்கிறார்'' என டெக்சாஸ் இண்டியா போரம் அமைப்பின் செய்தித் தொடர்பாளர்களுள் ஒருவரான பிரீத்தி தவ்ரா கூறியிருக்கிறார்.

கண்ணீர்விட்ட இஸ்ரோ தலைவர் - `நிலவை நிச்சயம் தொடுவோம்’ என ஆறுதல் சொன்ன மோடி

இந்த நிகழ்ச்சிக்காக பல்வேறு அமெரிக்க நகரங்களில் இருந்தும் பிரத்யேகமாக ஹூஸ்டன் நகருக்கு 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பாக மைதானத்தினுள் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு நிகழ்ச்சி முடிந்தபின்னர், தனியார் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருக்கும் இரவு விருந்தில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். பின்னர், நியூயார்க்கில் நடைபெறும் காலநிலை உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் புறப்பட்டுச் செல்ல இருக்கிறார்.