Published:Updated:

`அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி முதல் காஷ்மீர் தேர்தல் வரை!’ - பிரதமர் மோடி உரையின் ஹைலைட்ஸ்

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

‘நம் உள்ளூர் தயாரிப்புகளைப் பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும் என 74-வது சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நாட்டின் 74-வது சுதந்திர தின கொண்டாட்டம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தீவிரவாதிகள் ஊடுருவதை தடுக்க டெல்லி மற்றும் காஷ்மீர் எல்லையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்புப்படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக இந்த சுதந்திர தினவிழாவில் முக்கிய தலைவர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். அனைவரும் சமூக இடைவெளியுடன் அமரவைக்கப்பட்டுள்ளனர். செங்கோட்டையின் 4 நுழைவாயில்களிலும் தெர்மல் பரிசோதனை செய்யப்பட்டபிறகே அனைவரும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பிரதமர் உரை:

பிரதமர் மோடி, முன்னதாக ராஜ்கட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்திய பின்னர் விழா நடைபெறும் செங்கோட்டைக்கு வந்தடைந்தார். இதைத்தொடர்ந்து, 7-வது முறையாக தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். பிறகு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். பின்னர் நாட்டு மக்களிடம் பேசிய அவர், ‘நாம் தனித்துவமான காலங்களை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம்.

இன்று என்னால் சிறு குழந்தைகளையும் பார்க்க முடியாது. கொரோனா அனைவரையும் தடுத்து நிறுத்தியுள்ளது. கோவிட் காலத்தில் கொரோனா வீரர்கள் ‘சேவா பர்மோ தர்மம்’ என்ற மந்திரத்தின் படி வாழ்ந்து இந்திய மக்களுக்குச் சேவை செய்துள்ளனர். தேசத்துக்குச் சேவை செய்ய அயராது உழைத்த சுகாதார ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகிய அனைவருக்கும் முழு தேசத்தின் சார்பாக நான் நன்றி கூற விரும்புகிறேன்.

‘ஆத்மனிர்பர் பாரத்’

நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவில் கொள்ள வேண்டிய நாள் இது. நம் பாதுகாப்பை உறுதி செய்யும் ராணுவம், துணை ராணுவம் மற்றும் காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்பு பணியாளர்களுக்கு நன்றியைக் காட்டவேண்டிய நாள் இது. கோவிட் 19 தொற்று நோய்க்கு மத்தியில் 130 கோடி இந்தியர்களும் தன்னம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்துக்கொண்டுள்ளனர். மேலும் ‘ஆத்மனிர்பர் பாரத்’ என்ற கனவு உறுதிமொழியாக மாறுகிறது. இந்த உறுதிமொழி அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு மந்திரமாக மாறியுள்ளது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மற்ற நாடுகளுக்கும் உதவிய இந்தியா

எனது சக இந்தியர்களின் திறன்களை நம்பிக்கையை நான் அதிகமாக நம்புகிறேன். நாம் ஏதாவது செய்ய முடிவெடுத்தவுடன் அந்த இலக்கை அடையும் வரை ஓய்வெடுக்கமாட்டோம். இந்த கொரோனா நெருக்கடியில் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பலர் உயிரிழந்திருக்கிறார்கள் எனக்குத் தெரியும். 130 கோடி இந்தியர்களின் தீர்மானத்துடன் இந்த நெருக்கடியை நாம் தோற்கடிப்போம். சில மாதங்களுக்கு முன்பு நாம் என் 95 மாஸ்க் , பிபிஇ கருவிகள் மற்றும் வெண்டிலேட்டர்களை இறக்குமதி செய்தோம். இன்று இந்தியா தனது தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல் மற்ற நாடுகளுக்கும் உதவும் வகையில் முன்னேறியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`மாணவர்கள், முதியவர்களுக்கு அனுமதி மறுப்பு!’ - எளிமையாக நடக்கும் சுதந்திரதின விழா

மேக் ஃபார் வேர்ல்ட்

சுதந்திர இந்தியாவின் மன நிலை உள்ளூர் குரலாக இருக்க வேண்டும். நம் உள்ளூர் தயாரிப்புகளைப் பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும். நாம் இதைச் செய்யாவிட்டால் நம் தயாரிப்புகள் சிறப்பாகும் வாய்ப்பை பெறாது. இன்று பல பெரிய நிறுவனங்கள் இந்தியாவை நோக்கித் திரும்பி வருகின்றன. மேக் இன் இந்தியாவுடன் ‘மேக் ஃபார் வேர்ல்ட்’ (Make For World) என்ற மந்திரத்துடன் நாம் முன்னேற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

‘விவசாய உள்கட்டமைப்பு நிதி’

கடந்த ஆண்டு நம் நாட்டுக்கு அந்நிய நேரடி முதலீட்டில் 18% அதிகரிப்பு இருந்தது. நம் கொள்கைகள், ஜனநாயகம் மற்றும் நமது பொருளாதாரத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துவதில் நாம் கவனம் செலுத்தியதால் உலகம் இந்தியா மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது. ஆத்மனிர்பர் பாரத்தின் ஒரு முக்கிய முன்னுரிமை விவசாயி. நாட்டின் விவசாயிகளுக்கு நவீன உள்கட்டமைப்பை வழங்க ரூ.1 லட்சம் கோடி ‘விவசாய உள்கட்டமைப்பு நிதி’ உருவாக்கப்பட்டுள்ளது.

ஆத்மனிர்பர் நவீன புதிய மற்றும் வளமான இந்தியாவை உருவாக்குவதில் கல்விக்கு முக்கிய பங்கு உண்டு. எனவே மூன்று தசாப்தங்களுக்கு பிறகு நாடு முழுவதும் வரவேற்பைப் பெற்றுள்ள புதிய கல்விக் கொள்கையை நாங்கள் கொண்டுவந்துள்ளோம்.

இந்தியாவைப் பெருமைப்படுத்திய பெண்கள்:

பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் அவர்கள் இந்தியாவைப் பெருமைப்படுத்தி அதை பலமாக்கினர். இன்று அவர்களுக்கு சுய வேலைவாய்ப்பு வழங்கத் தேசம் உறுதியாக உள்ளது. இன்று பெண்கள் நிலக்கரி சுரங்களில் வேலை செய்கிறார்கள், போர் விமானங்களில் பறக்கும்போது நம் மகள்கள் வானத்தைத் தொடுகிறார்கள். நமது மகள்களின் திருமணத்துக்கான குறைந்த வயதை மறுபரிசீலனை செய்ய குழுவை அமைத்துள்ளோம், குழு தனது அறிக்கையை சமர்ப்பித்த பிறகு தகுந்த முடிவை எடுப்போம்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

கொரோனா தடுப்பூசி!

இன்று மூன்று தடுப்பூசிகள் இந்தியாவில் சோதனை நிலையில் உள்ளன. விஞ்ஞானிகள் ஒப்புதல் வழங்கியவுடன், நான் அதன் பெரிய அளவிலான உற்பத்தியைத் தொடங்கும். விரைவில் நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் அதற்கான முன்னேற்பாடு திட்டங்கள் எங்களிடம் உள்ளது.

இந்த வருடம் ஜம்மு-காஷ்மீருக்கான வளர்ச்சியின் புதிய பயணத்தின் ஆண்டு. இந்த வருடம் ஜம்மு -காஷ்மீர் பெண்கள் மற்றும் பட்டியலினத்தவர்கள் உரிமைகளைப் பெற்றுள்ளனர். இந்த வருடம் ஜம்மு-காஷ்மீர் அகதிகளுக்குக் கண்ணியமான வாழ்க்கை கிடைத்துள்ளது. காஷ்மீரில் தொகுதிகள் மறுவரை பணிகள் முடிந்தவுடன் விரைவில் தேர்தல் நடத்தப்படும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு