Published:Updated:

`என் செயலில் குறைபாடு இருக்கலாம்.. ஆனால்?’ - நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி கடிதம்

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் மோடி இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி பொறுப்பேற்று ஒரு வருடம் ஆன நிலையில் இந்திய மக்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாகப் பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி நாட்டு மக்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார் பிரதமர் மோடி. அதில் தன் தலைமையிலான அரசு ஒரு வருடமாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், பிரச்னைகளை எதிர்கொண்டது, அரசின் திட்டங்கள், மக்களுக்குச் செய்த உதவிகள், கொரோனா விவகாரம் எனப் பல விஷயங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

மோடி - அமித் ஷா
மோடி - அமித் ஷா

அதில், “ என் சக இந்தியர்களுக்கு வணக்கம். கடந்த ஆண்டு இந்த நாளில் இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒரு பொன்னான அத்தியாயம் தொடங்கியது. பல தசாப்தங்களுக்குப் பிறகு நாட்டு மக்கள் முழுப் பெரும்பான்மையுடன் ஒரு முழுக் கால அரசாங்கத்துக்கு வாக்களித்தனர். இந்த நேரத்தில் இந்தியாவின் 130 கோடி மக்களுக்கும் நமது நாட்டின் ஜனநாயக நெறிமுறைகளுக்கும் மீண்டும் ஒருமுறை தலைவணங்குகிறேன்.

சாதாரண நாள்களில் நான் உங்கள் அருகில்தான் இருந்திருப்பேன். ஆனால் தற்போதைய சூழ்நிலைகள் அதை அனுமதிக்கவில்லை. அதனால்தான் இந்தக் கடிதம் மூலம் உங்கள் ஆசீர்வாதங்களை நாடுகிறேன். உங்கள் பாசம், நல்லெண்ணம் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவைதான் எனக்குப் புதிய ஆற்றலையும் உத்வேகத்தையும் அளித்துள்ளன. ஜனநாயகத்தின் வலிமையை நீங்கள் வெளிப்படுத்தியவிதம் முழு உலகுக்கும் வழிகாட்டும் வெளிச்சம்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
ANI

2014-ம் ஆண்டு முதல் 2019 வரை இந்தியாவின் அந்தஸ்து கணிசமாக உயர்ந்துள்ளது. நிதிச் சேர்க்கை, இலவச எரிவாயு, மின்சார இணைப்புகள், சுகாதாரம், பாதுகாப்பு ஆகிய அனைத்திலும் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்தியாவை புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவை நிறைவேற்றுவதற்காகவே 2019-ம் ஆண்டு மக்கள் வாக்களித்தனர். கடந்த ஓராண்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் இந்தக் கனவை நிறைவேற்றும் பாதையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன” எனக் குறிப்பிட்டுள்ள பிரதமர், கடந்த சில ஆண்டுகளாக தன் அரசு செய்த அனைத்து விஷயங்களையும் விளக்கிப் பட்டியலிட்டுள்ளார்.

தொடர்ந்து, கொரோனாவைப் பற்றிப் பேசியுள்ள மோடி, “ நம் நாட்டு மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதில் நாங்கள் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கும்போது கொரோனா வைரஸ் நம் நாட்டையும் சூழ்ந்தது. நம் நாட்டு மக்கள் தொகையால், இங்கு கொரோனா தாக்கும்போது இந்தியா உலகுக்கு ஒரு பிரச்னையாக மாறும் எனப் பலர் அஞ்சினர். ஆனால் இன்று உலகம் நம்மை வியந்து பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. உலகின் சக்திவாய்ந்த மற்றும் வளமான நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியர்களின் கூட்டு வலிமையும் ஆற்றலும் இணையற்றது என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள்.

மோடி
மோடி

இந்தியாவின் ஆயுதப்படைகள், ஜனதா ஊரடங்கு, நாடு தழுவிய லாக் டெளன், கொரோனா வாரியர்ஸ்களுக்காக கைதட்டுவது, விளக்கு ஏற்றிவைப்பது என ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நம் ஒற்றுமையை நீங்கள் காட்டியுள்ளீர்கள். கொரோனா நெருக்கடி நேரத்தில் யாரும் எந்த அசௌகரியத்தையும் சந்தித்ததில்லை என்று நிச்சயமாகக் கூறமுடியாது. நம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சிறு, குறு தொழில் செய்பவர்கள், வணிகர்கள் போன்ற பலரும் பெரும் துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் கஷ்டங்களைத் தணிக்க நாம் ஒன்றுபட்டு உறுதியாகச் செயல்பட வேண்டும்.

நாம் எதிர்கொள்ளும் அசௌகரியங்களைப் பேரழிவுகளாக மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே ஒவ்வொரு இந்தியனும் அனைத்து விதிகள், வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது மிக முக்கியம். நாம் இதுவரை காட்டிய பொறுமையைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். இது ஒரு நீண்ட பயணம் ஆனால் நாம் வெற்றியின் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறோம். வெற்றி என்பது நம் அனைவரின் கூட்டு முயற்சியின் தீர்மானமாகும். கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு சூப்பர் சூறாவளி மேற்குவங்கம், ஒடிசாவைத் தாக்கியது. இந்த மக்களின் தைரியம் இந்திய மக்களுக்கு ஊக்கமளிக்கிறது.

இந்தக் கடினமான நேரத்தில் இந்தியா தன் பொருளாதாரங்களை எவ்வாறு மீட்கப்போகிறது எனப் பல நாடுகளில் பரவலான விவாதம் நடைபெற்றது. இருந்தும் அதிலும் பலரை இந்தியா ஆச்சர்யப்படுத்தியது. சுயசார்பு இந்தியா திட்டத்துக்காக சமீபத்தில் வழங்கப்பட்ட 20 லட்சம் கோடி தொகுப்பு இந்தத் தற்போதைய சூழலில் நாம் எடுத்துவைத்துள்ள முக்கிய படி. இந்த முயற்சி ஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு புதிய நம்பிக்கையை உருவாக்கும். இது நமது விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர்கள், இளைஞர்களுக்கு உதவும்.

அன்பிற்குரிய நண்பர்களே, கடந்த 6 ஆண்டுக்கால பயணத்தில் நீங்கள் எனக்கு அன்பும் ஆசீர்வாதமும் நிறைந்த மழையைப் பொழிந்தீர்கள். உங்கள் ஆசீர்வாதங்களின் வலிமையால்தான் கடந்த ஒரு வருடத்தில் தேசம் வரலாற்று முடிவுகளை எடுக்கவும் முன்னேறவும் முடிந்தது. இன்னும் நாம் செய்ய வேண்டிய நிறைய விஷயங்கள் உள்ளன. நான் இரவு பகலாக வேலை செய்கிறேன், என்னில் குறைபாடு இருக்கக்கூடும். ஆனால் நம் நாட்டில் எதுவும் இல்லை. என் தீர்மானத்துக்கான பலம், ஆதரவு, ஆசீர்வாதம், பாசம் ஆகியவை நீங்கள்தான். முன்னேற்றத்தின் பாதையில் நாம் செல்வோம், வெற்றி நம்முடையதுதான்.

மோடி
மோடி

ஆரோக்கியமாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்! விழிப்புடன் இருங்கள், தகவல் அறிந்து செயல்படுங்கள்!

உங்கள் சேவகன்,

நரேந்திர மோடி.

இவ்வாறு பிரதமர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் கடிதம் தொடர்பான உங்கள் கருத்தை கமென்ட்டில் குறிப்பிடுங்கள்!

அடுத்த கட்டுரைக்கு