Published:Updated:

`வீட்டுக்குச் செல்ல நினைப்பது மனித இயல்பு!’ -முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் பேச்சு

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

``கொரோனாவுக்கு எதிராகப் போராடுவதில் நாம் வெற்றி பெற்றுள்ளதாக உலக நாடுகள் கூறுகின்றன. இந்தப் போராட்டத்தில் மாநில அரசுகளின் பங்குகள் மிக முக்கியமானவை” - பிரதமர் மோடி

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இதுவரை 67,000-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். 2,200-க்கும் அதிகமானவர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடனும் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். கொரோனா நடவடிக்கைகள் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் ஐந்தாவது முறையாக பிரதமர் மோடி உரையாடியுள்ளார்.

பிரதமர் மோடி மற்றும் முதல்வர்கள்
பிரதமர் மோடி மற்றும் முதல்வர்கள்

பிரதமர் மோடி முதல்வர்களுடன் பேசுகையில், ``கொரோனாவுக்கு எதிராகப் போராடுவதில் நாம் வெற்றி பெற்றுள்ளதாக உலக நாடுகள் கூறுகின்றன. இந்தப் போராட்டத்தில் மாநில அரசுகளின் பங்குகள் மிக முக்கியமானவை. தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து இந்த வைரஸின் அச்சுறுத்தலுக்கு எதிராக தங்களது பங்களிப்புகளை மாநில அரசுகள் செய்துள்ளன” என்றார். இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்னைகளைக் குறிப்பிட்ட மோடி, ``மக்கள் அனைவரும் தாங்கள் இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. ஆனால், தங்களுடைய வீட்டுக்குச் செல்ல வேண்டும் என நினைப்பது மனித இயல்பு. எனவே, எங்களுடைய முடிவுகளில் சில மாற்றங்களைச் செய்தோம். வைரஸ் தொற்று கிராமங்களில் பரவாமல் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். அது மிகப்பெரிய சவாலாக இருந்தது” என்று கூறியுள்ளார்.

`வேலை நாள், விடுமுறை நாள்... இணையப் பயன்பாட்டில் என்ன வித்தியாசம்? -ACT நிறுவனத்தின் ஊரடங்கு அறிக்கை

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆரோக்கிய சேது செயலின் முக்கியத்துவம் குறித்து முதல்வர்களுக்கு எடுத்துரைத்துள்ளார். வைரஸ் பரவலை இந்த செயலி கண்காணிக்கும் என்பதால் இதைப் பலரும் பயன்படுத்த மக்களுக்கு அறிவுரை கூறும்படியும் வலியுறுத்தியுள்ளார். இதுவரை அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கின் விளைவுகள் தொடர்பாகவும் முதல்வர்களுடன் பிரதமர் உரையாடியுள்ளார். ஊரடங்கிற்கு பிறகான நடவடிக்கைகள், பொருளாதார பிரச்னைகள், ஊரடங்கை நீட்டிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி மற்றும் முதல்வர்கள்
பிரதமர் மோடி மற்றும் முதல்வர்கள்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் பேசும்போது, ``இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வைரஸ் தொற்று தொடர்பான வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை. குணமடைபவர்களின் விகிதம் 30 சதவிகிதத்தைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றிப் பாதையை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறோம்” என்று கூறியுள்ளார். சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி 4,213 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 1,559 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் விகிதம் 31.15 சதவிகிதமாக உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு