Published:Updated:

`மோடி, நீங்கள்தான் எனக்குக் கடவுள்!’ - வீடியோ கான்ஃபரன்சில் கண்ணீர்விட்ட டேராடூன் பெண்

மோடி
மோடி

டேராடூனைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரதமர் மோடிக்கு கண்ணீர்மல்க நன்றி தெரிவிக்கும் வீடியோ இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

பிரதான் மந்திரி பாரதிய ஜனவ்ஷாதி பரியோஜனா திட்டத்தின் (Pradhan Mantri Bhartiya Janaushadi Pariyojana) கீழ் மருத்துவ சேவைகள் பெற்ற பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் உரையாற்றினார். அப்போது டேராடூனைச் சேர்ந்த தீபாஷா என்ற பெண் பிரதமர் மோடிக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். அந்தப் பெண்ணின் வார்த்தைகளைக் கேட்டு பிரதமர் மோடி சில நிமிடங்கள் மௌனமாகிவிட்டார். 2011-ம் ஆண்டு டேராடூனைச் சேர்ந்த தீபா முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளர். பிரதான் மந்திரி பாரதிய ஜனவ்ஷாதி பரியோஜனா திட்டத்தின் கீழ் மருத்துவ உதவிகள் பெற்று, குணமடைந்துள்ளார்.

வீடியோ கான்ஃபரன்ஸ்
வீடியோ கான்ஃபரன்ஸ்

இதுகுறித்து அந்தப் பெண் பேசுகையில், ``நான் பேச முடியாத நிலையில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தேன். மருந்துகளின் விலை மிகவும் அதிகமாக இருந்தது. என்னுடைய கணவர் ஊனமுற்றவர். குடும்பம் நடத்துவதே மிகவும் சவாலாக இருந்தது. அந்த நேரத்தில்தான் அரசாங்கத்தின் மருந்துகளைப் பெற்றேன். இப்போது நான் நலமாக இருக்கிறேன். எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களே நம்பிக்கை இழந்திருந்தனர். நான் இப்போது நன்றாக இருக்கிறேன்.

இந்தத் திட்டத்தின் கீழ் மருந்துகளை வாங்கினேன். நான் கடவுளைப் பார்த்ததில்லை. உங்களை நான் கடவுளாகப் பார்க்கிறேன் மோடி. 5,000 ரூபாய் மதிப்பிலான மருந்துகளை இந்தத் திட்டத்தின் கீழ் 1,500 ரூபாய்க்கு வாங்கி வருகிறேன். இப்போது நான் நலமாகவும் இருக்கிறேன். எனக்கு உங்களின் திட்டத்தால் குறைவான விலையில் மருந்தும் கிடைக்கிறது’’ என்றார். அந்தப் பெண்ணால் தொடர்ந்து பேசமுடியவில்லை வீடியோ கான்ஃபரன்சிங்கில் கண்ணீர் விட்டு அழத் தொடங்கிவிட்டார். அந்தப் பெண்ணின் வார்த்தைகளைக் கேட்ட பிரதமர் மோடி மௌனமாகிவிட்டார். அருகில் இருந்தவர்கள் அந்தப் பெண்ணுக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறி தேற்றினர்.

இதனையடுத்து பேசிய பிரதமர் மோடி, ``ஒவ்வொரு மாதமும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஜனவ்ஷாதி நிலையங்களில் இருந்து மருந்துகளை வாங்கிச் செல்கின்றனர். நாடு முழுவதும் உள்ள 6,000 ஜனவ்ஷாதி நிலையங்கள் மக்களுக்கு 2,000 முதல் 2,500 கோடி ரூபாயை சேமிக்க உதவியுள்ளன” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு