Published:Updated:

போனில் நலம் விசாரிப்பு; சில மணிநேரத்தில் வீடு தேடிவந்த டாக்டர்கள்! -தொழிலாளியை நெகிழவைத்த பிரதமர் மோடி

ஓம் பிரகாஷ்
ஓம் பிரகாஷ்

ஓம் பிரகாஷின் உடல்நிலை குறித்து விசாரித்த சில மணி நேரங்களில் மூத்த மருத்துவர்கள் அடங்கிய சுகாதாரத் துறை குழு பிரகாஷின் வீட்டுக்கு வந்து சிகிச்சையைத் தொடங்கியுள்ளது.

ஹரியானா மாநில தொழிலாளியிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ள சுவாரஸ்ய சம்பவம் வெளியில் தெரியவந்துள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கேன்சர் நோயாளிகளிடம் பிரதமர் மோடி பேசி வருகிறார். அந்தவகையில்தான் ஹரியானா மாநிலம் ஹிஸாரைச் சேர்ந்த தொழிலாளியிடம் பிரதமர் மோடி பேசியுள்ளார். அந்தத் தொழிலாளி பெயர் ஓம் பிரகாஷ். 65 வயதாகும் இவர் சில காலங்களாக கேன்சர் நோயால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இதையடுத்து இவருக்கு பிரதமர் மோடியிடம் பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தச் சம்பவத்தை விவரிக்கும் இவர், ``பிரதமரின் அழைப்புக்கு எனது பெயர் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில், பிரதமர் அலுவலகத்திலிருந்து (பி.எம்.ஓ) எனக்கு தகவல் கிடைத்தது, பிரதமர் மோடி என்னை அழைப்பார் என்று கூறப்பட்டது. பாதுகாப்பு நோக்கத்துக்காக அழைப்பை பதிவு செய்ய வேண்டாம் என்று அதிகாரிகள் என்னிடம் கேட்டார்கள்.

இரவு 8.30 மணியளவில், எனக்கு இன்னோர் அழைப்பு வந்தது, இந்த முறை பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து. அவர் என் உடல்நலம் குறித்தும், நான் எங்கிருந்து சிகிச்சைப் பெறுகிறேன் என்றும் கேட்டார். நான் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும் அவர் விசாரித்தார்" எனக் கூறும் ஓம் பிரகாஷுக்கு பிரதமர் பேசி முடித்ததும் இன்னோர் ஆச்சர்யம் காத்திருந்துள்ளது. ஓம் பிரகாஷின் உடல்நிலை குறித்து விசாரித்த சில மணி நேரங்களில் மூத்த மருத்துவர்கள் அடங்கிய சுகாதாரத் துறை குழு பிரகாஷின் வீட்டுக்கு வந்து சிகிச்சையைத் தொடங்கியுள்ளது.

போனில் நலம் விசாரிப்பு; சில மணிநேரத்தில் வீடு தேடிவந்த டாக்டர்கள்! -தொழிலாளியை நெகிழவைத்த பிரதமர் மோடி

பிரதமர் மோடி அழைத்து ஆறுதல் கூறியதால் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது பிரகாஷின் குடும்பம். இதுதொடர்பாக பேசியுள்ள பிரகாஷின் மகன், ``மூத்த மருத்துவர்கள் அடங்கிய சுகாதாரத் துறை குழு என் தந்தை வீட்டுக்கு வந்து ஒரு புதிய சிகிச்சையைத் தொடங்கியது. என் தந்தை இப்போது வரை ஹிசாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பிரதமரின் அழைப்புக்குப் பிறகு, என் தந்தைக்கு சிறந்த சிகிச்சை கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" எனக் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு