Published:Updated:

பம்பையில் தடுத்துநிறுத்தப்பட்ட 12 வயது புதுச்சேரி சிறுமி? - மௌனம் காக்கும் கேரள போலீஸ்

ஆன்லைனில் சிறுமியின் வயதை 10 என்று குறிப்பிட்டுள்ளதாகவும் ஆனால், சிறுமியின் அடையாள அட்டையில் 12 வயது என்று இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சபரிமலை
சபரிமலை

கேரளா சபரிமலையில், அனைத்து வயதுடைய பெண்களும் சுவாமி தரிசனம் செய்யலாம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ம் தேதி, உச்ச நீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, அம்மாநில அரசு அனைத்து வயதுடைய பெண்களையும் கோயிலுக்குச் செல்ல அனுமதி அளித்தது. கேரள அரசின் இந்த நடவடிக்கையைத் தேவசம்போர்டு மற்றும் இந்து அமைப்புகள், அரசியல் கட்சிகள் உள்ளிட்டவை கடுமையாக எதிர்த்து வந்தன. கடுமையான எதிர்ப்பையும் மீறி கடந்த ஆண்டு கனகதுர்கா, பிந்து என்ற இரு பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் சென்றனர். இந்தச் சம்பவத்தை அங்குள்ள இந்து அமைப்புகள் எதிர்த்ததால், அந்தப் பகுதி கலவரம் ஏற்பட்டது. இதனால், ஒரு மண்டல பூஜை முழுவதும் பதற்றம் நீடித்தது.

சபரிமலை
சபரிமலை

உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்புக்கு எதிராகத் தொடரப்பட்ட மறுசீராய்வு மனுக்கள் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டிருக்கின்றன.

இந்தநிலையில், சபரிமலை மண்டல பூஜை தொடங்கியுள்ளது. இதனால், மீண்டும் பெண்கள் அங்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கிடையே, கேரள அரசு சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது எனக் கூறியுள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அமலில் இருப்பதால் புதுச்சேரியைச் சேர்ந்த சிறுமி, தந்தையுடன் சபரிமலைக்குச் சென்றுள்ளார். பம்பையில் இருக்கும் சோதனைச் சாவடியில் போலீஸார் சோதனை செய்துள்ளனர். அப்போது `சிறுமிக்கு 12 வயதாகிறது அவரை அனுமதிக்க முடியாது' என்று போலீஸார் தடுத்து நிறுத்தியதாகத் தெரிகிறது. ஆன்லைனில் சிறுமியின் வயதை 10 என்று குறிப்பிட்டுள்ளதாகவும் ஆனால், சிறுமியின் அடையாள அட்டையில் 12 வயது என்று இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறுமியை, தரிசனத்துக்கு அனுமதிக்குமாறு அவரின் தந்தையும் உடன் வந்தவர்களும் பலமுறை கேட்டுள்ளனர். ஆனால், போலீஸாரோ,10 வயதிலிருந்து 50 வயது வரை உள்ள பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று அரசின் உத்தரவு வந்திருப்பதால் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கடுமையாகக் கூறியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அந்தச் சிறுமியை அங்குள்ள தனி அறையில் வைத்துவிட்டு அவரின் தந்தையை மட்டும் தரிசனம் முடித்துவிட்டு வந்து, சிறுமியை அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். சிறுமி இருக்கும் இடத்துக்கும் தரிசனம் செய்யும் இடத்துக்கும் 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள நிலையில் மகளை செக் போஸ்டில் விட்டுவிட்டு தந்தை சாமி தரிசனம் செய்ய சென்றார். அந்தச் சிறுமியைத் தடுத்து நிறுத்தியதாக கேரள போலீஸார் தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. அதேநேரம், இந்தத் தகவலையும் கேரள போலீஸார் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் பக்தர்களை விரட்டி விரட்டி வீடியோ... சபரிமலை விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் 'மிரட்டல்' உத்தி!

`அனைத்து வயதுடைய பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்ற தீர்ப்பு அமலில் இருக்கும் நிலையில், அரசாங்கமே நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் அவமதித்து நீதிமன்றங்களின் மீதுள்ள நம்பிக்கையை இழக்கச் செய்யும்' என்று சமூக ஆர்வலர்கள் கொதித்தார்கள். அதோடு இது நீதிமன்ற அவமதிப்பு அல்லவா என்று கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

இதனிடையே குருவாயூர் கோயிலைப் போல சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கும் தனிச்சட்டம் உருவாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அது குறித்த விரிவான அறிக்கையை ஜனவரி மாதம் 3-ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.