Published:Updated:

ஆப் மூலம் இழிவாகச் சித்திரிக்கப்பட்ட முஸ்லிம் பெண்கள்; வழக்கு பதிவு செய்த போலீஸார்; என்ன நடந்தது?

Woman (Representational Image)
News
Woman (Representational Image) ( Image by StockSnap from Pixabay )

முஸ்லிம் பெண்கள் தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்த புகைப்படங்களைத் திருடி, அதை `புல்லி பாய்' என்ற ஆப்பில் `ஏலம்' என்ற பெயரில் இழிவாகச் சித்திரித்து வெளியிட்ட மர்ம நபர்கள் மீது மும்பை, டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களைக் குறிவைத்து அவர்களை இழிவுபடுத்தும் நோக்கில், ஆப்களில் அவர்களது புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வளர்ந்து வரும், சமூகச் செயல்பாடுகளில் முனைப்புக் காட்டும், மற்றும் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பெண்களின் புகைப்படங்களைத் திருடி, அவற்றைப் புல்லி பாய் (Bully Bai) என்ற ஆப்பில் இழிவாகச் சித்திரித்து வெளியிட்டு, `ஏலத்தில் பங்கேற்கலாம்' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்பெண்களை ஏலம் விடுவது இந்த மொபைல் ஆப்களை உருவாக்கியவர்களின் நோக்கம் கிடையாது, அவர்களை இழிவுபடுத்த வேண்டும், துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கில் இதைச் செய்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

ரேடியோ ஜாக்கி சயேமி
ரேடியோ ஜாக்கி சயேமி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த ஆப்பில் இடம்பெற்றுள்ள பல பெண்களின் புகைப்படங் களில், இஸ்மத் இரா என்ற பெண் பத்திரிகையாளரின் படமும் ஒன்று. அவர் டெல்லி போலீஸில் புகார் செய்துள்ளார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பெண்களை இழிவுபடுத்தும் வகையில் செயல்படும் இது போன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவசேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதி மத்திய தகவல் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் புகார் செய்துள்ளார். அமைச்சர் அஸ்வினி உடனே விரைந்து செயல்பட்டு, `கிட்ஹப்' (GitHub) தளத்தில் இருந்த `புல்லி பாய்' ஆப்பை பயன்படுத்த முடியாமல் முடக்கி இருக்கிறார். அதோடு இது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டு இருக்கிறார்.

மும்பையில் பிரபல ரேடியோ ஜாக்கியாகப் பணியாற்றும் சயேமி ரஹ்மான் புகைப்படமும் `புல்லி பாய்' ஆப்பில் இடம்பெற்றிருந்தது. இது குறித்து சயேமி கூறுகையில், ``ஏற்கெனவே `சல்லி டீல்ஸ்' (Sully deals) என்ற ஆப், சமூக வலைதளங்களில் உள்ள இஸ்லாமியப் பெண்களின் புகைப்படங்களைத் திருடி இதேபோல இழிவுபடுத்தியது. அதில் எனது புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. இப்போது `புல்லி பாய்' ஆப்பிலும் என் படம் இடம்பெற்றிருக்கிறது.

வளர்ந்து வரும் எங்களது சமுதாயப் பெண்களை முடக்க வேண்டும் என்ற நோக்கில் ஒருங்கிணைந்த தாக்குதலாக இது அமைந்திருக்கிறது. எனக்கு இந்தத் தாக்குதல் புதிதல்ல. கடந்த நான்கு ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் எனது போலியான புகைப்படங்களை வெளியிட்டு சித்ரவதை செய்வது, மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது, மனரீதியாக சித்ரவதைக்கு உள்ளாக்குவது போன்றவற்றை சந்தித்து வருகிறேன்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன் `சல்லி டீல்ஸ்' ஆப் மூலம் ஏராளமான முஸ்லிம் பெண்களின் புகைப்படங்களை வெளியிட்டு 'டீல் ஆஃப் த டே' என்று இழிவுபடுத்தினர்.

புல்லி பாயியில் வெளியான போட்டோ
புல்லி பாயியில் வெளியான போட்டோ

அப்போது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், `சல்லி டீல்ஸ்' ஆப் முடக்கப்பட்டு, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதோடு சரி... வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்போது மீண்டும் `புல்லி பாய்' ஆப்பில் அதேபோல பெண்களின் புகைப்படங்கள் இழிவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.

மும்பையைச் சேர்ந்த சித்ராஹ் படேல் என்ற பெண்ணின் புகைப்படமும் `புல்லி பாய்' ஆப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அவர் மும்பை சைபர் பிரிவில் புகார் செய்துள்ளார். சைபர் பிரிவு தங்களது விசாரணையைத் தொடங்கியுள்ளது.

`கடந்த ஆண்டு பிரச்னையான `சல்லி டீல்ஸ்' ஆப்க்கு பின்னணியில் இருந்தவர்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதுதான் மீண்டும் `புல்லி பாய்' என்ற பெயரில் வந்திருக்கிறது' என்று குற்றம் சாட்டுகிறார்கள் சிலர்.