Published:Updated:

`ரூ.20,000 போதும் சார்... எந்த வயசு வேணும்னாலும் மாத்துவேன்!'-போலீஸாருக்கு ஷாக் கொடுத்த மேக்கப் மேன்

டெல்லியில் கைதான மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அளித்த வாக்குமூலம் போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Jayesh Patel
Jayesh Patel

டெல்லி இந்திரா காந்தி விமானநிலையத்தில் கடந்த வாரம் முதியவர்போல் வேடமணிந்து வந்த இளைஞர் ஒருவர் பிடிபட்டார். அந்த நபரின் பாஸ்போர்ட்டில் அம்ரிக் சிங், வயது 81 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அவரது பிறந்த தேதி பிப்ரவரி 2, 1938 என இருந்தது. விமான நிலையத்துக்குள் வந்த அந்த நபர், `பாதுகாப்பு நடைமுறையை மேற்கொள்ள முடியாது' என்றும் `வயதான காரணத்தால் வீல் சேரிலிருந்தும் தன்னால் எழுந்திருக்க முடியாது' என்றும் கூறியுள்ளார். மேலும், அதிகாரிகளின் முகத்தைப் பார்த்து பேசுவதையும் தவிர்த்தார்.

மேலும் வயதானவர்களுக்கான எந்தவித முகச் சுருக்கமோ, தோல்களில் எவ்வித மாற்றமோ இல்லாமல் இருந்துள்ளது. குரலும் வயதுக்கேற்றவாறு இல்லை. பார்ப்பதற்கு இளைஞர்போல் இருப்பதால் பாதுகாப்பு அதிகாரிகளுக்குச் சந்தேகம் வலுத்தது. இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபரின் உண்மையான பெயர் ஜெயேஷ் படேல் என்பதும் வயது 32 என்பதும் தெரியவந்தது. அகமதாபாத்தைச் சேர்ந்த ஜெயேஷ் டெல்லியில் வசிப்பதாகப் போலி முகவரி கொடுத்து பாஸ்போர்ட் எடுத்து, அதன்மூலம் வெளிநாடு செல்லவிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Passport
Passport

ஜெயேஷ் படேல் அமெரிக்கா சென்று பணியாற்ற விரும்பியுள்ளார். அவருக்கு விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அம்ரிக் சிங் என்ற போலி பெயரில், போலியான முகவரி மூலம் பாஸ்போர்ட் மற்றும் விசா பெற்றுள்ளார். இதற்கு பாரத் என்ற ஏஜென்ட் உதவிபுரிந்துள்ளார். மேக்கப் ஆர்ட்டிஸ்டை வரவழைத்து பாஸ்போர்ட்டில் இருக்கும் முதியவர்போல் வேடமிட்டுள்ளனர். இதற்காக ரூபாய் 30 லட்சம் டீல் பேசியுள்ளார் பாரத். இந்த விவகாரத்தில் ஜெயேஷ் படேல், பாரத் மற்றும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆகியோர் கைதாகினர். இதில், மேக்கப்- ஆர்ட்டிஸ்ட் அளித்த வாக்குமூலம் போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயேஷ் படேலின் தோற்றத்தை முதியவர்போல் மாற்றுவதற்காக 20,000 ரூபாய் வசூலித்துள்ளார். இதுவரை 10 பேரின் தோற்றத்தை மாற்றி வெளிநாடு செல்வதற்கு உதவி செய்திருக்கிறார்.

`வயதோ 32, முதியவர்போல் தோற்றம், 30 லட்சம் டீல்!’-விமான நிலைய அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த இளைஞர்

இதுகுறித்து டெல்லி காவல்துறையினர் பேசுகையில், ``ஜெயேஷ் படேலிடம் விசாரித்தபோது ஏஜென்ட் மற்றும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் தனக்கு உதவியதாகக் கூறினார். இதையடுத்து பாரத் என்ற ஏஜென்டை பிடித்தோம். அவர் கொடுத்த தகவலின் பேரில் மேக்கப் மேனான ஷாம்ஷெர் சிங் என்கிற பில்லு பார்பரை அவரது கடையில் வைத்துக் கைது செய்தோம். பில்லு பார்பர் என்றால்தான் அப்பகுதியினருக்குத் தெரிகிறது. 42 வயதான இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். ஆரம்பத்தில் முடி வெட்டும் வேலையைச் செய்து வந்துள்ளார். அதன்பின் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஒருவரிடம் உதவியாளராகப் பணியாற்றியிருக்கிறார்.

Shamsher Singh
Shamsher Singh

பின்னர், ரோகினி பகுதியில் சிறிய கடை ஒன்றை ஆரம்பித்து நடத்தி வந்துள்ளார். ஏஜென்ட்கள் சிலரின் அறிமுகம் இவருக்கு கிடைத்துள்ளது. இதன்பின்னர், இந்தப் பணியை மேற்கொண்டு வந்திருக்கிறார். இதுவரை 10 பேருக்கு வயதானவர்கள்போல் தோற்றத்தை மாற்றி வெளிநாடு செல்வதற்கு உதவியிருக்கிறார். இதில் இரண்டு பெண்களும் அடக்கம் என விசாரணையில் தெரியவந்தது. இதற்காக தலா 20,000 ரூபாய் வசூலித்துள்ளார். ஜெயேஷ் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் சிக்கிக்கொள்ளவும்தான் இந்த விவகாரம் தற்போது தெரியவந்துள்ளது. பில்லு கூறிய தகவலின்படி டெல்லியில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்றவர்களின் தகவலை சேகரித்து வருகிறோம்” என்றனர்.

ஜெயேஷ் படேல் பாஸ்போர்ட் விண்ணப்பித்த மறுநாளே அவருக்குக் கிடைத்துள்ளது. இந்தச் சம்பவத்தில் பாஸ்போர்ட் சரிபார்ப்புக்குச் சென்ற காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.