Published:Updated:

`கத்தி, வாள்களுடன் ஜீப்பில் ஊர்வலம்!’ - தட்டிக்கேட்ட பஞ்சாப் போலீஸுக்கு நேர்ந்த துயரம்

காவலர்கள்
காவலர்கள்

காவலர்களைத் தாக்கிய நபர்கள் அங்கிருந்து குருத்வாராவிற்குச் சென்றுள்ளனர். இதையறிந்த போலீஸார் அங்கு சென்று, அவர்களை சரணடையுமாறு வலியுறுத்தியுள்ளனர். இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அவர்கள் சரணடைந்தனர்.

நாடுமுழுவதும் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர், அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இன்று காலை பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள சனெளர் காய்கறிச் சந்தையில் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஊரடங்கை மீறி ஒரு பிரிவினர் குழுவாகச் சென்றிருக்கின்றனர். அங்கு நடந்த கலவரத்தில், காவலர் ஒருவரின் கை துண்டிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DGP Gupta
DGP Gupta

இதுதொடர்பாக பஞ்சாப் காவல்துறை அதிகாரி தின்கர் குப்தா பேசுகையில், ``காலை ஆறு மணியளவில் பாட்டியாலாவின் சனெளர் காய்கறிச் சந்தையில் நிகாங் எனப்படும் மதக் குழுவினர் கத்திகளுடன் வண்டியில் சென்றுள்ளனர். அப்பகுதியில் காண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி, ஊரடங்கு சமயத்தில் வெளியே வந்ததற்கான காரணத்தையும் அதற்காகப் பெறப்பட்ட அனுமதிக் கடிதத்தையும் கேட்டுள்ளனர். ஆனால் அவர்களோ, போலீஸாரைத் தாக்கிவிட்டு அங்கிருந்த தடுப்புகளையும் தகர்த்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். உதவி துணை ஆய்வாளராகப் பணிபுரிந்துவரும் ஹர்ஜித் சிங்கின் கை துண்டிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்” என்றார்.

மேலும், ``அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றனர். ஹர்ஜித் சிங்கிற்கு அறுவைசிகிச்சை நடந்துவருகிறது. காவலர்களைத் தாக்கிய நபர்கள், அங்கிருந்து குருத்வாராவிற்குச் சென்றுள்ளனர். இதையறிந்த போலீஸார், அங்கு சென்று அவர்களை சரணடையுமாறு வலியிறுத்தியுள்ளனர். இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அவர்கள் சரணடைந்தனர். அவர்களிடமிருந்து கத்தி, வாள் மற்றும் வெடிக்கும் தன்மையுள்ள வாயு நிரம்பிய சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன" என்று தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரைக் கைது செய்துள்ளதாகவும், மேலும் மூன்று பேரை விசாரித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அம்மாநில DGP குப்தா தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு