Published:Updated:

டெல்லி சிறுமி கொலை வழக்கு: `சிறார் வதைக்கான ஆதாரங்கள் இல்லை!' - போலீஸின் அதிர்ச்சி அறிக்கை

Death
Death ( Representational image )

``எரிக்கப்பட்ட சிறுமி சிறார் வதை செய்யப்பட்டார் என்பதற்கான எந்த சாட்சியமும் இல்லை, அறிவியல் பூர்வமான ஆதாரமும் இல்லை, பாதிக்கப்பட்ட குழந்தை சிறார் வதைக்கு உள்ளானாரா இல்லையா என்று உறுதியாகக் கூற முடியாது."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் 55 வயது மயான பூசாரியால் சிறார் வதைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட 9 வயதுச் சிறுமி கொலை வழக்கில், சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன் சிறார் வதை செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று டெல்லி காவல்துறையினர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 1-ம் தேதி மாலை 5 மணியளவில், சிறுமியின் தந்தை, சிறுமியை வீட்டிற்குத் தண்ணீர் எடுத்து வர அனுப்பியுள்ளார். அவர்கள் அருகில் உள்ள மயானத்தில் தண்ணீர் எடுத்து வருவது வழக்கம். அன்று தண்ணீர் எடுக்க மயானத்திற்குச் சென்றிருந்த சிறுமியை அங்கு பணிபுரிந்த 55 வயதான ராதே ஷியாம் என்ற பூசாரி சிறார் வதை செய்து கொலை செய்ததாக பெற்றோர்கள் குற்றம்சாட்டினர்.

sexual harassment
sexual harassment
டெல்லி: சிறார் வதை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட 9 வயது பட்டியலின சிறுமி; நாட்டை உலுக்கிய அதிர்ச்சி!

தண்ணீர் எடுக்கச் சென்ற மகள் வெகு நேரமாகியும் வீட்டுக்கு வராததால் அவரின் அம்மா மயானத்திற்குச் சென்றார். அங்கு தன் மகள் சடலமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அழுதார். அங்கு இருந்த பூசாரி ராதே ஷியாம், சிறுமி தண்ணீர் எடுக்க வந்தபோது மின்சாரம் தாக்கி இறந்துவிட்டதாகக் கூறினார். தொடர்ந்து, சிறுமியின் அம்மாவின் சம்மதமின்றி அவசர அவசரமாக சிறுமியின் உடலை எரித்துள்ளார். சிறுமியின் அம்மாவின் கதறலை அடுத்து அங்கு வந்த கிராம மக்கள் நீர் ஊற்றி அணைத்துள்ளனர். என்றாலும், அந்தச் சிறுமியின் கால் மட்டும் எஞ்சியிருந்தது.

இதனையடுத்து அங்கு வந்த டெல்லி காவல்துறையினர் ராதே ஷியாம், குல்தீப் குமார், லட்சுமி நரேன், முகமது சலீம் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். நாடு முழுவதும், கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு ஆதரவாக போராட்டங்களும், கண்டனங்களும் எழுந்தன. காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி சிறுமியின் பெற்றோர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து 14 நாள்கள் காவல்துறையினர் விசாரணைக்கு பின்னர், டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவிற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302 (கொலை), 376 (பாலியல் வன்கொடுமை) மற்றும் 506 (கிரிமினல் அச்சுறுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டம், மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

Sexual Harassment (Representational Image)
Sexual Harassment (Representational Image)

வழக்கின் விசாரணை நடந்து வரும் வேளையில், விசாரணை நடத்தி வரும் விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், எரிக்கப்பட்ட சிறுமி சிறார் வதை செய்யப்பட்டார் என்பதற்கான எந்த சாட்சியமும் இல்லை, அறிவியல் பூர்வமான ஆதாரமும் இல்லை, பாதிக்கப்பட்ட குழந்தை சிறார் வதைக்கு உள்ளானாரா இல்லையா என்று உறுதியாகக் கூற முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சிறப்பு நீதிபதி அஷுடோஷ் குமார், சிறார் வதைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு, அரசு வழங்கும் இழப்பீட்டுத் தொகையான 10 லட்சத்தில் நான்கில் ஒரு பகுதியான 2.5 லட்சத்தை உடனடி நிதியாக வழங்கச் சொல்லி உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு