Published:Updated:

`பா.ஜ.க அரசியலுக்கு இந்தப் புகைப்படங்களே சாட்சி!’ - சிசோடியா குற்றச்சாட்டும் காவல்துறை மறுப்பும்

ஜேஎம்இ மாணவர்களின் போராட்டத்தில் போலீஸார்தான் வாகனங்களுக்குத் தீவைத்தனர் என டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லி போராட்டம்
டெல்லி போராட்டம்

குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெறக்கோரி கடந்த ஒரு வாரமாக இந்தியாவின் பல மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று மாலை டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைகழக மாணவர்கள் பேரணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்துள்ளனர்.

டெல்லி போராட்டம்
டெல்லி போராட்டம்

அப்போது அவர்களைத் தடுக்க முயன்ற காவலர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசியும் மாணவர்களைக் கலைத்துள்ளனர். மேலும் ஜேஎம்இ பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்தும் காவலர்கள் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 4 டெல்லிப் பேருந்துகள் தீக்கிரையாகியுள்ளன. மேலும், சில வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து போராட்டத்தில் ஈட்டுபட்ட 50 மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். ஆனால் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய எங்கள் மீது தாக்குதல் நடத்தி வன்முறைக்கு வித்திட்டது காவலர்கள்தான் என மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். போலீஸ் தடியடிக்குக் கண்டனம் தெரிவித்தும் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும் நேற்று இரவு டெல்லி போலீஸ் தலைமை அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி போராட்டம்
டெல்லி போராட்டம்

இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுக் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். டெல்லியில் நடக்கும் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாகவும் காவலர்களின் தடியடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் உத்தரப்பிரதேசம் , கேரளா போன்ற பல மாநிலங்களில் நேற்று இரவு மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் போராட்டத்தின் வீரியத்தைக் குறைக்கும் நோக்கில் தெற்கு டெல்லி முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

`நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கிறோம் காப்பாற்றுங்கள்!’ - டெல்லி ஜேஎம்இ பல்கலைக்கழக மாணவர்கள் கதறல்

இந்நிலையில் டெல்லியில் நடந்த மாணவர்கள் போராட்டத்தின் போது பேருந்துகளுக்குத் தீவைத்தது காவலர்கள்தான் என டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் காவலர்கள் பேருந்தின் உள்ளே ஏதோ ஊற்றுகின்றனர். அடுத்த புகைப்படத்தில் காவலர் உடையில் இல்லாத ஒருவர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்.

இவற்றுடன், ``இந்தப் புகைப்படங்களைப் பாருங்கள் பேருந்துகள் மீது யார் தீவைத்தது என்பது தெரியும். பா.ஜ.கவின் மோசமான அரசியலுக்கு இந்தப் புகைப்படங்களே சாட்சி. இதற்கு பா.ஜ.க தலைவர்கள் விளக்கமளிக்க முடியுமா? ” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “டெல்லி காவல்துறையை உள்துறை அமைச்சகம்தான் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கிறது. இங்கு நடக்கும் அனைத்து விஷயங்கள் தொடர்பான அறிக்கை உள்துறை அமைச்சரும் பா.ஜ.க தலைவருமான அமித் ஷாவுக்கு நேரடியாகச் சென்றுகொண்டிருக்கிறது” என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

சிசோடியா கூறிய இதே குற்றச்சாட்டையே மாணவர்களும் முன் வைத்துள்ளதால் இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கிடையில் அதிகம் பகிரப்பட்டுள்ள புகைப்படம் தொடர்பாக விளக்கமளித்துள்ள டெல்லி காவல்துறை மக்கள் தொடர்பு அலுவலர் ரந்தாவா, ``சமூகவலைதளத்தில் வெளியான புகைப்படங்களின் மொத்த வீடியோவையும் நன்கு உற்றுக் கவனியுங்கள். அதில் பேருந்துக்கு அருகில் தீப்பற்றியுள்ளது அதைத் தண்ணீர் ஊற்றி காவலர் அணைக்கிறார்.

மனிஷ் சிசோடியா
மனிஷ் சிசோடியா

காவல்துறையினர் எந்த வாகனங்களுக்கும் தீவைக்கவில்லை. நாங்கள் போராட்டக்காரர்களைக் கலைக்கும்போது பல்கலைக்கழக வளாகத்திலிருந்து கற்கள் வீசப்பட்டன. இது ஒரு அசாதாரண சூழ்நிலை என்பதால் மாணவர்களைத் தடுத்த கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசினோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதே விவகாரத்துக்கு விளக்கமளித்துள்ள தென் கிழக்கு டெல்லி துணை கமிஷனர் சின்மோயி பிஸ்வால், ``மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் 1500 முதல் 2000 பேர் வரை கலந்துகொண்டிருந்தனர். அந்தக் கும்பலில் யார் மாணவர்கள் யார் பொதுமக்கள் என்பதை எங்களால் கண்டுபிடிக்க முடியாது. அவர்கள் சாலையில் பேரணி நடத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்திக்கொண்டிருந்தனர். நாங்கள் அவர்களை அப்புறப்படுத்த நினைத்தோம் அப்போது திடீரென எங்களின் தடுப்பை மீறி சிலர் சாலையில் நின்றிருந்த பேருந்துகளுக்குத் தீ வைத்தனர்.

டெல்லி போராட்டம்
டெல்லி போராட்டம்

நாங்கள் மாணவர்களைப் பின் நோக்கித் தள்ள மட்டுமே முயன்றோம். ஆனால், அவர்கள் எங்கள் மீது கல் மற்றும் எண்ணெய் நிரப்பிய பாட்டில் போன்றவற்றை வீசினர். அவர்கள் ஒருபோதும் அமைதியாகப் போராடவில்லை. மிகவும் ஆக்ரோஷமாகவே செயல்பட்டனர். நாங்கள் கூட்டத்தைக் கலைத்தபோது அவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் சென்றுவிட்டனர். உண்மையிலிருந்து யாரும் தப்ப முடியாது” எனக் கூறியுள்ளார்.