Published:Updated:

`100 டன் மருந்துப் பொருள்கள்; மருத்துவ உபகரணங்கள் விநியோகம்’ - #Lockdown-ல் கைகொடுக்கும் தபால்துறை

தபால்துறை
தபால்துறை

ஓய்வூதியங்கள் மற்றும் அரசுகளால் வழங்கப்படும் சமூக நலத் திட்டங்களை முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் என அனைத்துப் பயனாளர்களின் வீடுகளுக்கே சென்று அளித்திடுவதில் உறுதியாக உள்ளோம்

கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாகப் பரவி வருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகக் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளுடன் மத்திய அரசால் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு இரண்டாவது முறையாக மே 3-ம் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி அறிவித்தார். தற்போது அது நடைமுறையில் இருந்து வருகிறது.

கொரோனா
கொரோனா
Representational Image/Freepik

தேசிய ஊரடங்கு அமலில் இருப்பதால், பொதுப் போக்குவரத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இதனால், மக்களுக்கு மருந்துப் பொருள்கள் கிடைப்பதில் தடை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, சரக்கு விமானங்கள் மற்றும் தபால் வேன்களின் மூலம் சுமார் 100 டன் மருத்துவப் பொருள்கள் நாடு முழுவதும் விநியோகிக்கப் பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இதுதொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் புண்யா சால்வா ஸ்ரீவஸ்தவா, ``2 லட்சத்துக்கும் மேற்பட்ட தபால்காரர்கள் மற்றும் கிராம நல சேவகர்கள் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்டங்களைப் பணமாகப் பெறுவோருக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று அளிக்கப்பட்டு வருகிறது.

தபால் நிலையம்
தபால் நிலையம்

கொரோனா வைரஸின் தீவிரத்தால் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 நாள்கள் தேசிய ஊரடங்கு முடிவடைந்த நிலையில், தற்போது அது மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின்போது இந்திய தபால் துறையின் மூலம் 100 டன் மருந்துப் பொருள்கள், சோதனைக் கருவிகள், வென்டிலேட்டர்கள் ஆகியவை நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கும் பிற நுகர்வோருக்கும் வழங்கப்பட்டுள்ளன. ஊரடங்கு காலகட்டத்தில், மாநிலங்களுக்குள் மற்றும் பிற மாநிலங்களுக்கு இடையேயான தபால் போக்குவரத்தை மேற்கொள்ள மத்திய அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் இந்திய தபால்துறை சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

ஓய்வூதியங்கள் மற்றும் அரசுகளால் வழங்கப்படும் சமூக நலத் திட்டங்களை முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் என அனைத்துப் பயனாளர்களின் வீடுகளுக்கே சென்று அளித்திடுவதில் உறுதியாக உள்ளோம்’’ என்றார். மேலும், மத்திய உள்துறை அமைச்சகம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து உணவுப் பொருள்கள் மற்றும் ரேஷன் பொருள்களை மக்களின் வீடுகளுக்கே சென்று அளித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அஞ்சல்துறை பணியாளர்கள் தபால் எடுத்து அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்
அஞ்சல்துறை பணியாளர்கள் தபால் எடுத்து அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்

நடமாடும் தபால் நிலையங்கள் நாடு முழுவதும் தங்கு தடையின்றி அஞ்சல் மற்றும் நிதிச் சேவைகளை வழங்கி வருவதாகத் தெரிவித்த அவர், மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் ஊரடங்கை சிறப்பான முறையில் கடைப்பிடித்து கொரோனாவுக்கு எதிராக சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும் பாராட்டினார்.

அடுத்த கட்டுரைக்கு