Published:Updated:

`பிரதமர் மோடியும் தாயும்' - பாசப் பிணைப்பைச் சொல்லும் சில நினைவலைகள்!

பிரதமர் மோடி தாயுடன்...

``உங்களைப்போலவே நானும் பெருமைப்படுகிறேன். எதுவுமே என்னுடையது அல்ல. நான் ஒரு கருவி. எல்லாம் கடவுளின் செயல்.” - பிரதமர் மோடியின் தாய் ஹீராபென்

`பிரதமர் மோடியும் தாயும்' - பாசப் பிணைப்பைச் சொல்லும் சில நினைவலைகள்!

``உங்களைப்போலவே நானும் பெருமைப்படுகிறேன். எதுவுமே என்னுடையது அல்ல. நான் ஒரு கருவி. எல்லாம் கடவுளின் செயல்.” - பிரதமர் மோடியின் தாய் ஹீராபென்

Published:Updated:
பிரதமர் மோடி தாயுடன்...

"ஒரு புகழ்மிக்க நூற்றாண்டு, இறைவனின் காலடியில் இளைப்பாறுகிறது. என் தாயிடம் ஒரு துறவியின் பயணத்தையும், சுயநலம் இல்லாத கர்மயோகிக்கு உரிய அடையாளத்தையும், உயர்ந்த மதிப்பீடுகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையும் நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன்."

- தனது தாயின் மறைவுக்கு பிறகு ட்விட்டரில் உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடி தனது அரசியல் வாழ்க்கையில் முக்கியமான வெற்றித் தருணங்களில் தன் தாயாரைச் சந்தித்து, அவரிடம் ஆசி பெறுவதை வாடிக்கையாகக்கொண்டிருந்தார். 2016-ம் ஆண்டு பண மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியானதும் பல தரப்பிலிருந்து கடுமையான கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தன. அந்த நேரத்தில் மோடியின் தாயார் ஹீராபென் தன் மகனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், வங்கி வாசலில் வரிசையில் நின்ற காட்சி நாடு முழுவதும் பேசப்பட்டது. அண்மையில் குஜராத் தேர்தல் நடைபெற்றபோது தள்ளாத வயதிலும் ஜனநாயகக் கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்கு பதிவுசெய்தார் ஹீராபென்.

2015-ம் ஆண்டு ஃபேஸ்புக் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஸூக்கர்பெர்க்குடன் பிரதமர் மோடி நடத்திய உரையாடலில் தன் தாயாரைப் பற்றிப் பேசும்போது, "என் தந்தை இறந்ததும், என் தாயார் என்னை வளர்க்க மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார். வீடுகளில் வேலைக்காரியாக உழைத்திருக்கிறார்" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

மோடி - ஹீராபென் மோடி
மோடி - ஹீராபென் மோடி
ட்விட்டர்

கடந்த ஜூன் 18-ம் தேதி ஹீராபென் மோடி, தனது நூறாவது வயதில் அடியெடுத்து வைத்தபோது பிரதமர் மோடி அவரை வணங்கி ஆசி பெற்றார். அதோடு அவரின் பிளாக்கில் (Blog) ‘அம்மா’ என தலைப்பிடப்பட்டிருந்த அந்தப் பதிவில், தன்னுடைய தாய் குறித்த பல்வேறு தகவல்களை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார். அதில் சிலவற்றை இங்கு காணலாம்...

அதில், ``அம்மா என்பது வெறும் வார்த்தை அல்ல. பாசம், பொறுமை, நம்பிக்கை, வாழ்க்கை உணர்வு என எல்லாம் நிறைந்திருக்கும். எனது ஆளுமையில் எது சிறப்பாக இருந்தாலும் அது அம்மாவும் அப்பாவும் கொடுத்த பரிசு. டெல்லியில் நான் இருக்கும்போது ஏராளமான நினைவுகள் வந்து செல்கின்றன. என் அம்மா, அவரின் தாயின் பாசத்தைப் பெற்றதில்லை. அவர் சிறு வயதில் இருந்தபோதே ஃப்ளூ தொற்றுநோயால் அம்மாவை இழந்துவிட்டார். நமக்கெல்லாம் கிடைத்ததுபோல அம்மா மடியின் சுகம் அவருக்குக் கிடைக்கவில்லை. பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. அவரின் குழந்தைப் பருவம் வறுமை நிறைந்ததாக இருந்தது. திருமணமான பிறகு குடும்பத்தின் மூத்த மருமகளாக இருந்தார். வட்நகரில் நாங்கள் வசித்துவந்தது மிகவும் சிறிய வீடு. அந்த வீட்டில் ஜன்னல், கழிவறை, சமையலறை என எதுவும் இல்லை.

என் அம்மா அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார். வீட்டை நடத்தக் கூடுதல் பணம் தேவைப்படும். அதனால் அதிகாலையில் வீட்டு வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு மற்றவர்களின் வீடுகளுக்குப் பாத்திரம் தேய்க்கச் செல்வார். இருந்தபோதிலும், `நாங்கள் அவருக்கு உதவுவோம்’ என ஒரு நாளும் எதிர்பார்த்ததில்லை. எனக்கு உள்ளூர் குளத்தில் விளையாடுவது பிடிக்கும். எனவே, குளத்துக்குப் போகும்போது அழுக்குத் துணிகளையும் எடுத்துச் சென்று வைத்து வருவேன், இது அம்மாவுக்கு கொஞ்சம் உதவியாக இருக்கும். வீட்டு வேலை மட்டுமின்றி, பருத்தி உரிப்பது முதல் நூல் நூற்பு வரை அத்தனை வேலைகளையும் செய்வார்.

மோடி - ஹீராபென் மோடி
மோடி - ஹீராபென் மோடி
ட்விட்டர்
பிறரைச் சார்ந்திருப்பதையோ அல்லது தன் வேலையைச் செய்யும்படி பிறரைக் கேட்டுக்கொள்வதையோ அம்மா தவிர்த்து வந்தார்.
பிரதமர் மோடி

பருவமழை எங்கள் மண் வீட்டுக்குப் பல பிரச்னைகளைக் கொண்டுவரும். இருப்பினும், நாங்கள் குறைந்தபட்ச அசௌகரியத்தைக்கூட எதிர்கொள்வதை அம்மா சகித்துக்கொள்ள மாட்டார். ஜூன் மாத வெயிலில், எங்கள் மண் வீட்டின் கூரையின் மீது ஏறி, ஓடுகளைச் சரிசெய்வார். இருப்பினும், அவருடைய துணிச்சலான முயற்சிகளுக்கிடையிலும் எங்கள் வீடு மழையின் தாக்குதலுக்குத் தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு பழைமையானதாக இருந்தது.

மழைக்காலங்களில், எங்கள் வீட்டின் கூரை ஒழுகி, வீடு வெள்ளக்காடாகிவிடும். மழைநீரைச் சேகரிக்க, ஒழுகல் உள்ள இடங்களின்கீழ், வாளிகளையும் பாத்திரங்களையும் அம்மா வைப்பார். இந்த மோசமான சூழலிலும், அமைதியின் சின்னமாக அம்மா இருப்பார். இந்தத் தண்ணீரை அடுத்த சில நாள்களுக்கு அவர் பயன்படுத்திக்கொள்வார் என்றால் அது உங்களுக்கு வியப்பாக இருக்கும். தண்ணீர் சேமிப்புக்கு இதைவிட வேறு சிறந்த உதாரணம் எதுவாக இருக்க முடியும்!" என்றிருக்கிறார்.

மேலும் தொடர்ந்த மோடி, ``வீட்டை அலங்கரிப்பதில் மிகுந்த ஆர்வம்கொண்ட அம்மா, வீட்டைச் சுத்தப்படுத்தி அழகுபடுத்துவதற்கு கணிசமான நேரத்தை ஒதுக்குவார். மாட்டுச்சாணம் கொண்டு தரையை அவர் மெழுகுவார். மாட்டுச்சாணத்தால் தயாரிக்கப்பட்ட எருக்களை எரிக்கும்போது ஏராளமான புகை வரும். ஆனாலும், அதை வைத்துத்தான் ஜன்னல் இல்லாத எங்களது வீட்டில் அம்மா சமையல் செய்வார்.

மோடி - ஹீராபென் மோடி
மோடி - ஹீராபென் மோடி
ட்விட்டர்

சுவர்கள் முழுவதும் கரும்புகை படிவதால், அடிக்கடி வெள்ளையடிக்க வேண்டியிருக்கும். இதையும் அம்மாவே சில மாதங்களுக்கு ஒரு முறை செய்வார். இது போன்று செய்வது பாழடைந்து போகும் எங்கள் வீட்டில் புத்துணர்ச்சியூட்டும் வாசனையை ஏற்படுத்தும். வீட்டை அலங்கரிப்பதற்காக சிறு சிறு மண்பாண்டங்களையும் அம்மா தயாரிப்பார். பழைய வீட்டு உபயோகப் பொருள்களை மறு சுழற்சி செய்யும் இந்தியாவின் பழக்க வழக்கத்துக்கு அவர் முன்னோடியாகத் திகழ்ந்தார்.

அம்மாவின் மற்றொரு தனிப் பண்பையும் நான் நினைவுகூர விரும்புகிறேன். தண்ணீர் மற்றும் புளியங்கொட்டையில் பழைய காகிதங்களை நனைத்து பசை போன்ற ஒரு கூழை அம்மா தயாரிப்பார். இந்தக் கூழைப் பயன்படுத்தி சுவர்களில் கண்ணாடித் துண்டுகளை ஒட்டி அழகிய ஓவியங்களை அவர் உருவாக்குவார். கதவில் தொங்கவிடுவதற்காகச் சந்தையிலிருந்து சில சிறிய அலங்காரப் பொருள்களையும் அவர் வாங்கி வருவார்.
பிரதமர் மோடி

படுக்கைகள் சுத்தமாகவும், சரியாகவும் விரிக்கப்பட வேண்டும் என்பதில் அம்மா மிகுந்த கவனம் செலுத்துவார். படுக்கையில் சிறு தூசி இருந்தால்கூட அவர் சகித்துக்கொள்ள மாட்டார். படுக்கை விரிப்பில் லேசான சுருக்கம் இருந்தால்கூட அம்மா அதைச் சரிசெய்த பிறகே மீண்டும் விரிப்பார். இந்தப் பழக்கத்தை பின்பற்றுவதில் நாங்கள் அனைவரும் மிகுந்த கவனமாக இருப்போம். தற்போதும்கூட, இந்தத் தள்ளாத வயதிலும், அவருடைய படுக்கையில் லேசான சுருக்கம்கூட இருக்கக் கூடாது என அம்மா எதிர்பார்ப்பார்!

மோடி - ஹீராபென் மோடி
மோடி - ஹீராபென் மோடி
ட்விட்டர்

இதுதான் தற்போதும் நேர்த்தியான செயல்பாட்டுக்கு வழிவகுக்கிறது. காந்திநகரில் அவர் என்னுடைய சகோதரர்கள் மற்றும் என் உறவினர் குடும்பங்களுடன் வசித்தாலும், இப்போதும்கூட, இந்த வயதிலும் அவரது வேலைகளை அவரே செய்வதற்கு முயல்கிறார்.

தூய்மையில் அவர் கவனம் செலுத்துவதை இப்போதும்கூட காணலாம். நான் எப்போது அவரைக் காண காந்திநகருக்குச் சென்றாலும், அவரது கையால் எனக்கு இனிப்புகளை ஊட்டிவிடுவார். சிறு குழந்தைகளைச் சுத்தம் செய்யும் அம்மாவைப்போல, நான் சாப்பிட்டவுடன் கைக்குட்டையை எடுத்து எனது முகத்தைத் துடைத்துவிடுவார். அவர், எப்போதும் ஒரு கைக்குட்டை அல்லது சிறிய கைத்துண்டை அவரது சேலையிலேயே முடிந்து வைத்திருப்பார்.

அம்மா தூய்மையில் கவனம் செலுத்துவது பற்றிய பழங்கால நிகழ்வுகளை நினைவுகூர்வதாக இருந்தால், அவற்றை எழுதுவதற்கு காகிதங்கள் போதாது. தூய்மை மற்றும் துப்புரவில் கவனம் செலுத்துபவர்களைக் கண்டால், அவர்கள்மீது அம்மா மிகுந்த மரியாதை செலுத்துவார் என்பது அவரது மற்றொரு தனிப்பண்பு. வத் நகரில் எங்கள் வீட்டை ஒட்டிய சாக்கடையை சுத்தம் செய்ய யார் எப்போது வந்தாலும், அவர்களுக்கு அம்மா தேநீர் கொடுக்காமல் விட மாட்டார். வேலை பார்த்தவுடன் தேநீர் கிடைக்கும் என்பதால், எங்களது வீடு துப்புரவுப் பணியாளர்களிடையே மிகுந்த பிரசித்திபெற்றதாகும்.

மோடி - ஹீராபென் மோடி
மோடி - ஹீராபென் மோடி
ட்விட்டர்

நான் எப்போதும் நினைவுகூரும் அம்மாவின் மற்றொரு பழக்கம் என்னவென்றால், மற்ற உயிரினங்கள் மீதும் அவர் மிகுந்த பாசம் காட்டுவார். ஒவ்வொரு கோடைக்காலத்திலும், பறவைகளுக்காக அவர் பாத்திரங்களில் தண்ணீர் வைப்பார். எங்கள் வீட்டை சுற்றித்திரியும் தெரு நாய்களும், பசியின்றி இருப்பதை அவர் உறுதிசெய்வார்.

என் அப்பா, தேநீர் கடையிலிருந்து கொண்டு வரும் பாலாடையிலிருந்து சுவை மிகுந்த நெய்யை அம்மா தயாரிப்பார். இந்த நெய் எங்களது பயன்பாட்டுகு மட்டுமானதல்ல. எங்களது பக்கத்து வீடுகளிலுள்ள பசுமாடுகளுக்கும் உரிய பங்கு வழங்கப்படும். அந்தப் பசுக்களுக்கு அம்மா தினம்தோறும் ரொட்டிகளை வழங்குவார். காய்ந்துபோன ரொட்டிகளாக அல்லாமல், வீட்டில் தயாரிக்கப்பட்ட நெய்யைத்தடவி பாசத்துடன் அவற்றை வழங்குவார்.

உணவு தானியங்களைச் சிறு துளிகூட வீணாக்கக் கூடாது என அம்மா வலியுறுத்துவார். எங்களது பக்கத்து வீடுகளில் எப்போது திருமண விருந்து நடைபெற்றாலும், உணவுப்பொருள்களை வீணாக்கக் கூடாது என அவர் எப்போதும் எங்களிடம் நினைவூட்டுவார். `உன்னால் எவ்வளவு சாப்பிட முடியுமோ அதை மட்டும் சாப்பிடு’ – என்பதே எங்களது வீட்டில் தெளிவான விதிமுறையாக இருந்தது.

தற்போதும்கூட, அவரால் எவ்வளவு சாப்பிட முடியுமோ, அந்த அளவு சாப்பாட்டைத்தான் அம்மா எடுத்துக்கொள்வார். ஒரு கவளம் சாதத்தைக்கூட அவர் வீணாக்க மாட்டார். சிறந்த பழக்க வழக்கங்களுக்கென்றே பிறந்தவரான அவர், குறித்த நேரத்தில் சாப்பிடுவதோடு, சாப்பாடு நன்றாக செரிக்கும்விதமாக மென்று சாப்பிடுவார்.

மோடி - ஹீராபென் மோடி
மோடி - ஹீராபென் மோடி
ட்விட்டர்

நான் வீட்டைவிட்டுச் செல்வது என்று முடிவெடுத்தபோது, அதை அவரிடம் சொல்வதற்கு முன்னதாகவே முடிவு அவருக்குத் தெரிந்திருந்தது. வெளி உலகுக்குச் சென்று இந்த உலகம் பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்று என் பெற்றோரிடம் நான் அடிக்கடி கூறி வந்ததுண்டு. சுவாமி விவேகானந்தரைப் பற்றி அவர்களிடம் அடிக்கடி கூறி ராமகிருஷ்ணா மிஷன் மடத்துக்குச் செல்ல வேண்டுமென்ற என் விருப்பத்தை தெரிவித்திருந்தேன். இது பல நாள்கள் நீடித்தது. இறுதியாக ஒருநாள் நான் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்து, பெற்றோரின் ஆசியை வேண்டினேன். மனம் வெதும்பி என் தந்தையார் என்னிடம் கூறினார் `உன் விருப்பம்.’ அவர்களது ஆசி இன்றி வீட்டைவிட்டு வெளியேற மாட்டேன் என்று நான் அவர்களிடம் தெளிவாகக் கூறினேன். அப்போது என் தாயார் `உனது மனம் என்ன சொல்கிறதோ அதுபோல் செய்’ என்று கூறினார். அப்போதைக்கு எனது தந்தையைச் சமாளிப்பதற்காக ஒரு நல்ல ஜோசியரிடம் எனது ஜாதகத்தைக் காட்ட வேண்டும் என்று கோரினார். என் தந்தையாரும், உறவினரான மற்றொரு ஜோசியரிடம் எனது ஜாதகத்தைக் காண்பித்து ஆலோசனை பெற்றார். எனது ஜாதகத்தைப் பார்த்த அந்த உறவினரான ஜோசியக்காரர் `இவனது வழி வித்தியாசமானது. கடவுள் இவனுக்காக வைத்திருக்கும் வழியில் மட்டுமே இந்தப் பையன் செல்வான்’ என்று கூறினார்.

 ஹீராபென் மோடி
ஹீராபென் மோடி
ட்விட்டர்

சில மணி நேரத்துக்குப் பிறகு நான் வீட்டைவிட்டு வெளியேறினேன். இந்தச் சமயத்தில் என் தந்தையாரும் எனது முடிவை ஏற்றுக்கொண்டு எனக்கு ஆசீர்வாதங்களை வழங்கினார். `மிகச் சிறப்பான ஒரு தொடக்கம் அமைய வேண்டும்’ என்று வாழ்த்தி என்னுடைய தாயார் எனக்குத் தயிரும் வெல்லமும் கலந்து வழங்கினார். `என் வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிடும்’ என்று என் தாயார் அறிந்திருந்தார்.

அன்னையர் அனைவருமே எப்போதுமே தங்களது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவர்கள் என்றபோதிலும், தன் குழந்தை வீட்டைவிட்டு வெளியேறுகிறது என்னும்போது உணர்வுகளைக் கட்டுப்படுத்த இயலாமல் சிரமப்படுபவர்களாகவே இருக்கிறார்கள். கண்களில் நீர் தளும்ப எனது எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கு மனம் நிறைந்த ஆசிகளை வழங்கி அவர் அனுப்பிவைத்தார்.

வீட்டைவிட்டு வெளியேறிய பிறகு நான் எங்கிருந்தாலும், எப்படி இருந்தாலும் என்னுடைய அன்னையின் ஆசி எப்போதும் என்னைப் பின்தொடர்ந்தது. அம்மா எப்போதும் என்னுடன் குஜராத்தி மொழியில்தான் பேசுவார். தம்மைவிட வயதில் குறைந்தவராக அல்லது சம வயதினராக இருந்தாலும் குஜராத்தி மொழியில் `நீ’ என்று அழைப்பதற்கு 'து' என்று சொல்வார்கள். ஆனால் அதே சமயம் தம்மைவிட மூத்தவர்களை அவ்வாறு அழைக்கும்போது நீங்கள் என்று பொருள்படும் வகையில் 'தமே' என்று கூறுவார்கள். குழந்தையாக இருந்தபோது என்னை `து’ என்று அழைத்துவந்த என்னுடைய தாயார், வீட்டைவிட்டு வெளியேறி, நான் என் சொந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்த பிறகு என்னை 'து' என்று எப்போதும் அழைத்ததில்லை. அதற்குப் பிறகு அவர்கள் என்னை `தமே’ என்றோ அல்லது `ஆப்’ என்றோதான் விளித்தார்கள்.

உறுதியான முடிவுகளை எடுப்பதற்கு என் தாயார் என்னை எப்போதும் ஊக்குவித்துவந்தார்கள். அதேநேரத்தில் ஏழைகள் நலன் குறித்தும் அக்கறைகொள்ளும் வகையில் அவர்களது வளர்ப்புமுறை அமைந்திருந்தது. குஜராத்தின் முதலமைச்சராக நான் ஆவது என்று முடிவெடுக்கப்பட்டபோது நான் மாநிலத்திலேயே இல்லை. குஜராத்துக்குத் திரும்பியதும் நேராக என் தாயாரைச் சந்திக்கச் சென்றேன். அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. என்னிடம் மீண்டும் நான் அவருடன் தங்கப்போகிறேனா என்று ஆர்வத்துடன் விசாரித்தார்கள். ஆனால், அவர்களுக்கு நான் என்ன பதில் கூறப்போகிறேன் என்பது நன்றாகவே தெரியும். அதனால் `அரசில் உனது பணி குறித்து எனக்குத் தெரியாது. ஆனாலும் எந்தக் காரணத்தைகொண்டும் லஞ்சம் மட்டும் வாங்காதே’ என்று கூறினார்.

டெல்லிக்குப் புலம்பெயர்ந்த பிறகு என் அன்னையுடனான சந்திப்பு முன்பிருந்ததைவிட மிகவும் குறைந்தது. சில நேரங்களில் நான் காந்திநகருக்குச் செல்லும்போது சில மணித்துளிகள் அவரைச் சந்திப்பேன். முன்பு அவரை அடிக்கடி சந்தித்ததைப்போல இப்போதெல்லாம் சந்திக்க முடிவதில்லை. ஆனாலும் என்னைச் சந்திக்க முடியவில்லை என்ற குறை அவரிடம் இருப்பதுபோலவும் நான் உணர்ந்ததில்லை. அவரின் அன்பும் பாசமும் மாறாமல் நிலைத்திருக்கின்றன. அவரது ஆசீர்வாதங்களைப்போல.

என் தாயார் அடிக்கடி கேட்பதுண்டு, `டெல்லியில் நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயா, உனக்குப் பிடித்திருக்கிறதா?’ என்று.
பிரதமர் மோடி

அவருக்கு நான் அவரைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டு, எனக்கிருக்கும் பெரும் பொறுப்புகள் மீதான அக்கறையை நழுவவிட்டுவிடக் கூடாது என்ற கவலை. அவரிடம் எப்போது தொலைபேசியில் பேசினாலும், `எந்தத் தப்பையும் செய்துவிடாதே. யாருக்கும் எந்தத் தீங்கும் செய்துவிடாதே. ஏழைகளுக்காகப் பணியாற்று’ என்று கூறிக்கொண்டே இருப்பார்.

மோடி - ஹீராபென் மோடி
மோடி - ஹீராபென் மோடி
ட்விட்டர்

என் பெற்றோர்களின் வாழ்க்கையைத் திரும்பிப்பார்க்கும்போது அவர்களது நேர்மையும் சுயமரியாதையும் அவர்களின் மிகப்பெரும் பண்புகளாக இருந்திருக்கின்றன என்பதை உணர முடிகிறது.

ஏழ்மையும், அதைத் தொடர்ந்த சவால்களும் இருந்தபோதிலும் என் பெற்றோர் கண்ணியத்தைக் கைவிடவில்லை, சுயமரியாதையை விட்டுத் தரவில்லை என்பதை உணரலாம். எந்தச் சவாலையும் எதிர்கொள்ள அவர்கள் கற்றுவைத்திருந்த ஒரே மந்திரம் கடின உழைப்பு, தொடர் கடின உழைப்பு.

பல ஆண்டுகள் கடந்துவிட்டன. தற்போது பிரதமராக இருக்கிறேன். அம்மாவிடம் பலர் `உன் மகன் பிரதமரானதில்  பெருமைப்படுகிறாயா?’ எனக் கேட்பார்கள். அதற்கு,  `உங்களைப்போலவே நானும் பெருமைப்படுகிறேன். எதுவுமே என்னுடையது அல்ல. நான் ஒரு கருவி. எல்லாம் கடவுளின் செயல்’ என்பார். 

நான் இதுவரை எந்த அரசு நிகழ்ச்சிக்கும், பொது நிகழ்ச்சிக்கும் அம்மாவை அழைத்துச் சென்றதில்லை. இரண்டே முறை மட்டும்தான் என்னுடன் வந்திருக்கிறார். அதில் ஒன்று,  ஸ்ரீநகரில் உள்ள லால் செளக்கில் மூவர்ணக்கொடியை ஏற்றிவிட்டுத் திரும்பியபோது, அகமதாபாத்தில் நடந்த, மக்கள் மரியாதை தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேடையில் எனது நெற்றியில் திலகமிட்டார். மற்றொன்று, நான் 2001-ல் முதல்வராகப் பொறுப்பேற்றபோது என்னுடன் வந்தார். அதுதான் அவர் என்னுடன் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி. 

இறுதிச்சடங்கில் மோடி
இறுதிச்சடங்கில் மோடி
ட்விட்டர்

பஞ்சாயத்துத் தேர்தல் முதல் பார்லிமென்ட் தேர்தல் வரை அனைத்துத் தேர்தல்களிபோதும் தவறாமல் தனது  ஜனநாயகக் கடமையை ஆற்றுவார்.  இன்றுவரை என் அம்மாவின் பெயரில் எந்தச் சொத்தும் இல்லை. அவர் தங்க ஆபரணங்கள் அணிந்து நான் பார்த்ததில்லை. அதை அவர் விரும்பியதும் இல்லை. என் அம்மா கைவைத்தியம்  தெரிந்து வைத்திருப்பார். இன்னும் வாட்நகரில் உள்ள வீட்டின் முன்பு பலர் தங்களது குழந்தைகளுடன் அம்மாவிடம் சிகிச்சைபெற வருவார்கள்.

என் அம்மாவின் வாழ்க்கையில், இந்தியப் பெண்களின் சக்தியைப் பார்க்கிறேன். தவம், தியாகம் மற்றும் சேவை ஆகியவற்றைக் காண்கிறேன். அம்மாவையும், அவரைப் போன்ற கோடிக்கணக்கான பெண்களையும் பார்க்கும்போதெல்லாம், இந்தியப் பெண்களால் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை என்று தோன்றுகிறது.
பிரதமர் மோடி

ஒவ்வொரு வறுமைக்கதைக்குப் பின்னாலும், ஓர் அன்னையின் அற்புதம் நிறைந்த தியாகம் ஒளிந்திருக்கிறது. ஒவ்வொரு சவாலுக்கும் பின்னே ஓர் அன்னையின் உறுதியான முடிவு ஒளிந்திருக்கிறது. அம்மா உங்களுக்கு மிக மகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துகள். நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்களைப் பற்றி விரிவாகப் பொதுவெளியில் எழுதும் துணிச்சல் இதுவரை எனக்கு ஏற்பட்டதில்லை. எங்கள் அனைவருக்கும் உங்களது ஆசீர்வாதங்களை வேண்டி நிற்கிறேன். உங்கள் காலடியில் தலைவணங்குகிறேன்” என்று தன் தாயுடனான நினைவலைகளை நெகிழ்வோடும் உருக்கமாகவும் பதிவிட்டிருந்தார் பிரதமர் மோடி.