Published:Updated:

`10 நாள் தனிமைபடுத்தப்படும் புது கைதிகள்' - உ.பி காவல்துறையின் சிறைப் பாதுகாப்பு ஏற்பாடுகள் #Corona

கொரோனா
கொரோனா

``சிறை கையேட்டில் பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது, தொற்றுநோய் பரவலின்போது கைதிகளைக் கையாள்வது குறித்த விளக்கங்கள் உள்ளன" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளுக்குப் புதிய கைதிகள் அழைத்துச் செல்லப்படும் முன், பத்து நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அம்மாநிலத்தின் சிறைத்துறை இயக்குநர் ஆனந்த் குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசுகையில், ``சிறைச்சாலைகளுக்குப் புதிதாக வருபவர்கள் அனைவரையும் சோதித்துப் பார்க்க வேண்டியது அவசியம். ஏனெனில், கைதிகள் ஒவ்வொருவரும் அருகருகே இருக்கிறார்கள். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியமான ஒன்று. ஒவ்வொரு கைதியையும் பரிசோதிக்க மருத்துவர்கள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்திலுள்ள 71 சிறைச்சாலைகளிலும் சிறப்புப் பணிக் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. மாநில தலைமையகம் தினமும் வழங்கப்படும் அறிக்கைகளைப் பார்வையிட உள்ளது" என்றார்.

கொரோனா
கொரோனா

தொடர்ந்து அவர் பேசுகையில், ``சிறையில் தனிமைபடுத்தப்பட்ட செல்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறைக்குள் புதிதாக வரும் கைதிகள் வைரஸ் அறிகுறியுடன் இருக்கும் பட்சத்தில் பத்து நாள்களுக்கு அங்கு தனிமைபடுத்தப்படுவார்கள். வைரஸ் அறிகுறிகளுடன் உள்ள பழைய கைதிகளும் தனிமைப்படுத்தப்பட்ட செல்களுக்கு அனுப்பப்படுவார்கள். வைரஸ் தொற்றை உறுதிப்படுத்தும் பரிசோதனைகளை தலைமை மருத்துவ அதிகாரி, சிறை மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றுவார். சிறைக் கண்காணிப்பாளர்கள், உடல் வெப்பநிலையைப் பரிசோதிக்கும் கருவிகளைப் பெற்று சிறைகளில் நுழைபவர்களின் உடல் வெப்பத்தைச் சோதிக்க அவற்றைப் பயன்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ``சிறை கையேட்டில் பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது, தொற்றுநோய்ப் பரவலின்போது கைதிகளைக் கையாள்வது குறித்த விளக்கங்கள் உள்ளன" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது. நேற்றுவரை 151 ஆக இருந்த நிலையில் இன்று 15 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான 166 பேரில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 15 பேர் குணமாகியுள்ளனர் என்று மத்திய அரசு தகவல்களை வெளியிட்டுள்ளது. மேலும், கொரோனா அச்சம் காரணமாக பயணிகள் வருகை குறைந்ததால் நாடு முழுவதும் 168 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸுக்கு வைட்டமின் சி உணவுகள் தடுப்பு மருந்தா!? - நிபுணர் விளக்கம் #Covid19 #Corona
அடுத்த கட்டுரைக்கு