Election bannerElection banner
Published:Updated:

கொரோனா சடலங்களை அடக்கம் செய்ய ₹30,000 முதல் ஒரு லட்சம் வரை... கல்லா கட்டும் தனியார் நிறுவனங்கள்!

கொரோனா மரணங்கள்
கொரோனா மரணங்கள் ( Representational Image )

மருத்துவமனையிலிருந்து உடலை பெறுவது முதல் தகனம் செய்து சாம்பலைக் கொடுப்பது வரை அனைத்தையும் அவர்களே பார்த்துக் கொள்வார்கள். இந்த நிறுவனங்கள் மக்களின் பொருளாதார சக்திக்கு ஏற்ப பேக்கேஜ் அடிப்படையில் வசூலிக்கின்றன. ஹைதராபாத்தில் ஒரு உடலை தகனம் செய்ய ரூ.32,000 வசூலிக்கப்படுகிறது.

இந்தியா முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அசாதாரண சூழலை எதிர்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸின் முதல் அலையில், தடுப்பூசிகள் கிடைத்துவிட்டால் நிலை மாறும் என்ற நம்பிக்கையிலேயே நாள்களைக் கடந்து வந்துவிட்டோம். தற்போது, இரண்டாம் அலையின் தீவிரம் நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த முறை நம்மிடம் தடுப்பூசிகள் இருந்தும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை குறைக்க முடியவில்லை. பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தடுப்பூசி தட்டுப்பாடு, மக்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதது மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை இந்த நிலைக்குக் காரணம்.

இந்தியாவில் மத்திய அரசின் தரவுகளின் படி, ஒவ்வொரு மணி நேரத்துக்கும் சுமார் 60 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து வருகின்றனர். பல மாநிலங்களில் நிலைமை கைமீறிச் சென்றுவிட்டது என்றே சொல்லலாம். முதல் அலையில் பெரிதான உயிர்ச் சேதங்களைப் பார்க்காத உத்தரப்பிரதேசம், இரண்டாம் அலையில் மிகவும் மோசமான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. தடுப்பூசிக்காகக் காத்திருப்போர் ஒருபுறமிருக்க, மறுபுறம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாமல் தகன மேடைகளில் காத்திருப்போரின் கூட்டமும் அதிகரித்திருக்கிறது.

கொரோனா  பரிசோதனை
கொரோனா பரிசோதனை

கொரோனா பாதிக்கப்பட்டு ஒருவர் இறந்துவிட்டால், அவரது உறவினர்கள்கூட அருகில் செல்ல அச்சப்படுகின்றனர். பெரும்பாலும், ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துவிட்டால் அவரது உடலானது மருத்துவமனையிலிருந்து நேரடியாக மயானத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இத்தனை காலமாக தங்கள் அன்புக்குப் பாத்திரமாய் இருந்தவர்களுக்கு இறுதி மரியாதைகூட செலுத்த முடியாத நிலைக்கு மக்களை இந்தக் கொரோனா தொற்று தள்ளியிருக்கிறது.

ஒருவர் இறந்துவிட்டால் ஊர்கூடி அழுது, முறையாக இறுதிச் சடங்குகள் செய்து அடக்கம் செய்வதுதான் பொது வழக்கம். ஆனால், தற்போது இறுதிச் சடங்குகள்கூட மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையை சில கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு புது தொழில் ஒன்றைத் தொடங்கி இருக்கின்றன.

இந்தியாவில் சில வருடங்களாக இறுதிச் சடங்கு சேவைகள் பல்வேறு நிறுவனங்களால் ஆர்டர் எடுத்துச் செய்யப்பட்டு வருகின்றன. ஒருவர் உயிரிழந்துவிட்டால் அவரது உடலை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குக்கொண்டு வருவது முதல் இறுதிச் சடங்குகள் மற்றும் தகனம் செய்து கையில் அஸ்தியைக் கொடுப்பது வரை அனைத்தையும் பேக்கேஜ் முறையில் செய்து வருகின்றனர்.

கொரோனா மரணங்கள்
கொரோனா மரணங்கள்
Representational Image

இந்தியா முழுவதும் ஹைதராபாத், மும்பை, சென்னை எனப் பல இடங்களில் ஏராளமான கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த பணிகளைச் செய்து வருகின்றன. அதிலும், குறிப்பாக தற்போது இருக்கும் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்தி இந்த நிறுவனங்கள் கொரோனா நோயாளிகளின் உடல்களை பேக்கேஜ் முறையில் தகனம் செய்து வருகின்றனர்.

இறப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் முன்கூட்டியே பேசி முன்பணம் பெற்றுவிடும் நிறுவனங்கள் முறையாக இறுதிச் சடங்குகள் செய்து கொரோனா நோயாளிகளின் உடல்களைத் தகனம் செய்து வருகின்றன. ஒரு கொரோனா நோயாளி உடலை அடக்கம் செய்வதற்குக் குறைந்தது ரூ.30,000 முதல் அதிகபட்சம் ரூ.1,00,000 வரை இந்நிறுவனங்கள் வசூலிக்கின்றன.

கொரோனா நோயாளிகளின் உடல்களைத் தகனம் செய்வதற்கான சேவை தற்போது இந்தியாவின் 7 முக்கிய நகரங்களில் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த சேவையில் முதல் நிறுவனமாகக் களத்தில் இறங்கியிருக்கிறது பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அந்த்யேஷ்டி இறுதி சேவை நிறுவனம். சென்னை, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் முதற்கட்டமாக கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் உடல்களுக்கான பிரத்யேக சேவையினை அந்த்யேஷ்டி நிறுவனம் தொடங்கியிருக்கிறது. இந்த நிறுவனம், ஒரு கொரோனா நோயாளியின் உடலைத் தகனம் செய்வதற்குக் குறைந்தபட்சம் ரூ.32,000 வசூலிக்கிறது.

அந்த்யேஷ்டி இறுதி சேவைகள் நிறுவனம்
அந்த்யேஷ்டி இறுதி சேவைகள் நிறுவனம்

மக்களின் பொருளாதார சக்திக்கு ஏற்ப பேக்கேஜ் முறையில் அந்த்யேஷ்டி இறுதி சேவை நிறுவனம் வசூலிக்கிறது. கொரோனா பாதிப்பால் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டால் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் அங்கிருந்து அந்த உடலைத் தனி வாகனத்தில் ஏற்றி வந்து, மயானத்தில் முன்னதாகவே தகனம் செய்வதற்கு ஏதுவாக முன்பதிவு செய்துவிடுவார்கள்.

பின்னர், முறையாக மத மற்றும் சம்பிரதாய அடிப்படையில் பண்டிதர்களை வைத்து உறவினர்களின் விருப்பத்துக்கேற்ப இறுதிச் சடங்குகளைச் செய்து, எரியூட்டப்பட்டால் அஸ்தியை உறவினர்களிடம் ஒப்படைத்துவிடுவார்கள். இறுதியாக உயிரிழந்தோரின் இறப்புச் சான்றிதழ் வரை அனைத்தையும் பதிவு செய்து பெற்றுக்கொடுத்து விடுவார்கள். இந்த நிறுவனங்களிடம் முறையாக முன்பதிவு செய்ய வேண்டியது ஒன்று மட்டும்தான் தேவைப்படுவோரின் வேலையாக இருக்கும். மற்றபடி அனைத்தையும் அவர்களே முடித்துக் கொடுத்து விடுவார்கள். அதற்கேற்ப வசூலித்தும்விடுவார்கள்.

கார்ப்பரேட் நிறுவனங்களின் இந்த சேவைகள் தற்போது முதற்கட்டமாக ஹைதராபாத்தில் நடைமுறைக்கு வந்திருக்கின்றன. ஹைதராபாத்தில் நாளுக்கு நாள் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதன் காரணமாக, மயானங்களில் சடலங்களை எரியூட்டுவதற்கும், புதைப்பதற்கும் மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் அங்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் இறுதிச் சேவைகளைத் தொடங்கி இருப்பது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அந்த்யேஷ்டி நிறுவனம் மற்றும் இதர சில நிறுவனங்கள் ஹைதராபாத்தில் ஒரு நாளைக்கு 5 - 10 உடல்களை நல்லடக்கம் செய்து வருகின்றன.

கொரோனா உயிரிழப்புகள்
கொரோனா உயிரிழப்புகள்

`உடல்களை அடக்கம் செய்ய 30,000 ரூபாயா?' என்று அதிர்ச்சி அடையும் மக்கள் இந்த நிறுவனங்கள் துணிந்து மேற்கொள்ளும் பணிகளைக் கண்டு மன நிறைவுடன் கேட்ட பணத்தைக் கொடுத்து வருகின்றனராம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு