Published:Updated:

`அதிக கட்டணம்.. முறையற்ற செயல்பாடு?’ -மும்பையில் தனியார் ஆய்வகங்களுக்கு `செக்’ வைத்த மாநகராட்சி

கொரோனா வைரஸ் ஆய்வு
கொரோனா வைரஸ் ஆய்வு

ஒரு வேளை மக்களுக்கு நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் தங்களைத் தானே தனிமைப்படுத்தி கொண்டு அரசின் 24 மணி நேர உதவி எண்ணைத் தொடர்புகொண்டு தங்கள் நிலையைத் தெரிவிக்கலாம்.

இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் தீவிர நிலையை அடைந்திருக்கிறது. பல மாநிலங்களில் நோய்த் தாக்கம் மூன்றாம் கட்டத்தை அடைந்திருக்கும் வேளையில் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் நோய் தாக்கத்தைக் குறைக்கப் போராடி வருகின்றன. இந்தியாவில் கொரோனா நோய் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், நாடு முழுவதும் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 33,000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா யுத்தம்
கொரோனா யுத்தம்

இந்தியாவில் கொரோனா நோயின் தாக்கம் பல மாநிலங்களில் பரவியுள்ள போதிலும் சில மாநிலங்கள் மட்டும் மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. அந்த வகையில் கொரோனா வைரஸால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள மொத்த உயிரிழப்பில் 45% மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் பதிவாகி இருக்கிறது. மகாராஷ்டிராவில் கொரோனா தாக்கம் மூன்றாம் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அம்மாநிலத்தில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கையும் மளமளவென அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு அங்கு இதுவரை 432 பேர் இறந்துள்ளனர், மேலும் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனைகளில் 9,318 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மற்றும் புனே பகுதிகள்தான் தொடர்ந்து மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. மும்பையில் மட்டும் இதுவரை 270 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்குளாகி இறந்துள்ளனர். இது மகாராஷ்டிராவின் மொத்த எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையில் மட்டும் 6,600 பேருக்கு இதுவரை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மும்பையில் நோய் தீவிரத்தைக் குறைக்க மாநில அரசுடன் தற்போது மத்திய அரசின் பிரத்யேக மத்தியக் குழு ஒன்றும் களம் இறங்கியிருக்கிறது.

மும்பை தாராவியில்  ஒரு மெடிக்கல் கேம்ப்...
மும்பை தாராவியில் ஒரு மெடிக்கல் கேம்ப்...

இந்த நிலையில், தற்போது மும்பை மாநகராட்சி ``கான்டாக்ட் டிரேசிங்" முறையை நடைமுறைப்படுத்தி நோய் பாதிப்பு உள்ளவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. நோய் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்துவதே இந்த `கான்டாக்ட் டிரேசிங்’ முறையின் நோக்கம்.

முன்னதாக கொரோனா பரிசோதனைகள் அரசு ஆய்வகங்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், நாளுக்கு நாள் நோய் பாதிப்பு உடையவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தனியார் ஆய்வகங்களும் கொரோனாவுக்கான பரிசோதனைகளை மேற்கொள்ள அரசு அனுமதி அளித்திருந்தது. தொடர்ந்து கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தையும் அரசு நிர்ணயம் செய்தது. பரிசோதனை முடிவுகள் மற்றும் நோயாளிகளின் விவரத்தையும் உடனுக்குடன் சுகாதார துறைக்குச் சமர்ப்பிக்கவும் அரசு வலியுறுத்தி இருந்தது.

கொரோனா
கொரோனா
Representational image

இந்த நிலையில், மும்பையில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு புறம் உயர்ந்துகொண்டிருக்க மறுபுறம் தனியார் ஆய்வகங்கள் முறையாகப் பரிசோதனை விவரங்களை அரசுக்குத் தெரிவிக்காமலும் தனிச்சையாகச் செயல்படுவதாகவும் குற்றசாட்டுகள் எழுந்ததன் அடிப்படையில் மும்பை மாநகராட்சி தொடர்ந்து தனியார் ஆய்வகங்கள் கோவிட்-19 பரிசோதனைக்குப் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக்கே சென்று ரத்த மாதிரிகளைச் சேகரிக்க தடை விதித்துள்ளது.

மேலும், ஒரு வேளை மக்களுக்கு நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் தங்களைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டு அரசின் 24 மணி நேர உதவி எண்ணைத் தொடர்புகொண்டு தங்கள் நிலையைத் தெரிவிக்கலாம். இல்லையென்றால் தனியார் ஆய்வகங்களுக்கு நேரில் சென்று ரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு அளிக்கலாம்" என்றும் மும்பை மாநகராட்சி கூடுதல் ஆணையர் சுரேஷ் கக்கானி தெரிவித்துள்ளார்.

கொரோனா
கொரோனா
Representational image

வீட்டுக்குச் சென்று ரத்த மாதிரிகளைப் பரிசோதனைக்கு சேகரிக்கும் தனியார் ஆய்வகங்கள் அது குறித்து முறையாக அரசுக்குத் தெரிவிப்பதில்லை. அதேபோல் தாங்கள் நிர்ணயித்துள்ள கட்டணத்தை விடவும் அதிகமாக தனியார் ஆய்வகங்கள் வசூலிப்பதாகவும், அரசு நிர்ணயித்த 4,500 ரூபாய் கட்டணம் மீது சேவைக் கட்டணம், பாதுகாப்பு உபகரண கட்டணங்கள் என எல்லாம் சேர்த்து 7,000 ரூபாய் வரையில் வசூலிப்பதாகவும் மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மும்பை மாநகராட்சியின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள மும்பை தைரோ கேர் ஆய்வகத்தின் உரிமையாளர் ஆரோக்கிய சாமி வேலுமணி, ``மும்பை மாநகராட்சி எங்களை அணுகி கேட்டுக்கொண்டதன் பேரில்தான் நாங்கள் மக்களுக்குப் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறோம்.

எங்கள் ஆய்வகங்களுக்கு வந்து பரிசோதனைகள் செய்து கொள்பவர்களைத் தவிர்த்து அரசின் கோரிக்கைபடி அவர்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் நேரடியாக வீட்டுக்கே சென்று பரிசோதனை மாதிரிகளைச் சேகரித்து முடிவுகளை 24 மணி நேரத்தில் மும்பை மாநகராட்சிக்கு முறையாக சமர்ப்பித்து வருகிறோம். தற்போது எங்களிடமும் நிலுவையில் பரிசோதனைகள் ஏதும் இல்லை. மும்பை மாநகராட்சியின் வழிகாட்டுதலின்படிதான் செயல்பட்டு வருகிறோம், மேற்கொண்டு எங்களுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ள முறையான கோரிக்கைகள் வரும் வரை நாங்களும் பரிசோதனைகளை மேற்கொள்ளப் போவதில்லை" என்று தெரிவித்தார்.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

இந்த நிலையில், மும்பையில் பதிவாகியுள்ள மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 78 சதவிகிதம் கான்டாக்ட் டிரேசிங் மூலம் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மும்பையில் பெரும்பாலானவர்களுக்கு அறிகுறிகளற்ற கொரோனா நோய் பாதிப்பு அதிகளவில் பதிவாகி வருவதைத் தொடர்ந்து அத்தகையவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் பணிகளில் மும்பை மாநகராட்சி தீவிரமாக இறங்கியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு