Published:Updated:

உ.பி தேர்தல்: அரசுப் பணிகளில் 40%, காவல்துறையில் 25%; காங்கிரஸின் பெண்களுக்கான தேர்தல் அறிக்கை!

பிரியங்கா காந்தி
News
பிரியங்கா காந்தி

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு அரசு வேலைகளில் 40 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவதாகவும், காவல்துறையில் பெண்களுக்கு 25 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களிடம் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையில் முன்வைக்கும் நலத்திட்டங்களும் அவர்கள் வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது. பெரும்பாலும் மக்களின் அத்தியாவசியத் தேவையைப் பொறுத்தே நலத்திட்டங்களைச் சிந்தித்து அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுக்கும். இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் வரும் 2022-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நடக்கவிருக்கும் தேர்தலை பெண்களின் நலத்திட்டங்களை மையப்படுத்தி காங்கிரஸ் கட்சி சந்திக்க உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், உத்தரபிரதேசத்துக்கான தேர்தல் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி வதேரா, பெண்களுக்கென்றே பிரத்யேக தேர்தல் அறிக்கை ஒன்றை புதன்கிழமை வெளியிட்டார்.

அதில், உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு அரசு வேலைகளில் 40 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும், காவல்துறையில் பெண்களுக்கு 25 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உ.பி.பெண் போலீஸாருடன் பிரியங்கா காந்தி
உ.பி.பெண் போலீஸாருடன் பிரியங்கா காந்தி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த அறிவிப்புகள், லக்னோவில் பிரியங்கா காந்தி வதேரா வெளியிட்ட, `சக்தி விதான் மகிளா கோஷ்னா பத்ரா (Shakti Vidhan Mahila Ghoshna Patra)’ என்ற சிறப்பு அறிக்கையின் ஒரு பகுதியாக வெளிவந்துள்ளன. அதில், 2022-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பெண் வேட்பாளர்களுக்கு முன்பு கூறப்பட்ட 40 சதவிகித ஒதுக்கீட்டை விட கூடுதலாக தற்போது 50 சதவிகித ஒதுக்கீட்டை வழங்குவதாக காங்கிரஸ் கட்சி உறுதி அளித்துள்ளது.

இந்த அறிக்கையில் பெண்களின் சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட பல அம்சங்களை காங்கிரஸ் பட்டியலிட்டுள்ளது என்று பிரியங்கா காந்தி வதேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள் குறித்து பிரியங்கா பேசுகையில், ``காங்கிரஸ் கட்சி எப்போதுமே பெண்களின் பிரச்னைகளுக்குத் தீர்வளிப்பதில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்பதை நிரூபிக்கும் வகையில், பல தசாப்தங்களுக்கு முன்னரே நாட்டிற்கு முதல் பெண் பிரதமரை வழங்கியது. மற்ற நாடுகளில் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக இருந்தபோதும் நமது நாட்டில் முதல் பெண் பிரதமராக இருந்தார் இந்திரா காந்தி. அமெரிக்கா சமீபத்தில்தான் ஒரு முதல் பெண் துணை ஜனாதிபதியையே தேர்ந்தெடுத்துள்ளது" என்று கூறினார்.

பெண்களுக்கான காங்கிரஸின் தேர்தல் அறிக்கை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறிய பிரியங்கா, அதில் சுய மரியாதை, தற்சார்பு, கல்வி, மரியாதை, பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் என 6 அம்சங்களை மையப்படுத்தி நலத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

முதல் பகுதியில் ஆண்களுக்கு நிகராக, அரசியலில் பெண்களின் சுயமரியாதையை அதிகரிப்பதில் கவனம் செலுத்தும் இந்தத் தேர்தல் அறிக்கை, அரசியலில் பெண்களின் பங்களிப்பை படிப்படியாக 50% அதிகரிப்பதை காங்கிரஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது என்கிறது.

நூறு நாள் வேலை வாய்ப்பு
நூறு நாள் வேலை வாய்ப்பு

அதுமட்டுமல்லாமல், பெண்களுக்கு மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்கப்படும் என்றும், கிராமப்புற பணியாளர்கள் தங்கள் பங்களிப்பை அதிகரிக்க கட்சியால் அதிகாரம் அளிக்கப்படும் என்றும், மேலும் பெண்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தின் MGNREGA (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act) கீழ் முன்னுரிமை பெறுவார்கள் எனவும் உறுதியளித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும்,பொது விநியோக முறை கடைகளில் 50 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்றும், 50 சதவிகிதம் வரை பெண்களை வேலைக்கு அமர்த்தும் வணிக நிறுவனங்களுக்கு வரி விலக்கு மற்றும் உதவி வழங்கப்படும் என்றும், பெண் தொழில்முனைவோருக்கு கடன், வரிச்சலுகை போன்றவை வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.

பெண் கல்விக்கான திட்டங்களில், 12-ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெறும் பெண்களுக்கு இலவச மொபைல் போன்கள் வழங்கப்படும் என்றும், பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கை நலத்திட்டங்களை பட்டியலிடுகிறது.

அதுமட்டுமின்றி, அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்கப்படும் என்றும், அவர்களுக்கு ஆண்டுக்கு மூன்று எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும் மகளிர் தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

லக்னோவில் ஊடகங்களிடம் பேசிய பிரியங்கா, ``ஸ்மார்ட்போன் இல்லாததால் ஆன்லைனில் படிக்க முடியாமல் தவிக்கும் பல பெண்களை நான் சந்தித்தேன். எனவே பெண்கள், குறிப்பாக ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள் வீட்டில் இலவச வை-ஃபை பெறுவார்கள் எனத் தேர்தல் அறிக்கை உறுதியளிக்கிறது.

பெண்களுக்கான 75 திறன் மேம்பாட்டுப் பள்ளிகளும், பெண்களே நடத்தும் மாலை நேரக் கல்வி மையம் போன்ற திட்டங்களையும் காங்கிரஸ் கட்சி மேற்கொள்ளும். அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலேயே கட்சியானது `பெண்கள் அறிக்கையை’ தயாரித்துள்ளது'' என்று அவர் கூறினார்.

காங்கிரஸ் வெளியிட்டுள்ள 100 வேட்பாளர்களைக் கொண்ட முதல் பட்டியலில் 60 பேர் பெண்கள் என்றும் பிரியங்கா கூறியுள்ளார்.