Published:Updated:

ராணுவத்தில் தற்காலிக வீரர்கள்: அக்னிபத் திட்டத்தின் சாதக, பாதகங்கள் என்னென்ன?!

இந்திய ராணுவம்

ராணுவத்தில் பணிபுரிய இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கும் 'அக்னிபத்' என்ற திட்டத்துக்கு மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

ராணுவத்தில் தற்காலிக வீரர்கள்: அக்னிபத் திட்டத்தின் சாதக, பாதகங்கள் என்னென்ன?!

ராணுவத்தில் பணிபுரிய இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கும் 'அக்னிபத்' என்ற திட்டத்துக்கு மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

Published:Updated:
இந்திய ராணுவம்

ஒவ்வோர் ஆண்டும் தங்களின் ராணுவத்துக்கான நிதியைப் பல நாடுகள் அதிகரித்துவருகின்றன. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கில்லை. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் உலக நாடுகள் தங்களின் ராணுவத்துக்கு 2.1 ட்ரில்லியன் டாலரைச் செலவு செய்திருக்கிறது. உலகிலேயே ராணுவத்துக்காக அதிகம் செலவு செய்வதில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் 801 பில்லியன் டாலரைச் செலவு செய்தது. அந்த வகையில் சீனா, 293 பில்லியன் டாலர் செலவிட்டு 2-ம் இடத்தில் இருக்கிறது.

ராணுவ வீரர்கள்
ராணுவ வீரர்கள்

இந்தியா கடந்த ஆண்டு மட்டும் ராணுவத்துக்காக 76.6 பில்லியன் டாலர் செலவு செய்திருக்கிறது. 2012-ம் ஆண்டிலிருந்து இந்தியா தனது ராணுவத்துக்குச் செலவிடும் தொகை 33 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், ராணுவத்தில் தேவையில்லாத செலவைக் குறைக்க மத்திய பாதுகாப்புத்துறை பல்வேறு கட்ட ஆலோசனைகளைச் செய்துவந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதன்படி, `அக்னிபத்’ என்ற புதிய திட்டத்துக்கு அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியிருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருக்கிறார்.

`அக்னிபத்’ என்றால் என்ன?

`அக்னிபத்’ திட்டத்தின்படி ராணுவத்தில் 17.5 முதல் 21 வயதுள்ள 45 ஆயிரம் பேர், நான்கு ஆண்டு ஒப்பந்தம் அடிப்படையில் ராணுவத்தில் சேர்க்கப்படவிருக்கின்றனர். இதன் மூலம் இளைஞர்களுக்குப் பணிபுரிய வாய்ப்பு கிடைப்பதோடு, ஆயுதப்படை இளம் வீரர்கள் படையாகும் என்று அமைச்சகம் தெரிவிக்கிறது.

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

இதற்கான ஆட்கள் தேர்வு அடுத்த 90 நாள்களில் ஆன்லைன் மூலம் முறையில் நடக்கவிருக்கிறது. இதில் தேர்வாகும் இளைஞர்கள் `அக்னி வீரர்கள்’ என அழைக்கப்படுவார்கள். ஆயுதப்படைக்கு வழக்கமாக ஆட்கள் தேர்வு செய்வதற்கான கல்வித் தகுதியே, அக்னி வீரர்களுக்கும் பொருந்தும். அதன்படி, புதிய தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்ட மட்டங்களில் பயிற்சி வழங்கப்படும். பல்வேறு துறைகளில், புதிய திறன்களுடன் வேலைவாய்ப்புகளை இந்தத் திட்டம் உருவாக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. இவர்கள் அனைவரும் நான்கு ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பார்கள். இதற்காக மாதச் சம்பளம் ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரத்துடன் படிகளும் வழங்கப்படும். மருத்துவ மற்றும் காப்பீட்டு வசதிகளும் வழங்கப்படும்.

ராணுவம்
ராணுவம்

நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், 25 சதவிகித வீரர்களுக்குப் பணி நீட்டிக்கப்பட்டு, ஆயுதப்படைகளில் 15 ஆண்டுக்காலம் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். ஆயுதப்படையில் சேர முடியாதவர்களுக்கு 11 லட்சம் முதல் 12 லட்சம் வரை நிதி வழங்கப்படும். ஆனால், அவர்கள் ஓய்வூதியப் பலன்கள் பெற முடியாது. இந்தத் திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், ராணுவத்தின் செலவு குறையும் என மத்திய அரசு கூறியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், ஆயுதப்படையில் அனுபவமில்லா இளைஞர்களைச் சேர்க்கும்போது, தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து, லெப்டினன்ட் கர்னல் (ஓய்வு) நா. தியாகராஜனிடம் கேட்டபோது, "அக்னிபத் திட்டம் இந்திய ராணுவத்தில் இளைஞர்களை அதிகப்படியாகச் சேர்க்கும் நல்ல திட்டம். முப்படைகளில் பணியாற்ற இளைஞர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு. பணி நீட்டிப்பாகும் வீரர்களுக்குக் கூடுதலாகப் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும். அவர்கள் ஓய்வூதியம் உள்ளிட்ட பிற பலன்களையும் அடைவார்கள்.

ராணுவம் என்றாலே முதலில் ஒழுக்கம், கட்டுப்பாடுதான். அக்னிபத் மூலம், ஒழுக்கமான இளைஞர்களை நாம் உருவாக்க முடியும். ஒழுக்கமான பொதுமக்களால்தான், வளமான நாட்டை உருவாக்க முடியும்.

லெப்டினன்ட் கர்னல் நா.தியாகராஜன் (ஓய்வு)
லெப்டினன்ட் கர்னல் நா.தியாகராஜன் (ஓய்வு)

அதேநேரத்தில், பணி நீட்டிப்பு இல்லாத மீதமுள்ள வீரர்கள் நிலை என்னவாகும் என்றே தெரியவில்லை. அவர்கள் சமுதாயத்தில் மீண்டும் தங்களை நிரூபிக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால், அவர்கள் மனஉளைச்சலுக்கும் ஆகலாம். அதேபோல, ராணுவத்தில் சேரும் ஒரு நபர் தேர்ந்த சிறந்த வீரராக மாறுவதற்கு, குறைந்தது 2 அல்லது 3 ஆண்டுகள் ஆகிவிடும். இந்நிலையில், நான்கு ஆண்டுகளில் 75 சதவிகித வீரர்கள் பணிவிடுப்பு செய்யப்பட்டுவிடுவர். இந்தக் காலகட்டங்களில் போர்ச் சூழல் ஏற்பட்டால், வலிமையான ராணுவம் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் எழாமல் இல்லை. அதேநேரத்தில், இருக்கும் அத்தனை வீரர்களும் சிறப்பாகச் செயல்படுவார்கள். ஆனால், குறைவான எண்ணிக்கையில் இருப்பார்கள். இதைப் பாதுகாப்புத்துறையும் கவனித்திருக்கும். இது ஒரு பின்னடைவாக இருக்கலாம். அதேபோல, பணி நீட்டிப்பு செய்யப்படாத வீரர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்" என்றார்.

`அக்னிபத்’ திட்டம் இந்திய ராணுவத்துக்கு வலிமையைச் சேர்க்கும் என்று இந்திய ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே, கடற்படைத் தலைவர் ஹரிகுமார் உள்ளிட்ட உயரதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர். அதேபோல, திட்டம் குறித்து முழுமையாக விளக்கம் அளிக்க சில ராணுவ அதிகாரிகளை அணுகினோம். ஆனால், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் என்பதால் இது குறித்துப் பேச முடியாது என்று தெரிவித்துவிட்டனர்.

ராணுவம்
ராணுவம்

உலகில் மிகப்பெரிய ராணுவத்தைக்கொண்ட நமது நாட்டில் எல்லைப் பகுதிதான் அதிகப்படியான தீவிரவாதத் தாக்குதலைச் சந்திக்கிறது. இதைத் தடுக்க நமக்கு அதிகப்படியான வீரர்கள் தேவைப்படுகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தரைப்படை, கப்பல் படை, விமானப் படையை பலப்படுத்த தற்காலிகப் பணியிடங்கள் அமைக்கும் அக்னிபத் திட்டம் எந்த அளவுக்குக் கைகொடுக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism