Published:Updated:

`கொண்டுவரப்பட்டது துணை ராணுவப்படை!’ - ஜே.என்.யுவில் வீரியமடையும் மாணவர்கள் போராட்டம்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம்
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம்

புதுதில்லியில் இயங்கிவரும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்தியாவின் முதன்மையான கல்விநிலையங்களுள் ஒன்று. சுமார் 8,000 மாணவர்கள் பயிலும் இப்பல்கலைக்கழகத்தில் பெரும்பாலான மாணவர்கள் விடுதிகளில் தங்கிப் படிப்பவர்களே. 40-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்தும் நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் மாணவர்கள் இங்குவந்து படிக்கின்றனர். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் கனவுப் பல்கலைக்கழகமான இதன் பொன்விழா ஆண்டு தற்போது (2019) கொண்டாடப்பட்டு வருகிறது.

போராட்டம்
போராட்டம்

இதையொட்டி இக்கல்வியாண்டு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள் பல்கலைக்கழக வளாகத்தினுள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில், மாணவர்கள் தங்கும் விடுதிக்கான விதிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவர நிர்வாகம் முடிவெடுத்தது. முன்வரைவு ஒன்றையும் வெளியிட்டு, மாணவர்களிடம் கருத்துகளையும் கேட்டிருந்தது. வெளியான முன்வரைவு மாணவர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்புக்குள்ளானது.

தனிநபர் அறைவாடகை ஒரு மாதத்துக்கு 20 ரூபாயிலிருந்து 600 ரூபாயாகவும், இருநபர் அறையில் வசிப்பவருக்கான ஒரு மாத வாடகை 10 ரூபாயிலிருந்து 300 ரூபாயாகவும், திரும்பப்பெறும் வகையிலான ஒருமுறைக் கட்டணம் 5,500 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், நிர்வாகம், உணவாளர், உதவியாளர் ஆகியவற்றுக்கு இதுவரை எவ்விதக் கட்டணமும் மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படவில்லை. ஆனால், இந்தவரைவு மாதம் 1,700 ரூபாய் ஒவ்வொரு மாணவரிடமிருந்து வசூலிக்க வகை செய்கிறது.

போராட்டம்
போராட்டம்

இதுதவிர, ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்த கல்லூரி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து மாணவர்கள் போராட தொடங்கினர். இருப்பினும் அவர்களின் போராட்டத்தைக் கல்லூரி நிர்வாகம் கண்டுகொண்டதாக தெரியவில்லை. இதனால் 15 நாள்களைத் தாண்டி போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே, இன்று பல்கலைக்கழகத்தின் 3வது பட்டமளிப்புவிழா ஏஐசிடிஇ வளாகத்தில் நடைபெற்றது. அதில் துணைக்குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் உள்ளிட்டோர் பங்கெடுத்தனர்.

15 நாள்களைத் தாண்டி போராடி வரும் மாணவர்கள் இன்று காலை பட்டமளிப்பு விழா நடைபெற இருந்த அரங்கத்தை நோக்கிச் சென்று, போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களைக் கட்டுப்படுத்தும் விதமாக போலீஸார் தடுப்புகளை அமைத்து போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. ஒருகட்டத்தில் போலீஸாரை மீறி மாணவர்கள் செல்லத்தொடங்கினர். இதனால் மாணவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

பின்னர் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இதில் சில மாணவர்கள் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. போராட்டம் பெரிய அளவில் தொடர்ந்ததை அடுத்து துணை ராணுவப்படை கொண்டுவரப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்தில் அதிகப்படியான காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே பட்டமளிப்பு விழாவுக்குப் பட்டம் வாங்க வந்த முன்னாள் மாணவர்கள் சிலரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்ததாகத் தெரிகிறது. இதனால் அங்கு தொடர் பதற்றம் நிலவி வருகிறது.