Published:Updated:

`நள்ளிரவில் மீண்டும் கசிவு; குஜராத்திலிருந்து கொண்டு வரப்பட்ட PTBC ரசாயனம்!’ #VizagGasLeak அப்டேட்ஸ்

விஷவாயு கசிவு
விஷவாயு கசிவு

குஜராத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ரசாயனம், ஏற்கெனவே காற்றில் கலந்திருக்கும் ஸ்டைரீன் ரசாயனத்தின் பாதிப்பை பெருமளவு குறைத்துவிடும்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவு ஒட்டுமொத்த தேசத்தை அதிர்ச்சி அடைய வைத்தது. விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.ஆர். வெங்கடேஷ் பட்டினம் என்ற கிராமத்துக்கு அருகிலிருந்த எல்.ஜி பாலிமர் இந்தியா என்ற தொழிற்சாலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென கசிவு ஏற்பட்டது.

ஆந்திரா கேஸ் கசிவு
ஆந்திரா கேஸ் கசிவு

இந்தக் கசிவு காரணமாக சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் 2000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். சாலையில் நடந்து சென்றவர்கள், திடீரென மயக்கம் போட்டு விழுந்தனர். மருத்துவமனையில் நூற்றுக்கணக்கானோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் நிலையில் 11 பேர் இந்தக் கசிவு காரணமாக பரிதாபமாக உயிரிழந்தனர்.

`சாலையில் மயங்கி விழுந்த மக்கள்... அதிகரிக்கும் பலி எண்ணிக்கை’ -ஆந்திராவைப் பதற வைத்த விஷவாயு கசிவு

இந்தச் சம்பவம் பற்றி விசாகப்பட்டினம் டி.ஜி.பி உதயபாஸ்கர் கூறும்போது, ``காலை 5 மணிக்கு வாயுக் கசிவு தொடர்பாக எங்களுக்கு அழைப்பு வந்தது. தகவல் அறிந்து நாங்கள் சம்பவ இடத்துக்கு வருவதற்குள் நிறைய மக்கள் சாலையிலேயே மயங்கிவிட்டனர். நாங்கள், மீதமுள்ள அனைவரையும் கிராமத்தை விட்டு வெளியேற்றினோம். பின்னர், தொழிற்சாலையில் காஸ் கசிவு கண்டறியப்பட்டு, 90% சரி செய்யப்பட்டுவிட்டது.

ஆந்திரா கேஸ் கசிவு
ஆந்திரா கேஸ் கசிவு
AP

கசிந்த வாயுவை, வேறு வாயு தெளித்து அதுவும் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஆர்.ஆர். வெங்கடேசப்பட்டினத்தில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எனவே, தொழிற்சாலையில் வாயுக் கசிவு முழுவதுமாக சரி செய்யப்பட்டு, மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்ட பின்னரே மக்கள் கிராமத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

`இயக்கப்படாமல் இருந்த டேங்குகள்; கொடிய ஸ்டைரீன் வாயு!' - விசாகப்பட்டினத்தை உலுக்கிய கொடூர சம்பவம்

தொழிற்சாலையிலிருந்து வெளியேறியது ஸ்டைரீன் (styrene) வாயு எனக் கூறப்படுகிறது. இது மிகவும் ஆபத்தான மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய நச்சுத்தன்மைகொண்டது. தொழிற்சாலையில் 2 பெரிய டேங்குககளில் ஸ்டைரீன் வாயு இருந்திருக்கிறது. இந்தியாவில் கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த டேங்குகள் கடந்த 40 நாள்களுக்கு மேல் இயக்கப்படாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் உள்ளே இருந்த வாயு, ரசாயன வினை மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். பின்னர் நேற்று காலை ஆலையை மீண்டும் செயல்பட, டேங்குகளை இயக்கும்போது, அதிக வெப்பம் உருவாகி, டேங்குகள் வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆந்திரா கேஸ் கசிவு
ஆந்திரா கேஸ் கசிவு

விஷவாயு கசிவு தொடர்பாக விசாகப்பட்டினம் டி.ஜி.பி உதயபாஸ்கர், நேற்று மதியமே கசிவு சரி செய்யப்பட்டுவிட்டதாக கூறிய நிலையில் நேற்று நள்ளிரவில் மீண்டும் கசிவு ஏற்பட்டது. நள்ளிரவு நேரத்தில் டேங்களில் இருந்து வெள்ளை நிறத்தில் மீண்டும் விஷவாயு வெளியேறியதால் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக தீயணப்பு மற்றும் மீட்புக் குழுவினர் அங்கு குவிக்கப்பட்டனர். தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் அங்கு விரைந்தது.

விசாகப்பட்டினம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு அதிகாரி சந்தீப் ஆனந்த், ``டேங்கர்களில் தற்போது மீண்டும் கசிவு ஏற்பட்டுள்ளது. 50 தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் என எல்லோரும் தயார் நிலையில் இருக்கிறார்கள். ஆலையைச் சுற்றி 2-3 கிலோ மீட்டர் சுற்றளவில் இருப்பவர்கள் அனைவரையும் வெளியேறச் சொல்லி இருக்கிறோம். ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதெல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செய்திருக்கிறோம்” என்றார்.

மீண்டும் கசிவு
மீண்டும் கசிவு

இந்த நிலையில், ஸ்டைரீன் வாயுவின் நச்சுத் தன்மையை குறைப்பதற்கு PTBC (Para-tertiary butyl catechol) என்னும் ரசாயனம் குஜராத்திலிருந்து ஆந்திராவுக்குக் கொண்டு வரப்பட்டது.

குஜராத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ரசாயனம், ஏற்கெனவே காற்றில் கலந்திருக்கும் ஸ்டைரீன் ரசாயனத்தின் பாதிப்பை பெருமளவு குறைத்து விடும். இதனால், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேரடியாக குஜராத் முதல்வரை தொடர்பு கொண்டு PTBC ரசாயனத்தைத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

விசாகப்பட்டனம் வந்த PTBC
விசாகப்பட்டனம் வந்த PTBC

இதைத்தொடர்ந்து 500 கிலோ PTBC ரசாயனம் தெற்கு குஜராத்தில் இருந்து டாமன் பகுதிக்கு சாலை மார்க்கமாக கொண்டு வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து ஏர் இந்தியாவின் சரக்கு விமானம் மூலம் விசாகப்பட்டினம் கொண்டு வரப்பட்டது. பின் உடனடியாக அந்த ரசாயனம் பாதிக்கப்பட்ட பகுதிக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உதவியுடன் கொண்டு செல்லப்பட்டது என விசாகப்பட்டின விமான நிலைய அதிகாரி தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு