Published:Updated:

`இயல்புநிலைக்குத் திரும்புவதே முக்கிய நோக்கம்!’ - எப்படி இருக்கும் மோடியின் மாறுபட்ட ஊரடங்கு?

இந்தியா
இந்தியா ( AP )

இந்தியாவில் நான்காம்கட்ட ஊரடங்கு எப்படி இருக்கும் என்பது தொடர்பாக உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் சில தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.

கண்ணுக்கே தெரியாத மிகச்சிறு வைரஸ் கடந்த 3 மாதங்களாக மொத்த உலகத்தையும் உலுக்கிக்கொண்டிருக்கிறது. இதன் பிடியிலிருந்து மீள முடியாமல் மனிதகுலமே தவித்து வருகிறது. சர்வதேச பொருளாதாரம் சரிவை நோக்கிச் சென்றுவிட்டது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பல பில்லியன் கணக்கான ஏழை மக்கள் ஒருவேளை உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர். இப்படி அனைத்து விதத்திலும் அனைவருக்கும் கொடூரம் நிகழ்த்தும் கொரோனா புவியிலிருந்து எப்போது அழியும், அந்தப் பெயர் காதுகளில் விழாத நாள் எப்போது வரும் என மொத்த உலகமும் தவம் கிடந்துகொண்டிருக்கிறது.

இந்தியா
இந்தியா
AP

இருந்தும் அனைத்து நாடுகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டுதான் உள்ளது. இந்தியாவில் இதுவரை 49,219 பேர் பாதிக்கப்பட்டு 2,549 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் அதிகாரபூர்வ இணையப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு மூன்றுகட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டும் வைரஸ் பரவல் குறைந்தபாடில்லை. இந்தியாவின் அனைத்து பெரிய மெட்ரோ நகரங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

`உலகப்போரைப் போலவே கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்குப் பின் என உலகம் மாறிவிட்டது!’ - பிரதமர் மோடி

இந்நிலையில் கடந்த 12-ம் தேதியன்று நாட்டு மக்களிடம் பேசிய மோடி, கொரோனாவுக்கு எதிராக இந்தியா எவ்வாறு செயல்பட்டு வருகிறது என்பதை விளக்கி அடுத்தகட்ட ஊரடங்கு தொடர்பாகவும் தகவல் தெரிவித்தார். அதில், “ ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுகிறது. ஆனால், நான்காம் கட்ட ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். இதன் முழு விவரங்கள் மே 18-ம் தேதிக்கு முன்னர் அறிவிக்கப்படும்” எனப் பேசியிருந்தார். கடந்த 2 மாதங்களாக வீட்டில் முடங்கியிருக்கும் மக்களுக்கு பிரதமரின் வார்த்தைகள் ஆறுதலைக் கொடுத்துள்ளன. மோடி கூறிய மாறுபட்ட ஊரடங்கு எப்படி இருக்கும், எந்தத் துறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்படும் என அறிந்துகொள்ள அனைவரும் ஆவலாகக் காத்திருக்கின்றனர்.

இந்தியா
இந்தியா
AP

இதற்கிடையில் நான்காம்கட்ட ஊரடங்கு இப்படி இருக்கலாம் என என்.டி.டி.விக்கு தகவல் தெரிவித்துள்ளார் உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர். ``இந்திய மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவதே நான்காம் கட்ட ஊரடங்கின் மையமாக இருக்கும். கொரோனா பாதிப்பு அளவைப் பொறுத்து அந்தந்த பகுதிகளில் முடிந்தவரை தளர்வுக்கு அனுமதிக்கப்படும். சாலை மற்றும் வான்வழி பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்க வாய்ப்புள்ளது. மாநில அரசுகளின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான தங்கள் மாநில ஹாட்ஸ்பாட் பகுதியைத் தாங்களே தீர்மானிக்கும் அதிகாரம் வழங்கப்படலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

முறுக்கிய முதல்வர்கள்... முடங்கிய நிதித்துறை - 20 லட்சம் கோடி மோடி மேஜிக் பலிக்குமா?

நான்காம் கட்ட ஊரடங்கு வழிகாட்டுதல்களை வகுக்கும் குழுவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஹாட்ஸ்பாட் இல்லாத மண்டலங்களில் குறைந்த அளவில் உள்ளூர் பேருந்துகள் இயக்கப்படலாம். ஆட்டோ, டாக்ஸி ஆகியவைக்கும் அனுமதி வழங்கபடும். ஆனால், அனைத்துப் போக்குவரத்திலும் பயணிகளுக்குக் கடுமையாக விதிகளும் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளும் இருக்கும். அதேபோல் பாஸ் பெற்றவர்கள் மட்டும் மாநிலங்களுக்கு இடையே பயணிக்க அனுமதி வழங்கப்படலாம். அத்தியாவசிய பொருள்களைத் தாண்டி அனைத்துவிதமான வீட்டுப் பொருள்கள் வாங்கவும் விற்கவும் அனுமதிக்கப்படலாம், இவை அனைத்திலும் நிச்சயம் கட்டுப்பாடுகள் இருக்கும்.

ஊரடங்கு
ஊரடங்கு
AP

இதைத் தவிர தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் அவர்களைச் சார்ந்து இருப்பவர்கள் மீது அதிகக் கவனம் செலுத்தி அதிகளவில் வைரஸ் சோதனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக பாதிப்பு உள்ள மகாராஷ்டிராவில் ஊரடங்கை நீட்டிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ரெட் ஸோன் பகுதியில் எந்த அலுவலகங்களும் திறக்கப்பட வாய்ப்பு இல்லை. ஆனால் ஆரஞ்சு மற்றும் பச்சை ஸோன் பகுதிகளில் தொழில்களுக்கு அனுமதி வழங்கப்படலாம்.

`லாக்டெளன் 4.0 உண்டு.. ஆனால், அது முற்றிலும் மாறுபட்டது!'- பிரதமர் மோடி அறிவிப்பு

ஆந்திரா, கேரளா, கர்நாடகா, குஜராத் மற்றும் டெல்லி ஆகிய மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் பல தொழில்கள் மற்றும் அனைத்துவித போக்குவரத்துகளும் திறக்கப்பட விரும்புகின்றனர். அதேபோல் பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மாநிலத்துக்குத் திரும்பி வருவதால் அங்கு வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, அவர்கள் ஊரடங்கை நீட்டிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

News Credits - NDTV

அடுத்த கட்டுரைக்கு