Published:Updated:

புதுச்சேரி: `200 ஆண்டுகள்; 87,120 சதுர அடிகள்!' - இடம் மாறும் சட்டப்பேரவை வளாகம்

புதுச்சேரி
புதுச்சேரி

புதுச்சேரியில் ரூ.320 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவிருக்கும் புதிய சட்டப்பேரவை வளாகத்துக்கு அடிக்கல் நாட்ட, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரவிருக்கிறார் என்று சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.

லுபுதுச்சேரி சபாநாயகராகப் பொறுப்பேற்று, டெல்லி சென்று பிரதமர் மோடியைச் சந்தித்துவிட்டுத் திரும்பியிருக்கும் செல்வம், புதுச்சேரிக்கு ரூ.320 கோடி மதிப்பீட்டில் புதிய சட்டப்பேரவை வளாகம் கட்டுவதற்கான ஒப்புதலைப் பெற்றிருப்பதாக தெரிவித்திருந்தார்.

புதுச்சேரி புதிய சட்டப்பேரவை கட்டடத்தின் மாதிரி வரைபடம்
புதுச்சேரி புதிய சட்டப்பேரவை கட்டடத்தின் மாதிரி வரைபடம்

புதிய ஒருங்கிணைந்த சட்டப்பேரவையை தட்டாஞ்சாவடியிலுள்ள அரசு இடத்தில் கட்டுவது தொடர்பாக சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தலைமையில், நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம், தலைமைச் செயலர் அஸ்வனிகுமார் உள்ளிட்ட செயலர்களும், அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

அந்தக் கூட்டத்தில் தற்போது இயங்கிவரும் அரசுத்துறை அலுவலகங்களுக்கு மாற்று இடம் ஒதுக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் பேசிய சபாநாயகர் செல்வம், ``புதுச்சேரியில் புதிய சட்டப்பேரவை அடிக்கல் நாட்டு விழா வருகிற ஆகஸ்ட் மாதம் 15-க்குப் பிறகு நடைபெறவிருக்கிறது.

புதுச்சேரி சட்டப்பேரவை
புதுச்சேரி சட்டப்பேரவை

அதற்கான பூமி பூஜையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு அடிக்கல் நாட்டவிருக்கிறார். சட்டப்பேரவை வளாகத்தினுள் தலைமைச் செயலகம், இயக்குநர் அலுவலகம் ஆகியவை அமையும். 16 மாதங்களுக்குள் புதிய சட்டப்பேரவை வளாகம் கட்டி முடிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

சுமார் 87,120 சதுர அடி பரப்பளவில் அமைந்திருக்கும் புதுச்சேரியின் சட்டப்பேரவைக் கட்டடம் பிரெஞ்ச்காரர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. 1820-ல் தொடங்கி 1830-ல் முடிக்கப்பட்ட இந்தக் கட்டடம் மருத்துவக் கல்லூரியாக செயல்பட்டது. புதுச்சேரியிலுள்ள 19 பாரம்பர்யக் கட்டடங்களில் இந்தச் சட்டப்பேரவைக் கட்டடமும் அடங்கும்.

Vikatan

கட்டடத்தில் முதல்வர், நான்கு அமைச்சர்கள், சபாநாயகர், அரசு கொறடா போன்றவர்களுக்கு ஏழு அறைகளும், பேரவை வளாகமும் இருக்கின்றன. பிரெஞ்சுக் காலத்தில் மருத்துவக் கல்லூரியாகச் செயல்பட்ட இந்தக் கட்டடம், 1959-லிருந்து புதுச்சேரியின் சட்டப்பேரவையாகச் செயல்பட்டுவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு