Published:Updated:

கொரோனா: `தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஒத்துழைக்காவிட்டால்..!’ - எச்சரித்த நாராயணசாமி

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று தொடர்பான விவாதத்தில் எம்.எல்.ஏ-க்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் நாராயணசாமி, ``கொரோனா தொற்று காரணமாகப் புதுச்சேரிக்கு சுற்றுலாப் பயணிகள் வராததால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனால் மத்திய ரிசர்வ் வங்கியில் கடன் பெற்றுத்தான் அரசு ஊழியர்களுக்கு மாதச்சம்பளம் வழங்கினோம்.

புதுச்சேரி சட்டப்பேரவை
புதுச்சேரி சட்டப்பேரவை

புதுச்சேரியில் இதுவரை 2,421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,400 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 987 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 34 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய அளவில் இறப்பு சதவிகிதம் 2.5%. ஆனால், புதுச்சேரியில் வெறும் 1.4% மட்டுமே. கொரோனா நிதியாக இதுவரை 9.16 கோடி ரூபாய் வந்திருக்கிறது. ஏற்கெனவே அதில் ரூ.12 லட்சம் மதிப்பிலான பொருள்களை மக்களிடம் கொடுத்துள்ளோம். இன்று ரூ.10 லட்சத்துக்கான காசோலைகளைக் கொடுத்திருக்கிறோம்.

அந்த நிதியைக் கொண்டு அமுதசுரபியில் பொருள்கள் வாங்கி, கட்டுப்பாட்டு மண்டலத்தில் வசிக்கும் பகுதி மக்களுக்கு ரூ.700- க்கு அரிசி, காய்கறி மற்றும் மளிகைப் பொருள்கள் வழங்கப்படும். மாநிலத்தின் வருவாய் 68 சதவிகிதமாக குறைந்திருக்கும் நிலையில், மத்திய அரசும் போதுமான நிதியைக் கொடுக்கவில்லை. அதேபோல ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகை ரூ.490 கோடி இன்னும் வரவில்லை. கொரோனா நிதியில் இருந்து இறந்தவர்களின் குடும்பத்துக்கு உதவி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

கொரோனா
கொரோனா

அதன்படி, இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும். இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனைத்து படுக்கைகளும் நிரப்பிவிட்டதால் கொரோனா நோயாளிகளுக்கு இப்போது இருக்கும் இடம் போதவில்லை.

ஜிப்மர் மருத்துவமனையிலும் 259 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் ஜிப்மர் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் முழுமையான ஒத்துழைப்பு தரவில்லை.

Vikatan

அதனால் ஒத்துழைக்காவிட்டால் மருத்துவ கல்லூரிகளை நாங்களே எடுத்துக் கொள்வோம் எனத் தனியார் மருத்துவ கல்லூரிகளை அழைத்து எச்சரிக்க இருக்கிறேன். கொரோனா தொற்று இன்னும் எத்தனை நாள்களுக்கு இருக்கும் என்று தெரியாது. அதனால் அதன் தாக்கத்தை நாம் அனுபவித்துதான் ஆக வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு