Published:Updated:

`கடலூர், விழுப்புரம் மக்களுக்குத் தடை..!' -ஊரடங்கு விதிகளைத் தளர்த்திய நாராயணசாமி

நாராயணசாமி
நாராயணசாமி

`மதுக்கடைகளைத் திறப்பது பற்றி அமைச்சரவையில் எந்தவித முடிவும் எடுக்கவில்லை. இதில் சூழலுக்குத் தகுந்தபடியும் மற்ற மாநிலங்களின் நடவடிக்கைகளின் அடிப்படையிலும் முடிவு செய்வோம்' - முதல்வர் நாராயணசாமி

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் மே மாதம் 17-ம் தேதி வரை ஊரடங்குச் சட்டத்தை அமல்படுத்தியிருக்கிறது மத்திய அரசு. புதுச்சேரி அரசின் துரித நடவடிக்கையால் மாநிலத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மாஹேயைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலையில், 7 பேர் மட்டுமே சிகிச்சைப் பெற்று வந்தனர். தற்போது அதில் 5 பேர் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பிவிட்டதால் அந்த எண்ணிக்கை இரண்டாகக் குறைந்துவிட்டது.

புதுச்சேரி
புதுச்சேரி

இந்த நிலையில், நேற்றிரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, ``மத்திய அரசு மூன்றாவது முறை பிறப்பித்த உத்தரவின்படி மே 17-ம் தேதிவரை மாநிலம் முழுவதும் ஊரடங்கு நீடிக்கும்.

அதேபோல கொரோனா பாதித்துள்ள பகுதிகளை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்று மண்டலங்களாகப் பிரித்து எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்க வேண்டுமென்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதனடிப்படையில் புதுச்சேரி மற்றும் மாஹே ஆரஞ்சு மண்டலமாகவும், காரைக்கால் மற்றும் ஏனாம் பச்சை மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆரஞ்சு மண்டலத்தில் கிராமப்புறத்திலுள்ள அனைத்து தொழிற்சாலைகளும் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

அந்தப் பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே பயணம் செய்யலாம். அங்கு தொழிற்சாலைகளைத் திறப்பதற்கு எந்தவித முன் அனுமதியும் பெறத் தேவையில்லை. அதேபோல நகரப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, தொழிற்பேட்டை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் அடங்காத தொழிற்சாலைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

அந்தப் பகுதிகளில் உள்ள அனைத்துக் கடைகளும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அவற்றுக்கும் முன் அனுமதி பெறவேண்டிய அவசியம் இல்லை. அனைத்துக் கடைகள் மற்றும் தொழிற்சாலைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம். இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. கடைகளுக்குள் பொருள் வாங்க வருபவர்கள் சானிடைஸர் மூலம் கைகளை சுத்தப்படுத்திய பிறகே வர வேண்டும். கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும்.

தனிமனித சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அங்கே பணிபுரிபவர்களும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும். கடைகளுக்குள் வருபவர்களை தெர்மாமீட்டரைக் கொண்டு சோதனை செய்தபிறகே அனுமதிக்க வேண்டும்.

அமைச்சரவைக் கூட்டம்
அமைச்சரவைக் கூட்டம்

அதேசமயம் ஆரஞ்சு மண்டலத்தில் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் டாக்ஸிகள் செல்வதற்கு அனுமதியில்லை. இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டும் பயணம் செய்யலாம். ஆட்டோவில் இருவர் மட்டுமே செல்ல அனுமதி உண்டு. உணவகங்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கலாம். ஆனால், அங்கு பார்சல் மட்டும் வாங்கிச் செல்ல வேண்டுமே தவிர, அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை. வீடுகளுக்குச் சென்று உணவுகளை வழங்குவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக மதுக்கடைகளைத் திறப்பது பற்றி அமைச்சரவையில் எந்தவித முடிவும் எடுக்கவில்லை. இதில் சூழலுக்குத் தகுந்தபடியும், மற்ற மாநிலங்களின் நடவடிக்கைகளின் அடிப்படையிலும் முடிவு செய்வோம். அரசு நிறுவனங்களைப் பொறுத்தவரை `ஏ’ மற்றும் `பி’ பிரிவு ஊழியர்கள் 100% பணிக்கு வர வேண்டும். `சி’ பிரிவு அரசு ஊழியர்கள் 33% பணிக்கு வர வேண்டும். தனியார் அலுவலகங்களில் 35% பணிபுரிய வேண்டும்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

நம் மாநிலத்திலிருந்து சென்று வெளி மாநிலத்தில் இருப்பவர்கள், வெளி மாநிலத்திலிருந்து வந்து நம் மாநிலத்தில் இருப்பவர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்வதற்காக இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. இதுவரை நம் மாநிலத்துக்கு வருவதற்கு 924 பேரும், வெளி மாநிலம் செல்வதற்கு அனுமதி கேட்டு 720 பேரும் விண்ணப்பித்திருக்கின்றனர்.

நம் மாநிலத்திலிருந்து வெளி மாநிலத்துக்கு வேலை செய்வதற்காக சென்றவர்கள் மற்றும் படிக்கச் சென்றிருக்கும் மாணவ, மாணவிகள் திரும்பி வருவதற்கான செலவு முழுவதையும் அரசு ஏற்றுக்கொள்ளும். சுற்றுலா சென்றவர்கள், உறவினர்களைச் சந்திக்கச் சென்றவர்கள் தங்களின் சொந்த செலவில்தான் திரும்ப வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளான அரியாங்குப்பம், முத்தியால்பேட்டை, ரெட்டியார்பாளையம், திருவாண்டார்கோவில், திருக்கனூர் ஆகிய 5 பகுதிகளில் எந்தவிதமான வியாபார நிறுவனங்களையோ அல்லது தொழிற்சாலைகளையோ நடத்துவதற்கு அனுமதி கிடையாது. பக்கத்து மாவட்டங்களான விழுப்புரம் மற்றும் கடலூர் பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்திருப்பது நமக்குப் பெரிய பிரச்னையாக இருக்கிறது. விழுப்புரத்தில் 53 ஆகவும் கடலூரில் 26 ஆகவும் அதிகரித்திருக்கிறது.

27 நாள்களுக்குப் பின் கொரோனா ஊரடங்கு தளர்வு! -நிபந்தனைகளுடன் கேரள அரசு முடிவு

இந்த இரு மாவட்டங்களும் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆரஞ்சு மண்டலமாக இருக்கும் நம் பகுதிக்குள், சிவப்பு மண்டலத்தைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் உள்ளே வந்தால் கொரோனா தொற்று நோயைத் தடுப்பது நமக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். அதனால் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் புதுச்சேரிக்குள் நுழைய அனுமதி கிடையாது. புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 2 ஆகக் குறைந்திருக்கிறது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு