Published:Updated:

`321 கிலோ எடை; 5 அடி உயரம்!' - அபிநந்தனுக்குச் சாக்லேட் சிலையைத் தயாரித்த புதுவை நிறுவனம்

இந்திய விமானப்படையின் கமாண்டர் அபிநந்தனைப் பெருமைப்படுத்தும் வகையில், புதுச்சேரியின் சாக்லேட் கடை ஒன்று அவரது உருவத்தை சாக்லேட்டில் சிலையாக வடிவமைத்திருக்கிறது.

சாக்லேட்
சாக்லேட்

புதுச்சேரியில் பிரபலமான தனியார் சாக்லேட் நிறுவனங்களில் ஒன்று சூகா (ZUKA). இந்தக் கடையில் ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாடும் டிசம்பர் மாதத்தில் பிரமாண்டமான சாக்லேட் சிலைகளை வடிவமைப்பது வழக்கம்.

அபிநந்தன்
அபிநந்தன்

அதனடிப்படையில் இந்த வருடம் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் எனப் பலரின் பாராட்டுகளைப் பெற்ற, இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனின் சிலையை தத்ரூபமாக வடிவமைத்திருக்கிறது இந்த நிறுவனம்.

பெல்ஜியத்திலிருந்து கொண்டுவரப்பட்ட 321 கிலோ சாக்லேட்டைக் கொண்டு 5 அடி உயரத்திலும் 10 அங்குல அகலத்திலும் அபிநந்தனின் சாக்லேட் சிலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு பணிபுரியும் ஊழியர்களின் 124 மணி நேர உழைப்பில் உருவாகியிருக்கும் இந்தச் சிலை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சாக்லேட் அபிநந்தன்
சாக்லேட் அபிநந்தன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய சாக்லேட் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீநாத், “ ஒவ்வொரு வருடமும் தேசியத் தலைவர்கள் மற்றும் தேசிய அளவில் பிரபலமானவர்களின் உருவங்களை சாக்லேட்டில் சிலையாக வடிவமைத்து வருகிறோம்.

`அருங்காட்சியகத்தில் அபிநந்தன் சிறைப்பிடிக்கப்பட்ட உருவ பொம்மை!' - புதிய சர்ச்சையில் பாகிஸ்தான்

மகாத்மா காந்தி, அப்துல்கலாம், அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலை, சார்லி சாப்ளின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எம்.எஸ்.தோனி என இதுவரையில் 300 சிலைகளை வடிவமைத்திருக்கிறோம். இந்த வருடம் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனின் சிலையை வடிவமைக்க முடிவெடுத்தோம். கடந்த பிப்ரவரி மாதம் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தினர்.

அபிநந்தன் சிலையுடன் செஃப் ராஜேந்திரன் மற்றும் நிறுவனர் ஸ்ரீகாந்த்
அபிநந்தன் சிலையுடன் செஃப் ராஜேந்திரன் மற்றும் நிறுவனர் ஸ்ரீகாந்த்

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய இராணுவம் பாகிஸ்தான் எல்லைப் பகுதியான பால்கோட்டில் செயல்பட்ட தீவிரவாதிகள் மூகாம்களை தாக்குதல் நடத்தி அழித்தது. அப்போது அபிநந்தன் சென்ற விமானம் பாகிஸ்தானில் தவறி விழுந்ததால் அவர் சிறைப்பிடிக்கப்பட்டார்.

60 மணி நேரத்திற்குப் பிறகு விடுதலையான அவருக்கு இந்திய அரசு வீர்சக்ரா விருது கொடுத்து கௌரவித்தது. இந்த வருடம் கூகுளில் அதிகமாகத் தேடப்பட்ட பட்டியலிலும் அவர் இடம்பிடித்திருக்கிறார். மக்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் அவரை இந்த வருடம் சிலையாகச் செய்திருக்கிறோம். 321 கிலோ சாக்லேட்டில் எங்களின் செஃப் ராஜேந்திரன், தத்ரூபமாக வடிவமைத்திருக்கிறார். வரும் ஜனவரி 5, 2020 வரை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும்” என்றார் உற்சாகமான குரலில்.

புதுச்சேரி மக்களும், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாவாசிகளும் அபிநந்தனின் சாக்லேட் சிலையை ஆர்வமுடன் கண்டு ரசித்துச் செல்கின்றனர்.