Published:Updated:

புதுச்சேரி: `100% தடுப்பூசி; கொரோனா இல்லாத கிராமம்!’ - ஆளுநரிடம் சான்று பெற்ற புதுக்குப்பம்

தமிழிசை செளந்தரராஜன்
தமிழிசை செளந்தரராஜன்

``புதுச்சேரியைச் சேர்ந்த புதுக்குப்பம் கிராமம் 100% கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டதால் உலகத்துக்கே முன் மாதிரியாகத் திகழ்கிறது” - துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.

புதுச்சேரி மாநிலத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியைச் செலுத்தும் முகாம்களை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தி தடுப்பூசி திருவிழாவும் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி முகாம்கள் நடைப்பெற்று வருகின்றன. மேலும், கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்களுக்கும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுமென்று ஆளுநர் தமிழிசை தெரிவித்திருந்தார்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

அதன்படி நேற்று கிராமப்புற மக்களுக்குத் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. வைத்திக்குப்பம் பச்சைவாழியம்மன் கோயில் வளாகத்தில் தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த ஆளுநர் தமிழிசை, ``புதுச்சேரியில் முதலில் வைத்திக்குப்பம் கிராமத்தில் தடுப்பூசி முகாமைத் தொடங்கியுள்ளோம். ஒவ்வொரு பகுதியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி போட்டு, புதுச்சேரி பாதுகாப்பான மாநிலமாகவும், முழுமையாகத் தடுப்பூசி போட்ட மாநிலமாகவும் மாற்றப்படும். புதுச்சேரியை முழுமையாகத் தடுப்பூசி போட்ட மாநிலமாக்க தீவிர முயற்சி எடுக்கிறோம்.

தடுப்பூசி போட்டுக்கொண்டால்தான் கொரோனாவை ஒழிக்க முடியும். இதுதொடர்பாகப் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம். தொகுதி எம்.எல்.ஏ-க்களும் தங்கள் பகுதி மக்கள் தடுப்பூசி போட வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எவ்வளவு சீக்கிரம் தடுப்பூசி போடுகிறோமா அவ்வளவு சீக்கிரம் உடலில் எதிர்ப்பு சக்தி ஏற்படும்.

சுகாதாரத்துறையில் எங்களின் நிர்வாகத் திறமை மட்டுமன்றி, நானும், சுகாதாரத்துறை செயலர் அருணும் டாக்டர்கள் என்பதால் மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கிவருகிறோம். அதனால்தான் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது" என்று குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து புதுக்குப்பம் கிராமத்தில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த தமிழிசை, ``புதுச்சேரியில் 100% முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக்கொண்ட கிராமமாக இந்தப் புதுக்குப்பம் விளங்குகிறது. அதற்கான சான்றிதழையும் இந்தக் கிராமத்தினர் பெற்றிருக்கிறார்கள். தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் இந்தக் கிராமத்தில் கொரோனா தொற்றும் இல்லை.

தடுப்பூசி முகாம்
தடுப்பூசி முகாம்
புதுச்சேரி: `கொரோனா 2-வது அலை இளைஞர்களை அதிகமாகத் தாக்குகிறது!’ - துணைநிலை ஆளுநர் தமிழிசை

அந்த வகையில் இந்தக் கிராமம் உலகத்துக்கே முன்மாதிரி கிராமமாகத் திகழ்கிறது. தடுப்பூசி செலுத்திக்கொண்டால் கொரோனா வராது என்பதற்கு இந்தக் கிராமம் உதாரணம். அனைத்துக் கிராமங்களுக்கும் சென்று தடுப்பூசியைப் போட்டு கொரோனா இல்லாத கிராமங்களை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி ஆட்சியர்களுக்கான கூட்டத்தில் தெரிவித்தார். அதன்படி கிராமங்களில் முகாம்கள் நடத்தப்படுகின்றன” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு