Published:Updated:

அதே அறை, அதே இருக்கை; அப்போ சிறுமி, இப்போ அமைச்சர்; வைரல் புகைப்படத்தின் சுவாரஸ்ய பின்னணி!

சந்திர பிரியங்காவை இருக்கையில் அமர வைக்கும் முதல்வர்
சந்திர பிரியங்காவை இருக்கையில் அமர வைக்கும் முதல்வர்

புதுச்சேரி சட்டப்பேரவையில் அப்பா அமைச்சர் பொறுப்பேற்பதை அருகிலிருந்து பார்த்த சிறுமி, 20 ஆண்டுகளுக்குப் பின்பு அதே அறையில், அதே இருக்கையில் அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.

காரைக்கால் நெடுங்காடு தொகுதியில் 6 முறை வெற்றிபெற்றவர் முன்னாள் அமைச்சர் சந்திரகாசு. காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்த இவர், ரங்கசாமி துவங்கிய தனிக்கட்சியில் இணைந்து வேளாண்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். உடல்நலக்குறைவு காரணமாக 2017-ல் சந்திரகாசு உயிரிழந்தார். 2001-ல் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த ரங்கசாமி, தொழில்துறை அமைச்சராக பதவியேற்ற சந்திரகாசுவை அவரது இருக்கையில் அமர வைக்கிறார். அப்போது அவர்களுக்கருகில் புன்னகையுடன் நின்றிருக்கிறார் ஒரு சிறுமி.

புதுச்சேரி அமைச்சர் சந்திரகாசு
புதுச்சேரி அமைச்சர் சந்திரகாசு

அந்தச் சிறுமியைத்தான் தற்போது அமைச்சராக்கியிருக்கிறார் முதல்வர் ரங்கசாமி. அவர்தான் தற்போது புதுச்சேரியின் ஆதிதிராவிடர் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா. இவர் 40 ஆண்டுகளுக்குப்பின் புதுச்சேரி சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள`பெண் அமைச்சர்’ என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். 20 ஆண்டுகளுக்கு முன்பு சந்திரகாசுவை அமைச்சராக அமரவைத்த அதே ரங்கசாமி, தற்போது அவரின் மகளை அதே அறையில் அமைச்சராக அமர வைத்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த புகைப்படங்கள் குறித்து விகடனிடம் பேசிய அமைச்சர் சந்திர பிரியங்கா, ``2001-ல் என்னுடைய 11-வது வயதில், இப்படி ஓர் எளிமையான முதலமைச்சரா என்று தலைவரை வியப்புடன் பார்த்த தருணம் அது. எங்கள் தலைவர் முதல்வர் ரங்கசாமி வேளாண்துறை அமைச்சராகப் பணியாற்றிய இந்த அறையில்தான் அப்பா 2001-ம் ஆண்டு மற்றும் 2011-ம் ஆண்டில் அமைச்சராகப் பணியாற்றினார்.

சந்திர பிரியங்காவை அமைச்சர் இருக்கையில் அமர வைக்கும் முதல்வர் ரங்கசாமி
சந்திர பிரியங்காவை அமைச்சர் இருக்கையில் அமர வைக்கும் முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி: ’41 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் அமைச்சர்!’ கவனம் ஈர்க்கும் ரங்கசாமி அமைச்சரவை.

அதே அறையில்தான் நான் தற்போது அமைச்சராகப் பணியாற்றுகிறேன். யாருக்கும் எளிதில் கிடைக்காத வாய்ப்பு இது. ஆண், பெண் பேதமின்றி இளைய தலைமுறைக்கு முதல்வர் கொடுத்திருக்கும் பெரிய அங்கீகாரம் இது” என்று நெகிழ்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு