Published:Updated:

பணியிடத்தில் பாலியல் புகார்: ஓய்வுபெறும் நாளில் உயர் அதிகாரி சஸ்பெண்ட்; என்ன நடந்தது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சஸ்பெண்ட் செய்யப்பட்ட பத்மநாபன்
சஸ்பெண்ட் செய்யப்பட்ட பத்மநாபன்

பணியிடத்தில் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளான புதுச்சேரி பெண் மருத்துவர் எடுத்த தொடர்ச்சியான சட்டப் போராட்டத்தால், புகாரில் சிக்கிய உயரதிகாரி நீதிமன்றத்தின் தலையீட்டால் பணி ஓய்வு பெறும் நாளன்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதுச்சேரியில், பணியிடங்களில் பெண்களுக்கு நேரிடும் பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்க, `உள்ளூர் புகார்கள் குழு’ (Local Complaints Committee) என்ற தனிப் பிரிவு, அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவின் பேரில் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது. பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லையைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட அந்தப் பிரிவின் தலைவராக, முன்னாள் குழந்தைகள் நலக்குழு தலைவி டாக்டர் வித்யா ராம்குமார் நியமிக்கப்பட்டார்.

Woman (Represenational Image)
Woman (Represenational Image)
Pixabay

அந்தப் பிரிவு தொடங்கப்பட்ட சில தினங்களிலேயே அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் பெண்கள், உயரதிகாரிகளால் தங்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான தொல்லைகளைப் புகார்களாக அளித்தனர். அதில், புதுச்சேரி கால்நடைத்துறையின் இணை இயக்குநராகவும், இயக்குநராக கூடுதல் பொறுப்பையும் வகித்த பத்மநாபனின் பாலியல் தொல்லைகள் தாங்க முடியவில்லை என்று அங்கு பணிபுரியும் பெண்கள் எழுத்துபூர்வமாக அளித்தனர்.

அதனடிப்படையில், பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் அழைத்து விசாரணை நடத்திய டாக்டர் வித்யா ராம்குமார், 27 பெண்களிடம் பாலியல் தொல்லை தொடர்பாக வாக்குமூலங்களைப் பதிவுசெய்தார். அதையடுத்து, இந்தப் புகார் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்க வேண்டும் என்று பத்மநாபனுக்குக் கடிதம் அனுப்பியது அந்தக் குழு. ஆனால் அங்கு ஆஜராகாத அவர், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி, தன்னை விசாரிப்பதற்குத் தடை ஆணையை பெற்றார்.

பணியிடத்தில் பாலியல் கொடுமை: விமானப்படை அதிகாரிக்கே இதுதான் நிலை; நீங்கள் தேசத்துக்குப் பாதுகாப்பா?
Court (Representational Image)
Court (Representational Image)
Image by miami car accident lawyers from Pixabay

ரகசியமாக நடைபெற்ற இந்த விசாரணை குறித்த தகவல் லீக் ஆனதால், கால்நடைத்துறையை முற்றுகையிட்ட மகளிர் அமைப்புகள், பத்மநாபனை உடனே கைதுசெய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கிடையில், இயக்குநர் பத்மநாபன் தனது துறையில் பணிபுரியும் பெண்களிடம் ஆபாசமாகப் பேசியதாக வெளியான ஆடியோக்கள், காதில் கேட்க முடியாத ரகமாக இருந்தன.

புதுச்சேரி கால்நடை பராமரிப்புத் துறை
புதுச்சேரி கால்நடை பராமரிப்புத் துறை

அதையடுத்து, டாக்டர் பத்மநாபனை கால்நடைத்துறை இயக்குநர் பதவியிலிருந்து விடுவிப்பதாகவும், உடனே அவர்மீது வழக்குப் பதிவு செய்து எஸ்.பி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார் அப்போதைய கவர்னர் கிரண் பேடி. அதனடிப்படையில் அரசு நிறுவனமான `பான்கேர்’ துறையின் செயலராக இடமாற்றம் செய்யப்பட்டார் பத்மநாபன். தொடர்ந்து, தனது மீதான விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்று அதே ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார் பத்மநாபன்.

அப்போது, ``மூன்று மாதத்திற்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும்” என்று புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டிருந்தது நீதிமன்றம். ஆனால் அதன்பிறகு பத்மநாபன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில்தான் உயர்நீதிமன்றத்தை அணுகிய பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர், ``பத்மநாபன் செப்டம்பர் 30-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற இருப்பதால் என் மனுவை அவசர வழக்காக எடுக்க வேண்டும்” என்று மனு தாக்கல் செய்தார். அதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்னிலையில் காணொலி மூலம் இந்த வழக்கு அவசர வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

Sexual Harassment  (Representational Image)
Sexual Harassment (Representational Image)
Vikatan

வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதி சரவணன், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பத்மநாபனை சஸ்பெண்ட் செய்யும்படி புதுச்சேரி தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக நேற்று செப்டம்பர் 30-ம் தேதி பணி ஓய்வு பெற இருந்த நாளிலேயே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார் பத்மநாபன்.

பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்த வழக்குகளில் இதுபோன்ற விரைவுச் செயல்பாடுகள் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளதாக பெண்ணியச் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு