Published:Updated:

`காதல் திருமணம்; 10 மாதங்களில் கணவர் வீரமரணம்!' - ராணுவத்தில் இணையும் ராணுவ மேஜரின் மனைவி

நிகிதா
நிகிதா ( Twitter )

ஜம்மு - காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ மேஜர் விபூடி தௌண்டியாலின் மனைவி ராணுவ பணியில் சேர இருக்கிறார்.

ஓராண்டுக்கு முன்னர் தேசியக் கொடி போர்த்தப்பட்ட தன் கணவரின் உடலின் முன்பாக நின்று, பிரியாவிடை கொடுத்த மேஜர் விபூடியின் மனைவி, விரைவில் ராணுவ சீருடை அணிய இருக்கிறார். புல்வாமாவில் கடந்தாண்டு பிப்ரவரி 14-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40 பேர் வீரமரணமடைந்தனர்.

மேஜர் விபூடி தௌண்டியால்
மேஜர் விபூடி தௌண்டியால்
Twitter

தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அந்தத் தாக்குதலுக்குப் பின், அதற்குப் பின்னணியில் இருந்தவர்களைத் தேடும் பணியை பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிரமாக முன்னெடுத்தனர். அப்படி ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ராணுவத்தின் 55 ஆர்ஆர் படைப்பிரிவில் பணியாற்றியவர் மேஜர் விபூடி தௌண்டியால். புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.

`அமேசான் மூலம் ஆர்டர்; இரவு முழுவதும் ரெய்டு!' - புல்வாமா வழக்கில் வளைக்கப்பட்ட தந்தை, மகள்

அந்தவகையில் புல்வாமா மாவட்டத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படை வீரர்களுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதியை ராணுவத்தின் ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவின் 55-வது படைப்பிரிவு வீரர்கள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர். சுமார் 20 மணி நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மேஜர் விபூடி, வீரமரணமடைந்தார். அந்தச் சண்டையின்போது 35 வயதான மேஜர் விபூடி, சகவீரர்கள் 3 பேரின் உயிரைக் காத்து, தன்னுயிர் நீத்தார்.

மேஜர் விபூடி தௌண்டியால் - நிகிதா
மேஜர் விபூடி தௌண்டியால் - நிகிதா
Twitter

திருமணமாகி 10 மாதங்களின் அவரின் மனைவி நிகிதா கௌல், தன் காதல் கணவரை இழந்தார். கல்லூரி காலத்தில் அறிமுகமாகி இருவரும் காதலித்துவந்த நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் கடந்த ஏப்ரல் 2018-ல் திருமணம் நடைபெற்றது. தனது முதல் திருமண நாளை இரண்டு மாதங்களில் கொண்டாட இருந்தநிலையில், மேஜர் விபூடியின் மரணம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது.

மேஜர் விபூடி வீரமரணமடைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அவரின் மனைவி நிகிதாவும் தற்போது ராணுவப் பணியில் சேர இருக்கிறார். ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த அவரது குடும்பத்தினர் 1990-களில் டெல்லிக்கு இடம்பெயர்ந்திருக்கின்றனர். அங்கு எம்.பி.ஏ பட்டப்படிப்பு முடித்த நிகிதா, நொய்டாவில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். தன் கணவரின் மரணத்துக்குப் பின் ராணுவத்தில் இணைந்து சேவையாற்ற எண்ணியதாகச் சொல்லும் நிகிதா, தன் கணவரின் தாயாரே அதற்கு மிகப்பெரிய உந்துசக்தியாக இருந்ததாகச் சொல்கிறார்.

மேஜர் விபூடி தௌண்டியால் - நிகிதா
மேஜர் விபூடி தௌண்டியால் - நிகிதா
Twitter

இதையடுத்து, ராணுவம் நடத்திய நுழைவுத் தேர்வை எழுதி வெற்றிபெற்ற நிகிதா, நேர்காணல் சுற்றையும் வெற்றிகரமாக முடித்திருக்கிறார். ராணுவத்தின் தொழில்நுட்பப் பிரிவில் இணைய இருக்கும் அவருக்கு சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்திலிருந்து பயிற்சிக்காக ஆணை அனுப்பப்பட்டிருக்கிறது. இதை உறுதிசெய்துள்ள விபூடியின் தாயார் சரோஜ் தௌண்டியால், தன் மருமகளை எண்ணி மகிழ்ச்சியடைவதாகக் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக `டைம்ஸ் ஆஃப் இந்தியா' பத்திரிகைக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், ``என் மருமகள் (நிகிதா) மிகவும் தைரியமான பெண். தாயைப் போல் என்னைக் கவனித்துக்கொள்கிறார். நாங்கள் செய்த புண்ணியம்தான், அவளை எங்களிடம் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது'' என்கிறார்.

Vikatan

தன் கணவரின் அடியொற்றி நாட்டுக்காக சேவையாற்ற எண்ணியதாகக் கூறியுள்ள நிகிதா, தேசியக் கொடி போர்த்தப்பட்ட நிலையில், அவரது உடல் கொண்டுவரப்பட்டபோதே இந்த முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறுகிறார். இதுதொடர்பாக ஆங்கில ஊடகங்களிடம் பேசிய அவர், ``முதலில் நடந்தவற்றை ஏற்றுக்கொள்ள எனக்கு நேரம் தேவைப்பட்டது. எப்போதும் நேர்மறையாக சிந்திக்கக் கூடியவர் விபூ. அவர் என் வாழ்வின் ஒளி. அதனால், எப்போதெல்லாம் இந்திய ராணுவத்தில் சேருவது குறித்து எனக்கு தயக்கம் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் கண்ணை மூடி இந்தச்சூழலில் அவர் என்ன முடிவெடுத்திருப்பார் என்பதை எண்ணிப் பார்ப்பேன். அவர் எப்போதும் என்னுடனே இருக்கிறார். எனக்குத் தேவையான சக்தியை அவரே அளிக்கிறார். இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்ற எனது முடிவுக்குப் பின்னால் அவரே நிற்கிறார்'' என்று நெகிழ்ந்திருக்கிறார்.

நிகிதா
நிகிதா
Twitter

மேஜர் விபூடிக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் விதமாகக் கடந்தாண்டு வெளியான வீடியோ ஒன்றில் பேசிய நிகிதா, ``நீங்கள் என்னைக் காதலிப்பதாகக் கூறினீர்கள். ஆனால், என்னைவிட இந்த தேசத்தையே அதிகம் நேசித்திருக்கிறீர்கள். உங்களால் நான் மட்டுமல்ல, இந்த தேசமே பெருமை கொள்கிறது'' என்று கூறியிருந்தார்.

அடுத்த கட்டுரைக்கு