Published:Updated:

புனே: கொரோனா ஒழிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி உதவி கமிஷனர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!

சோனவானே
சோனவானே

புனேயில் கொரோனா ஒழிப்பில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி உதவி கமிஷனர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிக கொரோனா தொற்று இருந்தது. தற்போது படிப்படியாகக் குறைந்துவருகிறது. இதில் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட நகரம் என்று எடுத்துக்கொண்டால் புனேவைச் சொல்லலாம். மும்பையைவிட புனேயில் தற்போதும் கொரோனா பாதிப்பு இருந்துகொண்டிருக்கிறது. புனேயில் மாநகராட்சி உதவி கமிஷனராக இருந்தவர் தயானந்த் சோனவானே (56). இவர் தனது கட்டுப்பாட்டுக்குட்பட்ட பகுதியில் கொரோனா ஒழிப்பில் தீவிரமாக ஈடுபட்டார். கொரோனா விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்துவந்தார். இந்தநிலையில் அவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது.

சோனவானே
சோனவானே

இதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோனார். அவரது மரணம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மிகவும் ஏழைக் குடும்பத்திலிருந்து வந்த சோனவானே கொரோனா தொற்று பரவுவதற்கு முன்புதான் புனேயில் உதவி கமிஷனராக பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சோனவானேவுக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

புனேயில் இதுவரை கொரோனாவுக்கு 50 மாநகராட்சி ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்துக்கு புனே மாநகராட்சி நிர்வாகம் ரூ.25 லட்சம் உதவித்தொகை வழங்கிவருகிறது. புனே கிராமப் பகுதிகளிலும் இந்த முறை அதிக அளவில் தொற்று பரவியிருக்கிறது. புனே மாவட்டத்தில் மட்டும் கொரோனாவுக்கு 12,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு