Published:Updated:

`என்னுடைய வாழ்வின் ஒளி அவன்!'- ஆதரவற்றோர் இல்ல மோசடிகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த புனே இளைஞர்

தினேஷ் ராமையா

என்னுடைய வாழ்வில் ஆகச்சிறந்த தருணம் அவன் எனக்குக் கிடைத்தது. என்னுடைய உலகமே அவன்தான். அவன் என்னுடைய மகன். நாங்கள் இருவரும் ஒன்றிணைந்து இந்த வாழ்வை மிகவும் ஸ்பெஷலானதாக மாற்றுவோம்'' என்கிறார் இந்த நம்பிக்கை இளைஞர்.

Aditya Tiwary, Avnish
Aditya Tiwary, Avnish ( Facebook )

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஆதித்யா திவாரி என்ற இளைஞர் குழந்தை ஒன்றைத் தத்தெடுத்தவிதம் குறித்தும் ஆதரவற்றோர் இல்லங்கள் பெயரில் நடக்கும் மோசடிகள் குறித்தும் ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தார். `ஹுயூமன்ஸ் ஆஃப் பாம்பே' என்ற பிரபலமான ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான அவரது பதிவு வைரலாகி வருகிறது.

Avnish
Avnish
Facebook

அவரது பதிவின் சாராம்சம் இதுதான். ``ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு...எனது தந்தையின் பிறந்தநாளன்று அருகில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்துக்கு இனிப்புகள் வழங்குவதற்காகச் சென்றிருந்தேன். அப்போதுதான் நான் முதன்முதலாக அவ்னிஷைப் பார்த்தேன். அப்போது அவ்னிஷ் 5 மாதக் குழந்தை. ஒரு மூலையில் இருந்த பெட்டில் கவனிப்பாரின்றி அவன் கிடத்தப்பட்டிருந்தான். அங்கிருந்த யாரும் அவனைக் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை.

அங்குசென்று அவனை நான் தூக்கினேன். என்னைப் பார்த்தவுடன் அவன் சிரித்தான். அவனுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டேன். நான் அங்கிருந்த வார்டனைப் பார்த்து, `இங்கிருக்கும் குழந்தைகளின் எதிர்காலம் என்ன?' என்று கேட்டேன். `அவர்களை யாரேனும் தத்தெடுத்துக்கொள்வார்கள். அவ்னிஷ் கூட தத்தெடுக்கப்படலாம். ஆனால், அவன் பைத்தியம். டவுன் சிண்ட்ரோம் நோயால் அவன் பாதிக்கப்பட்டிருக்கிறான். எப்படி இருந்தாலும் இன்னும் சில ஆண்டுகளில் அவன் இறந்துவிடுவான்' என்றார்.

அன்று நான் வீட்டுக்குச் சென்றபின்னர் என்னால் நிம்மதியாக உறங்க முடியவில்லை. `எப்படி இரவு முழுவதும் அவன் தனியாக அந்த பெட்டில் கழிப்பான். அப்படியே அவன் இறந்துவிடுவானோ?' போன்ற சிந்தனைகள் எனது தூக்கத்தைக் கெடுத்தன. மறுநாள் அவர்களிடத்தில் சென்று அவ்னிஷைத் தத்தெடுக்க விரும்புவதாகக் கூறினேன். என்னைப் பார்த்து சிரித்தபடியே அவர்கள், `திருமணமாகாதவர்; அதுவும் 30 வயதுக்குட்பட்டவருக்குக் குழந்தைகளைத் தத்தெடுத்துக்கொள்ள உரிமை கிடையாது' என்று பதிலளித்தனர்.

Avnish
Avnish
மடியிலிருந்து விழுந்த குழந்தை... 50 கி.மீ தூரம் சென்றபின் பதறிய கேரளத் தாய்..!- நடந்தது என்ன?

எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆனால், என்னால் இந்த விவகாரத்தில் நம்பிக்கையை இழந்துவிட முடியாது என்று மட்டும் உணர்ந்துகொண்டேன். அந்த ஆதரவற்றோர் இல்லத்துக்கு அடிக்கடி சென்று, அவ்னிஷுடன் நேரம் செலவிட்டேன். மேலும், அவனுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பதைத் தெரிந்துகொள்வதற்காக அவனது ஆவணங்கள் மற்றும் மருத்துவச் சிகிச்சை அளித்ததற்கான பதிவுகளையும் கேட்டேன். நான் ஒவ்வொரு முறை கேட்கும்போதும் வார்டன் எனக்கு மழுப்பலாகவே பதிலளித்து வந்தார். எனது கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல், ஒருகட்டத்தில் அவ்னிஷை அவர்கள் போபாலில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்துக்கு இடம் மாற்றினர். அவனுக்காக நிற்க வேண்டும் என்பதில் உறுதியாக நான் இருந்தேன்.

அதனால், வார இறுதி நாள்களில் போபால் சென்று அவ்னிஷுடன் நேரம் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அதேபோல், நம் நாட்டில் குழந்தைகளைத் தத்தெடுப்பதற்கான சட்ட விதிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்யத் தொடங்கினேன். அதேபோல், எனக்கு உதவும்படி அமைச்சர்கள், பிரபலமானவர்களுக்குத் தினசரி கடிதங்களும் எழுதத் தொடங்கினேன். அதேபோல், குழந்தைகள் நலவாரியத்தினரிடமும் இதுகுறித்து பேசிக்கொண்டிருந்தேன். அவ்னிஷ் குறித்த எந்தவித ஆவணங்களும் அவர்களிடம் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டேன். இதனால், அந்த ஆதரவற்றோர் இல்லம் மீது எனக்கு சந்தேகம் எழுந்தது. அவனைப் போல் அங்கே இன்னும் நிறைய குழந்தைகள் சட்டவிரோதமாக அடைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றியது.

அவர்களில் பலர் திடீரென மாயமானது தெரியவந்தது. குழந்தை கடத்தல் மற்றும் உடல் உறுப்புகள் கடத்தலால் அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று எனக்கு சந்தேகம் பிறந்தது. அவ்னிஷுக்கோ அல்லது மற்ற குழந்தைகளுக்கோ அப்படி ஒரு சம்பவம் நடக்கக் கூடாது என்று தோன்றியது. அதனால், காவல்நிலையத்துக்குச் சென்று உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று கோரி தொடர்ச்சியாக புகார்கள் கொடுக்கத் தொடங்கினேன். அதன்பின்னர், எனக்கு மிரட்டல் தொனியில் போன்கால்கள் வந்தன. இந்த விவகாரத்திலிருந்து விலகி இருக்காவிட்டால் எனக்கு ஏதாவது நடந்துவிடும் என்று பல்வேறு நம்பர்களிலிருந்தும் மிரட்டல்கள் வரத் தொடங்கின.

என் வலியை மறந்து மத்த அம்மாக்களை சிரிக்க வைக்கிறேன்'' - குழந்தை புகைப்படக்கலையில் ஜொலிக்கும் சாரதா
Avnish, Aditya Tiwary
Avnish, Aditya Tiwary
Facebook

இறுதியில் சமூக நலத்துறை அமைச்சரிடமிருந்து எனக்குப் பதில் வந்தது. அவர் உதவுவதாக உறுதியளித்தார். அதன்பின்னர் அந்த ஆதரவற்றோர் இல்லம் குறித்து விசாரணை நடத்தி, அதைத் தடை செய்தனர். 11 மாதங்கள் தொடர் போராட்டத்துக்குப் பின்னர் அவ்னிஷை நான் தத்தெடுக்க அனுமதி வழங்கினர். மற்ற குழந்தைகளும் காப்பாற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். என்னுடைய வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான தருணம் அது.

நான் தனியாக வாழ்ந்து பழகியிருந்தேன். அதனால், குழந்தை வாழ்வதற்கு ஏற்ற இடமாக என்னுடைய வீட்டை மாற்றினேன். டயாபர் மாற்றுவது முதல் குழந்தையை எப்படிக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது வரை இரவு பகலாக முயற்சி செய்து கற்றுக்கொண்டேன். அதேபோல், டவுன் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை எப்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தகவல்களைத் தேடிப்பிடித்துக் கற்றுக்கொண்டேன்.

Avnish, Aditya Tiwary
Avnish, Aditya Tiwary
Facebook

அவ்னிஷ் என்னுடைய வீட்டுக்கு வந்தபோது, ஒரு வாழ்வில் ஒளியேற்றப்பட்டதுபோல் உணர்ந்தேன். இப்போது அவனைப்பற்றிக் கவலைப்படுவதை நான் நிறுத்திவிட்டேன்; காரணம் அவன் என்னருகிலேயே இருக்கிறான்.

கருவில் 117 நாள்கள் பராமரிப்பு; 2.13 கிலோ எடை! - மூளைச்சாவு அடைந்த பெண்ணுக்குப் பிறந்த குழந்தை

இது நடந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன. அவ்னிஷ் இப்போது பள்ளிக்கு செல்லத் தொடங்கியிருக்கிறான். அவன் என்னையே அம்மா, அப்பா என்று அழைக்கிறான். காரணம் தினசரி குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்துச் செல்ல அவர்களது அம்மாக்களே வருவதை அவன் பார்க்கிறான். பகல்நேரங்களில் நான் வேலைக்குச் செல்லும்போது அவன் பகல்நேரக் காப்பகத்தில் இருக்கிறான். இரவு நேரங்களில் நாங்கள் இருவரும் விளையாடுவதுடன் படிக்கவும் செய்கிறோம். என்னுடைய வாழ்வில் ஆகச்சிறந்த தருணம், அவன் எனக்குக் கிடைத்தது. என்னுடைய உலகமே அவன்தான். அவன் என்னுடைய மகன். நாங்கள் இருவரும் ஒன்றிணைந்து இந்த வாழ்வை மிகவும் ஸ்பெஷலானதாக மாற்றுவோம்'' என்கிறார் இந்த நம்பிக்கை இளைஞர்.

Avnish, Aditya Tiwary
Avnish, Aditya Tiwary
Facebook

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த ஆதித்யா திவாரி, சாஃப்ட்வேர் இன்ஜினீயராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அவர் அவ்னிஷைத் தத்தெடுத்ததன் மூலம் இந்தியாவில் இளம் வயதில் குழந்தையைத் தத்தெடுத்த மணமாகாத ஆண் என்ற பெருமையைப் பெற்றார். அவர் இப்போது குழந்தை தத்தெடுப்பு குறித்து நாடு முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அதனால், தன்னுடைய சாஃப்ட்வேர் இன்ஜினீயர் பணியைத் துறந்த திவாரி, தற்போது புனேவில் உள்ள தனியார் தொண்டுநிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.