Published:Updated:

பற்றியெரியும் சீரம் இன்ஸ்டிடியூட்... கொரோனா தடுப்பூசிகளின் நிலை என்ன?!

சீரம் நிறுவனத்தில் தீ விபத்து
சீரம் நிறுவனத்தில் தீ விபத்து ( ANI )

இந்தியாவில் அவசரக் கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கும் இந்த தடுப்பூசியைப் பெருமளவில் தயாரித்து உலகம் முழுக்க விநியோகம் செய்யவிருக்கிறது புனேவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா(SII).

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஸினஸா நிறுவனம் இணைந்து வடிவமைத்திருக்கும் COVID-19 தடுப்பூசி 'கோவிஷீல்டு'. இந்தியாவில் அவசரக் கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கும் இந்த தடுப்பூசியைப் பெருமளவில் தயாரித்து உலகம் முழுக்க விநியோகம் செய்யவிருக்கிறது புனேவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (SII).

எதிர்பாராத விதமாகத் தற்சமயம் புனேவுக்கு அருகில் இருக்கும் மஞ்ச்ரி என்னும் கிராமத்தில் இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட்டில் தீ விபத்து நிகழ்ந்திருக்கிறது. அந்தப் பகுதியே மொத்தமாகப் புகையால் சூழப்பட்டிருக்கிறது. இந்த வளாகத்தில் 'கோவிஷீல்டு' மட்டுமல்லாமல் பல நோய்களுக்குமான தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

தடுப்பூசி
தடுப்பூசி

மதியம் 3 மணியளவில் இந்த செய்தி கிடைக்கப்பெற்ற தீயணைப்புத் துறை 10 தீயணைப்பு வண்டிகளுடன் சீரம் இன்ஸ்டிடியூட் வளாகத்திற்கு விரைந்துள்ளது. தீ எப்படி ஏற்பட்டது என்பதைத் தீயணைப்புத் துறையினர் விசாரித்து வருவதாகத் தெரிகிறது. வெல்டிங் வேலைகளின் போதே தீ பற்றிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த சூழலில் உலகமெங்கும் கோடிக்கணக்கில் விநியோகம் செய்ய வைக்கப்பட்டிருந்த 'கோவிஷீல்டு' தடுப்பூசிகளுக்கு எதாவது பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறதா என்பதே பலரது கேள்வியாக இருக்கிறது.
சீரம் நிறுவனத்தில் தீ விபத்து
சீரம் நிறுவனத்தில் தீ விபத்து
ANI

காசநோய் தடுப்பூசி (BCG) தயாரிக்கப்படும் இடத்தின் அருகில்தான் தீ விபத்து நிகழ்ந்திருக்கிறது. கோவிஷீல்டு தயாரிக்கப்படும் கட்டடம் வெகுதொலைவில் இருக்கிறது. அதனால் அதன் தயாரிப்பு பணிகளில் எந்த இடர்பாடும் இருக்காதென SII-ன் செயல் இயக்குநர் டாக்டர். சுரேஷ் ஜாதவ் தெரிவித்திருக்கிறார்.

தீப்பற்றிய கட்டடத்திலிருந்து இதுவரை மூன்று பேர் மீட்கப்பட்டிருப்பதாகவும், அடர்ந்த புகை மீட்புப் பணிகளைத் தாமதப்படுத்துவதாகவும் தெரிவித்திருக்கிறது தீயணைப்புத் துறை. குறிப்பிடப்படும் கட்டடத்தின் மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது மாடிகளில் தீ பரவியுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்!

அடுத்த கட்டுரைக்கு