Published:Updated:

பஞ்சாப்: `சீனப் பின்னணி இல்லாத 50,000 ஸ்மார்ட்போன்கள்!’ -பள்ளி மாணவிகளுக்கு வழங்க ஏற்பாடு

பஞ்சாப் முதல்வர்
பஞ்சாப் முதல்வர்

``கொரோனா காரணமாக நெருக்கடி நிலவும் இந்தச் சூழலில் மாணவிகள் ஆன்லைன் வழியாகக் கல்வி கற்க ஸ்மார்ட்போன்கள் உதவும்’’ எனவும் நம்பிக்கை பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து அதிகளவில் வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் கல்வி நிலையங்கள் திறப்பது தொடர்பான முடிவுகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதனிடையே, மாணவர்களுக்கு கல்வி ரீதியிலான பாதிப்பு ஏற்படக் கூடாது என்று கூறி பல பள்ளிகளும் ஆன்லைன் வழியாக வகுப்புகளை நடத்தி வருகின்றன. ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது தொடர்பான கலவையான விமர்சனங்கள் இருந்து வந்தாலும், பெரும்பாலான தனியார் பள்ளிகளில் வகுப்புகள் தொடர்ந்து நடத்தி வருகின்றன. ஆனால், இந்த வகுப்புகளில் ஸ்மார்ட்போன், லேப்டாப் இல்லாத காரணத்தால் பங்கேற்க முடியாத ஏழை மாணவர்கள் பலரும் மன அழுத்தத்தில் மூழ்கியுள்ளனர். சிலர், தற்கொலை செய்துகொண்ட செய்திகளையும் கடந்து வந்துள்ளோம். இந்தப் பிரச்னையைத் தீர்க்க பஞ்சாப் மாநில அரசு, தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.

ஸ்மார்ட்போன்கள்
ஸ்மார்ட்போன்கள்

பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். முதற்கட்டமாக சுமார் 50,000 ஸ்மார்ட்போன்கள் வந்துள்ளது எனவும் அவை ஸ்மார்ட்போன் இல்லாத மாணவிகளுக்கு முன்னுரிமை அளித்து வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இதனால், கொரோனா காரணமாக நெருக்கடி நிலவும் இந்தச் சூழலில் மாணவிகள் ஆன்லைன் வழியாகக் கல்வி கற்க முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சீனாவுடன் எந்தத் தொடர்பும் இல்லாத நிறுவனங்களிடம் இருந்து இந்த ஸ்மாட்போன்களை மாநில அரசு வாங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளைத் தொடர்ந்து ஸ்மார்ட்போன்கள் 9 மற்றும் 10 வகுப்பு மாணவிகளுக்கும் வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் திட்டமானது கல்வியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

மாணவர்கள்
மாணவர்கள்
Representational Image

காங்கிரஸ் கட்சியானது இளைஞர்களை ஈர்க்கும் வகையில் 2017-ம் ஆண்டு தேர்தலின்போது, தனது அறிக்கையில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஒருவருட இலவச டேட்டா வழங்குவதாக அறிவிப்பு தெரிவித்திருந்தது. ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் ஸ்மார்ட்போன் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், இளைஞர் காங்கிரஸ் மற்றும் கட்சியின் மாநில தலைமை இடையே அதிருப்தி நிலவி வந்ததாகவும் கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி, தேர்தலின்போது பட்டியலிட்ட 562 வாக்குறுதிகளில் சுமார் 435 வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகவும் மீதமுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தற்போது கவனம் செலுத்தி வருவதாகவும் அக்கட்சி தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

பஞ்சாப்: `அரசுப் பள்ளிகளில் கல்விக் கட்டணம் வசூலிக்க மாட்டோம்!’ - முதல்வர் அமரீந்தர் சிங்
அடுத்த கட்டுரைக்கு