Published:Updated:

`1957-ல் பட்டப் படிப்பு; 83 வயதில் பட்ட மேற்படிப்பு!' - கனவை நிஜப்படுத்திய பஞ்சாப் முதியவர்

Sohan Singh Gill
Sohan Singh Gill ( Twitter )

பஞ்சாப்பைச் சேர்ந்த ஒரு முதியவர் தன் 83-வது வயதில் பட்ட மேற்படிப்பு முடித்து அசத்தியுள்ளார். அதற்கான சான்றிதழ் வாங்கும்போது அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் உள்ள டாட்டா (Daata ) என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சோஹன் சிங் கில். படிப்புக்கு வயது தடையில்லை என்பதை நிரூபித்து தன் 83-வது வயதில் பட்ட மேற்படிப்பு முடித்து அசத்தியுள்ளார் கில்.

Graduation
Graduation

1957-ம் ஆண்டு மஹில்பூரில் உள்ள கல்சா கல்லூரியில் தன் பட்டப் படிப்பை முடித்துள்ளார். அதன் பிறகு அமிர்தசரஸில் உள்ள கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். ``என் கல்லூரியின் துணை முதல்வர் வார்யம் சிங்தான் (Waryam Singh) முதன்முதலில் என்னை பட்ட மேற்படிப்பு படிக்க வேண்டும் என வலியுறுத்தினார். எனக்கு ஆசிரியர் பணியின் மீது ஆர்வம் இருந்ததால் மேற்படிப்பு முடித்துவிட்டு கல்லூரி பேராசிரியராகும்படி அவர் கூறினார்.

எனக்கும் அந்த ஆசை இருந்தது. ஆனால், அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை. அடுத்த சில வருடங்களில் நான் கென்யாவுக்குச் செல்ல நேர்ந்தது. அங்கு சில காலங்கள் தங்கியிருந்து ஆசிரியராகவே என் பணியைத் தொடர்ந்தேன். பின்னர் 1991-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்து 2017-ம் ஆண்டுவரை பல்வேறு பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றினேன். இருந்தும் பட்ட மேற்படிப்பை முடிக்கவில்லை என்ற கவலை மட்டும் என் மனதுக்குள் இருந்தது.

Books
Books

இரண்டு வருடங்களுக்கு முன்னர் எப்படியேனும் படித்துவிட வேண்டும் என முடிவு செய்து எம்.ஏ ஆங்கிலத்தைத் தேர்வுசெய்து தொலைதூர கல்வியில் சேர்ந்தேன். என் உடல் சக்தி மற்றும் கடவுளின் அருளால் இறுதியாக நான் என் கனவை நிஜமாக்கிவிட்டேன். குழந்தைப் பருவத்திலிருந்தே எனக்கு ஆங்கிலம் மீது ஈர்ப்பு இருந்தது அதனால் இதைத் தேர்வு செய்தேன்.

கதறிய குழந்தைகள்; மருமகளுக்கு `பைத்திய' பட்டம்! - வீடியோவால் சிக்கிய உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி

நான் கென்யாவில் இருக்கும்போது பட்ட மேற்படிப்பு படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சூழ்நிலைகள் சரியாக இல்லாததால் அப்போதும் வாய்ப்பு தவறிப்போனது. எப்படியும் எம்.ஏ படிப்பேன் என்று எனக்குத் தெரியும். நான் பல மாணவர்களுக்குக் கற்பித்துள்ளேன். அவர்கள் அனைவரும் நல்ல மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்” என நெகிழ்கிறார் சோஹன் சிங்.

Sohan Singh Gill
Sohan Singh Gill
jagran.com

1937-ம் ஆண்டு பிறந்த சோஹன் சிங் மஹில்பூரில் உள்ள அரசுப் பள்ளியில் படித்துள்ளார். சிறந்த கால்பந்து மற்றும் ஹாக்கி வீரராகவும் இருந்துள்ளார். ’ஆரோக்கியமான உடல்நலம் மற்றும் நேர்மறையான சிந்தனைதான் தன்னை இன்னும் வழிநடத்துகிறது. இனி குழந்தைகளுக்கான புத்தகங்களை எழுத உள்ளேன்' என சோஹன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு