Published:Updated:

சிறப்புக் கூட்டம்; கேரள வழியில் பஞ்சாப்! - சட்டமன்றத்தில் நிறைவேறியது குடியுரிமை எதிர்ப்பு தீர்மானம்

குடியுரிமை போராட்டம்
குடியுரிமை போராட்டம்

கேரளாவை அடுத்து பஞ்சாப்பிலும் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் பல்வேறு மக்கள் தொடர்ந்து தங்களின் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இதனால் கடந்த ஒரு மாதமாக நாட்டின் பல மாநிலங்களில் போராட்டம், வன்முறை, கலவரம், அடிதடி போன்ற சம்பவங்கள் நடைபெற்றன. குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்குக் கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப் ஆகிய மாநில அரசே முழு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. மேலும், அம்மாநிலத்தின் முதல்வர்கள் தலைமையிலும் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன.

கேரள முதல்வர்
கேரள முதல்வர்

இந்தச் சட்டத் திருத்த மசோதாவுக்கு என்ன எதிர்ப்பு வந்தாலும் அமல்படுத்தியே தீருவோம் என்று கண்டிப்புடன் தெரிவித்துவிட்டது மத்திய பா.ஜ.க அரசு. இதற்கிடையில், குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ``குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் மாநிலம் கேரளா. அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கொள்கைகளை மீறும் வகையில் சட்டத் திருத்தம் உள்ளதால் அதற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் விளக்கமளித்திருந்தார்.

`மதச்சார்பின்மைக்கு எதிராக உள்ளது!’- சிஏஏ விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடிய முதல் மாநிலம்

இந்த நிலையில், கேரளாவைப் பின்பற்றி பஞ்சாப் மாநிலத்தின் சட்டமன்றத்திலும் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அங்கு இரண்டு நாள்கள் கூடிய சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் இது நிறைவேற்றப்பட்டுள்ளது. பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சியின் அமரீந்தர் சிங் முதல்வராக உள்ளார். இவரும் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார்.

பஞ்சாப் முதல்வர்
பஞ்சாப் முதல்வர்

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ``குடியுரிமைச் சட்டத் திருத்தம் அனைவரையும் பிளவுபடுத்துகிறது. சுதந்திரமான மற்றும் நியாயமான ஜனநாயகத்தை எதிர்க்கிறது. குடியுரிமைச் சட்டம் அனைவருக்கும் சமத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும். ஆனால், இது மதம் சார்ந்த பாகுபாடுகளை ஊக்குவிக்கிறது. இது மக்களுக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின் செல்ல