Published:Updated:

`விராட் கோலியின் 9 மாதக் குழந்தைக்கு மிரட்டல்' - கண்டனம் தெரிவித்த ராகுல் காந்தி!

`இந்திய அணியின் தோல்விக்கு முகமது ஷமிதான் காரணம்’ என அவரை விமர்சித்துவரும் கும்பல், தற்போது அவருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்த விராட் கோலிக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது.

ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றுவரும் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றது இது முதன்முறை. இந்திய அணியின் தோல்வி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், இந்திய அணியின் தோல்விக்கு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிதான் காரணம் என சமூக வலைதளங்களில் சிலர் தரம் தாழ்ந்த வகையில் அவரை விமர்சித்தனர். அதையடுத்து, முகமது ஷமிக்கு ஆதரவாக கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கத் தொடங்கினார்கள். அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளிட்டோர் ஷமிக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தனர். விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக, ``மதத்தின் அடிப்படையில் ஒருவரை விமர்சிப்பது மிகவும் மோசமான செயல்" என்று கருத்து பதிவிட்டிருந்தார்.

கோலி - ஷமி
கோலி - ஷமி
காங்கிரஸை வழிநடத்த ராகுல் காந்தியைத் தவிர வேறு தலைவர்களே இல்லையா?! - ஓர் அலசல்

இந்த நிலையில், முகமது ஷமியை விமர்சித்துவரும் கும்பல் தற்போது அவருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்த விராட் கோலிக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது. ஏற்கெனவே, விராட் கோலியின் தலைமை சரியில்லை என்றும், அவர் இந்திய அணியைத் திறம்பட நிர்வகிக்கவில்லை என்றும் விமர்சித்து வந்தவர்கள், தற்போது சமூக வலைதளங்களில் விராட் கோலியின் ஒன்பது மாதப் பெண் குழந்தைக்கு மிரட்டல் விடுத்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

`இந்திய அணிக்காகப் போராடும் கோலியின் குழந்தைக்கு மிரட்டல் விடுப்பதா?' எனப் பல்வேறு தரப்பினரும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றனர். `இந்த விவகாரத்தில் டெல்லி காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?’ என்று கேள்வி எழுப்பியிருக்கும் மகளிர் ஆணையம், `விராட்டின் குழந்தைக்கு மோசமான முறையில் மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதற்கு நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும்’ என்றும் தெரிவித்திருக்கிறது.

 ராகுல் காந்தி
ராகுல் காந்தி
ANI

இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விராட் கோலிக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``அன்புள்ள விராட், இந்த மக்கள் அனைவரும் வெறுப்பால் நிரப்பப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு யாரும் அன்பைக் கொடுக்கவில்லை. எனவே, இவர்களை மன்னித்துவிடுங்கள். தொடர்ந்து, இந்திய அணியைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்" என்று கருத்து பதிவிட்டிருக்கிறார்.

முன்னதாக முகமது ஷமி விமர்சனத்துக்கு உள்ளானபோதும், ராகுல் காந்தி அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு