Published:Updated:

India-China FaceOff: `நரேந்திர மோடி உண்மையில் சரண்டர் மோடி!’ - ராகுல் காந்தி

பிரதமர் மோடி
பிரதமர் மோடி ( ANI )

``மோடியின் ஆட்சியில் சீனா இந்தியாவின் பகுதியை ஆக்கிரமித்துள்ளது. இனிமேலாவது மோடி தன்னுடைய அணுகுமுறையை மாற்றுவாரா?”

இந்தியா, சீனா இடையேயான எல்லைப் பிரச்னை அதிக பதற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. எல்லைகளில் இருநாடுகளும் தாக்குதல் நடத்துவதற்கான போர் விமானங்கள், பீரங்கிகள் உள்ளிட்டவற்றை நிறுத்தி வைத்திருப்பதாகவும் லடாக் பகுதியில் நிலவும் சூழல் மிகவும் மோசமாக இருப்பதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. பேச்சு வார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவும் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் இருநாடுகளின் தரப்பிலும் கூறப்பட்டு வருகிறது. எனினும், எல்லைப் பிரச்னையில் என்னதான் நடக்கிறது என்ற குழப்பங்களும் மறுபக்கம் நிலவி வருகிறது. மத்திய அரசும் எல்லையில் நடப்பவற்றை தெளிவாகக் கூறவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றன. இந்த நிலையில், ராகுல் காந்தி மீண்டும் பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஜப்பான் டைம்ஸ் என்ற பத்திரிகையில் வெளியான கட்டுரை ஒன்றைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, அந்தக் கட்டுரையின் கேப்ஷனில் ``நரேந்திர மோடி உண்மையில் சரண்டர் மோடி” என்று பதிவிட்டுள்ளார். பல ஆண்டுகளாக சீனாவுக்காக பிரதமர் மோடி வளைந்துகொடுத்த நிலையில், தற்போது இந்திய எல்லைக்குள் சீனா அத்துமீறியிருக்கிறது. சீனா தொடர்பான அவரது அணுகுமுறையை மாற்ற இது போதுமானதாக இருக்குமா? என மோடியை விமர்சிக்கும் விதமாக அந்தக் கட்டுரை எழுதப்பட்டிருந்தது. முன்னதாக, எல்லைப் பிரச்னை தொடர்பாக மோடி பேசுகையில், ``இந்திய எல்லைக்குள் சீனப் படைகள் ஊடுருவவில்லை. இங்குள்ள எல்லைகளையும் அவர்கள் கைப்பற்றவில்லை” எனக் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்லைப் பிரச்னை தொடர்பாக ராகுல் காந்தி, மோடியை எல்லையில் பதற்றம் தொடங்கிய நாள்களில் இருந்தே விமர்சித்து வருகிறார். எல்லையில் நடப்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதையடுத்து, அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பிரதமர் பேசியதை விமர்சிக்கும் விதமாக ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், ``இந்தியாவின் பகுதியை சீனாவின் தாக்குதலுக்குப் பணிந்து பிரதமர் ஒப்படைத்துவிட்டார். அந்தப் பகுதி சீனப் பகுதியாக இருந்தால் : 1. நமது வீரர்கள் ஏன் கொல்லப்பட்டனர்? 2. எந்தப் பகுதியில் அவர்கள் கொல்லப்பட்டனர்?” என்று கேள்விகளையும் எழுப்பியிருந்தார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இதுதொடர்பாக விளக்கம் அளித்த பிரதமர் அலுவலகம், ``ஜூன் 15-ம் தேதி நடைபெற்ற தாக்குதலுக்குப் பிறகே யாரும் நம் எல்லைக்குள் ஊடுருவவில்லை என பிரதமர் பேசினார். ஆனால், அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது” என விளக்கம் அளித்துள்ளது.

ராகுலின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``நாடு முழுவதும் ஒன்றுபட்டு நிற்கும்போது ராகுல் காந்தி மலிவான அரசியலில் ஈடுபடாமல் தேச நலனுக்காக ஒற்றுமையுடன் நிற்க வேண்டும்” என்று கூறினார்.

இந்திய சீன பிரச்னை... பிரதமர் மோடி நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நடந்தது என்ன?
அடுத்த கட்டுரைக்கு