Published:Updated:

`அறியாமையைவிட ஆபத்தானது ஆணவம்!’ - மத்திய அரசை விமர்சித்த ராகுல் காந்தி #corona

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ஊரடங்கு மற்றும் பாதிப்பு எண்ணிக்கையை ஒப்பிட்டு வீடியோ வடிவிலான கிராஃப் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, கேப்ஷனில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மேற்கோள் ஒன்றைச் சுட்டிக்காட்டி மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

கொரோனா வைரஸால் இந்தியா கடுமையாகப் பாதிப்படைந்து வருகிறது. இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 10,000-ஐ நெருங்கி வருகிறது.

இந்தநிலையில், ஊரடங்கைத் தளர்த்துவது இன்னும் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் உட்பட பலரும் எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர். காங்கிரஸைச் சேர்ந்த ராகுல் காந்தியும் தொடர்ந்து மத்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், தற்போது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மேற்கோள் ஒன்றைச் சுட்டிக்காட்டி மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

ஊரடங்கு மற்றும் பாதிப்பு எண்ணிக்கையை ஒப்பிட்டு வீடியோ வடிவிலான கிராஃப் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, ``ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் `அறியாமையை விட ஆபத்தானது ஆணவம் மட்டுமே’ என்ற மேற்கோளை இந்த ஊரடங்கு நிரூபித்துவிட்டது” என்று வீடியோவின் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 7 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ, பல கட்டங்களாக அமல்படுத்தப்பட்ட லாக் டௌன்களில் எவ்வளவு தொற்றுகள் அதிகரித்துள்ளன என்பதை விளக்கும் விதமாக உள்ளது. கடந்த சில நாள்களாக இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 10,000 பேருக்குப் புதிதாக தொற்று இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. குணமடைந்து வருபவர்களின் சதவிகிதமும் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். எனினும், அதிகரித்து வரும் பாதிப்புகள் மக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது எனலாம்.

ஊரடங்கு
ஊரடங்கு

வைரஸ் பரவல் தொடர்பான நடவடிக்கைகள், ஊரடங்கு தளர்வுகள் மற்றும் ஏழை மக்களின் நிலை ஆகியன குறித்து ராகுல் காந்தி தொடர்ந்து பல்வேறு துறை நிபுணர்களுடன் காணொலி வாயிலாகக் கலந்துரையாடி வருகிறார்.

`தொற்று அதிகமாகும் நேரத்தில் ஊரடங்கை அரசு தளர்த்தி வருகிறது, இந்தியாவில் லாக்டௌன் தோல்வி அடைந்த ஒன்று’ உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களையும் வைத்து வருகிறார். ஊரடங்கு பிரச்னைகளைத் தவிர எல்லைப் பிரச்னைகளைக் குறித்தும் மத்திய அரசை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கு, மத்திய அமைச்சர்களும் அவ்வபோது தங்களது பதில்களை அளிப்பதோடு அவர்மீதான விமர்சனங்களையும் பதிவு செய்து வருகின்றனர். `லாக்டௌன் பிறப்பிக்கப்பட்டதால்தான் இந்தியாவில் வைரஸ் அதிக அளவில் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது’ என்ற தங்களது நிலைப்பாட்டில் பா.ஜ.க அரசு உறுதியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

`லாக்டௌன், வைரஸூக்குப் பதிலாகப் பொருளாதாரத்தை அழித்துவிட்டது!’-ராகுல் காந்தி உரையாடலில் ராஜீவ் பஜாஜ்
அடுத்த கட்டுரைக்கு