Published:Updated:

`9/11 புதிய அத்தியாயம்; கொரோனா புதிய புத்தகம்!’ - சுகாதார நிபுணருடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்

ராகுல் காந்தி மற்றும் சுகாதார நிபுணர் ஆஷிஷ் ஜா
ராகுல் காந்தி மற்றும் சுகாதார நிபுணர் ஆஷிஷ் ஜா

``இந்த வைரஸ் 12 முதல் 18 மாதங்கள் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் 2021-ம் ஆண்டு வரை இந்த உலகம் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபடப்போவதில்லை.”

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் மத்திய மற்றும் மாநில அரசுகள் திணறி வருகின்றன. கொரோனாவைத் தடுக்க அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாக காங்கிரஸைச் சேர்ந்த ராகுல் காந்தி கடுமையான விமர்சனங்களை எழுப்பி வருகிறார். இதற்கு பா.ஜ.க-வும் பதிலடிகளைக் கொடுத்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பான நெருக்கடி குறித்து ராகுல் காந்தி, ஹார்வர்டு குளோபல் ஹெல்த் இன்ஸ்டிடியூட்டின் இயக்குநர் ஆஷிஷ் ஜாவுடன் கலந்துரையாடியுள்ளார்.

ஊரடங்கு
ஊரடங்கு

பேராசிரியர் ஆஷிஷ் ஜா கலந்துரையாடலில் பேசும்போது, ``வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வைரஸை மனித சமூகம் இதுவரை பார்த்தது இல்லை. எனவே, நாம் அனைவருமே இந்த வைரஸால் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. ஊரடங்கின் மூலம் வைரஸ் பரவலின் வேகத்தைக் குறைக்கலாம். ஆனால், இது பெரும் பொருளாதார ரீதியிலான பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, இந்த ஊரடங்கை கவனமாகக் கையாள வேண்டும். இந்த நேரத்தைப் பயன்படுத்தி அதிகாரிகள் உள்கட்டமைப்புகள் தொடர்பான சோதனைகளைச் செய்ய வேண்டும். பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும்போது மக்களுக்கு நம்பிக்கையை அளிக்க வேண்டும்” என்று கூறினார்.

இந்த வைரஸ் 12 முதல் 18 மாதங்கள் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் 2021-ம் ஆண்டு வரை இந்த உலகம் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபடப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

`லாக்டௌன் தோல்வி; அடுத்து என்ன?’ - மத்திய அரசிடம் கேள்விகளை அடுக்கிய ராகுல் காந்தி

ராகுல் காந்தி பேசியபோது, ``நான் சில அதிகாரிகளிடம் பரிசோதனை எண்ணிக்கைகளை ஏன் குறைக்க வேண்டும் எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், `பரிசோதனைகளை அதிகப்படுத்தினால், மக்களிடம் அச்சம் அதிகளவில் ஏற்படும்’ என்றனர். கொரோனா வைரஸுக்குப் பிறகு வாழ்க்கை மாறப் போகிறது. 9/11 தாக்குதல் புதிய அத்தியாயமாக இருந்தது. ஆனால், கொரோனா ஒரு புதிய புத்தகமாக இருக்கும்” என்று கூறினார். தொடர்ந்து தடுப்பூசிகள் குறித்து ராகுல் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஜா, `` தடுப்பு மருந்துகள் அடுத்த ஆண்டு நிச்சயமாகத் தயாராகிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

ஊரடங்கின்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுபவித்த கஷ்டங்கள் குறித்து ராகுல் காந்தி கலந்துரையாடலில் பகிர்ந்துகொண்டார். நிச்சயமற்ற தன்மை குறித்து தொழிலாளர்களிடம் பயம் நிலவியதாகவும் குறிப்பிட்டார். இதை ஒப்புக்கொண்ட பேராசிரியர் ஜா, அரசாங்கம் இந்த ஊரடங்கில் இருந்து வெளியேற முறையான திட்டங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

முன்னதாக, இந்த மாதத் தொடக்கத்தில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜியுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அப்போது அபிஜித் பானர்ஜி, ``ஊரடங்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்திய அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியிருந்தார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

அதேபோல, பொருளாதார நிபுணர் ரகுராம் ராஜனிடமும் ராகுல் காந்தி கலந்துரையாடலை நடத்தினார். அதில் பேசிய ரகுராம் ராஜன், ``ஊரடங்கால் கடுமையாகப் பாதிப்படைந்த ஏழைகளுக்கு உதவ சுமார் ரூ 65,000 கோடி தேவைப்படும். ஊரடங்கை தளர்த்துவது தொடர்பான செயல்பாடுகளில் நாம் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும். நீண்ட நாள்கள் மக்களுக்கு உணவளிக்கத் தேவையான திறன் இந்தியாவிடம் இல்லை. எனவே, ஊரடங்கை படிப்படியாகத் தளர்த்த வேண்டும்” என்று கூறியிருந்தார்.

`ஏழை மக்களுக்கு உதவ 65,000 கோடி ரூபாய் தேவை!’ - ரகுராம் ராஜனுடன் ஆலோசித்த ராகுல் காந்தி
அடுத்த கட்டுரைக்கு