Published:Updated:

`விமான நிறுவனங்களின் கோழைத்தனமான செயல் இது!’ - குணால் கம்ராவுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய ராகுல்

அர்னாப் - குணால்
அர்னாப் - குணால்

ஸ்டேண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா விமானத்தில் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு, ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஸ்டேண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா, கடந்த 28-ம் தேதி, தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். தற்போது அது பெரும் விவாதமாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், ‘பிரபல தனியார் தொலைக்காட்சியின் மூத்த ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, லக்னோ விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்துள்ளார்.

குணால் கம்ரா
குணால் கம்ரா

அதே விமானத்தில் பயணம் செய்த குணால், அர்னாப்பிடம் சில கேள்விகளை முன்வைக்கிறார். `நீங்கள் கோழையா, தேசியவாதியா. இதை ரோஹித் வெமுலாவுக்காகச் செய்கிறேன். அவர் எழுதிய 10 பக்க தற்கொலைக் கடிதத்தை வாசிக்க நேரம் தேடுங்கள்’ என்கிறார். அதற்கு அர்னாப் எந்த விளக்கமும் கொடுக்காமல், காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு தன் லேப்டாப்பைப் பார்த்துக்கொண்டுள்ளார்.

எல்லா கேள்விகளுக்கும் அர்னாப் மௌனம் காத்ததால், குணால் மீண்டும் தன் இருக்கைக்குத் திரும்புகிறார். இந்த வீடியோவுடன், ‘நான் அர்னாப்பை விமானத்தில் சந்தித்தேன். அப்போது, அவரின் ஊடகம் தொடர்பாக சில கேள்விகளைக் கேட்டேன். அவர் எதற்கும் பதில் அளிக்காததால், வேறு வழியில்லாமல் என் இருக்கைக்குத் திரும்பினேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். குணாலின் பதிவு, ஒரே நாளில் பெரிய அளவில் வைரலானது. அதேநேரம் அவருக்கு எதிராகக் கண்டனங்களும் எழுந்தன.

தொடர்ந்து, ‘விமானத்தில் என் செயலால் அனைத்துப் பயணிகளையும் சிரமப்படுத்திவிட்டேன். அதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ எனக் கூறியிருந்தார் குணால்.

ஆனால், `அர்னாப் கோஸ்வாமியிடம் மட்டும் மன்னிப்பு கேட்க மாட்டேன்' எனத் தெரிவித்திருந்தார். `குணால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என சமூக வலைதளத்தில் சிலர் குரல் எழுப்பினர். இதையடுத்து, `விமானத்தில் தவறாக நடந்துகொண்ட குணால் கம்ரா, இனி ஆறு மாதத்துக்கு விமானத்தில் பறக்க முடியாது’ என்று இண்டிகோ விமான நிறுவனம் அவருக்குத் தடை விதித்தது.

`தயவுசெய்து ஒரு தலைவரைப்போல நடந்துகொள்ளுங்கள்!’ - எம்.பி பிரக்யாவைச் சாடிய விமானப் பயணி #Video

இதைத் தொடர்ந்து ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், கோ ஏர் போன்ற பல விமான நிறுவனங்களும் குணால் கம்ராவுக்கு தங்கள் நிறுவன விமானங்களில் பறக்கத் தடைவிதித்தன. இந்தச் சம்பவமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விமான நிறுவனங்களின் செயலுக்கும் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, “ குணால் கம்ராவுக்கு நான்கு விமான நிறுவனங்கள் விதித்த தடை என்பது ஒரு விமர்சகரை மௌனமாக்குவதற்கு, அரசாங்கத்துடன் தனது செல்வாக்கை அதிகரிக்கும் ஒரு கோழைத்தனமான செயல்” என்று விமர்சித்துள்ளார்.

பின் செல்ல